Published : 13 Nov 2015 12:46 PM
Last Updated : 13 Nov 2015 12:46 PM
‘த்ரிஷா இல்லன்னா நயந்தாரா’ படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்து சர்ச்சையைக் கிளப்பியவர் மானிஷா யாதவ். இந்தப் படம் தவிர அவர் கையில் இருக்கும் ஒரே படம் `ஒரு குப்பைக் கதை’. ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கிய `ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகி வாய்ப்பை மானிஷா யாதவுக்கு கொடுக்க முடிவுசெய்திருந்தாராம் இயக்குநர். ஆனால் `த்ரிஷா இல்லன்னா நயந்தாரா’ படத்தில் முத்தக் காட்சியில் நடித்ததால் மனிஷாவிடமிருந்து அந்த வாய்ப்பு கைநழுவி விட்டதாகச் சொல்கிறார்கள்.
கேரளத்துப் பெண்!
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தாலும் கேரளத்துப் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது எமி ஜாக்சனுக்கு. ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக `சிங் இஸ் பிளிங்’ படத்தில் நடித்த எமி தற்போது இந்தி வாய்ப்புகளை தள்ளி வைத்துவிட்டு, முழு வீச்சில் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
`வேலையில்லா பட்டதாரி’ பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக `தங்கமகன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் இன்னொரு ஹீரோயின் சமந்தா. அடுத்து உதயநிதி ஜோடியாக `கெத்து’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தற்போது அட்லீ இயக்கிவரும் விஜய் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் சமந்தா இருக்கிறார். ஆனால் சமந்தாவைவிட அழகான கேரக்டர் எமி ஜாக்சனுக்குத்தானாம். இந்தப் படத்தில்தான் மலையாளப் பெண்ணாக நடித்து வருகிறார் எமி.
தனுஷைத் தாக்கிய காய்ச்சல்
வெற்றிமாறன் இயக்கியிருக்கும் `விசாரணை’ படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார். தனுஷுடன் இணைந்து `பொல்லாதவன்', 'ஆடுகளம்' வெற்றிப்படங்களை தந்த இவர், தற்போது தனுஷுடன் கூட்டணியை மீண்டும் உறுதி செய்திருக்கிறார். ஏற்கெனவே சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த 'வட சென்னை' படத்தின் கதையில்தான் தனுஷ் நடித்து தயாரிக்க இருக்கிறாராம்.
இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் ஏற்கெனவே வடசென்னை தாதாவாக தனுஷ் நடித்த `மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தனுஷ். இவரும் இரண்டாம் பாகக் காய்ச்சலில் சிக்கிவிட்டார்.
வாரிசு வருகிறார்
புதுமுகங்கள் மகாதேவன் - மெரீனா மைக்கேல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `என்னுள் ஆயிரம்’. இந்தப் படத்தின் மூலம் தனது மகன் மகா என்கிற மகாதேவனை நாயகனாக அறிமுகம் செய்கிறார் நடிகர் டெல்லி கணேஷ். இந்தப் படத்தின் கதை மீதும் மகனின் நடிப்புத் திறமை மீதும் உள்ள நம்பிக்கையால் இந்தப் படத்தை டெல்லி கணேஷே தயாரித்திருக்கிறாராம். இயக்குநர் விஜயின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் படம் இது .
நடிகர் கவுதம்!
‘பிரேமம்’ மலையாளப் படத்தின் வெற்றியால் `நேரம்’ பட நாயகன் நிவின் பாலிக்கு இது செமத்தியான நல்ல நேரம். தமிழில் அதன்பிறகு நடிக்காமல் இருந்த நிவின் பாலியை அடுத்து கவுதம் மேனன் இயக்குவது முடிவாகிவிட்டதாம். அதுவொரு லவ் த்ரில்லர் கதை என்கிறார்கள். இதற்கிடையில் மலையாள இயக்குநர் வினீத் சீனிவாசன் இயக்கவிருக்கும் ‘ஜாக்கோபின்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்’ என்ற மலையாளப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கவுதம் மேனன். இந்தப் படத்தில் கவுதமை ஒட்டவைத்ததே நிவின் பாலிதானாம்.
பிரியும் ஜோடி!
‘உறுமீன்’ படத்தில் நடித்தபோது காதல் கொண்டு கல்யாணம் வரை வந்துவிட்டது பாபி -சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஜோடி. இதற்கிடையில் ஒரு சோகமான காதல் செய்தி ஆந்திரக் கரையிலிருந்து கோலிவுட்டைத் தாக்கியிருக்கிறது. பாகுபாலி நாயகன் பிரபாஸ்- அனுஷ்கா இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பதாக உச்ச ஸ்தாயிலில் கத்திவந்தன ஆந்திர ஊடகங்கள். ஆனால் தற்போது பிரபாஸுக்கு வேறு பெண் பார்த்து திருமணத்தை முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் `இஞ்சி இடுப்பழகி’ படத்தின் உழைப்புக்காக பாரட்டுகளை அள்ளிவரும் அனுஷ்கா, தற்போது ஆழ்ந்த கவலையில் முழ்கியிருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT