Published : 09 Oct 2015 10:06 AM
Last Updated : 09 Oct 2015 10:06 AM
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் அப்புக்குட்டியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கதாபாத்திரத்தின் பெயரால் அறியப்பட்ட அப்புக்குட்டி, ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தற்போது சிவபாலன் என்ற இயற்பெயரோடு தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
உங்கள் குடும்பப் பின்னணியைப் பத்தி சொல்லுங்களேன்...
தூத்துக்குடி மாவட்டத்துல உள்ள நாதன்கிணறுதான் சொந்த ஊர்.
அப்பாவும் அம்மாவும் விவசாயத் தொழிலாளர்கள். ஊர்ல விதவிதமாக் காய்கறிகள் விளையும். வயலே கதின்னு இருப்பாங்க. ஆனா விளைவிக்கிறதை ஆசையா வாங்கிச் சாப்பிடக் கூட வழி இல்லாத நிலை. அப்போ எட்டாவது படிச்சிட்டிருந்தேன். எனக்கு நல்ல சட்டையெல்லாம் வாங்கித் தரமுடியலையேங்கிற கவலை அவங்களுக்கு இருந்துச்சு. அவங்க கவலைப்படுறதைப் பார்த்து எனக்கு மனசு பொறுக்கல.
வீட்டுக்காக ஏதாவது செய்யனும்னு நினைச்சேன். உடனே சென்னைக்குக் கிளம்பிட்டேன். அம்மா சின்னக் குழந்தையைப் போல தரையில் புரண்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க. நான் ஒரே பிள்ள. பதினாறு வயசு. சென்னைக்குப் போறதுக்கு எனக்கு வயசோ விவரமோ பாத்தாதுன்னு நினைச்சாங்க. ஆனா நான் கேக்கல. சென்னைக்கு வந்ததும் எனக்கு அடைக்கலம் தந்தது ஹோட்டல்கள்தான்.
அப்போ நடிக்கணும்ங்கிற ஆசையோட சென்னைக்கு வரலியா?
இல்லவே இல்ல. நல்ல வருமானம் கிடைக்கிற வேலையில சேரணும். வீட்டுக்குப் பணம் அனுப்பணும் அவ்வளவுதான். மாச சம்பளம் கிடைச்சதும் ஆசையா வீட்டுக்கு அனுப்புவேன். ஆனால், என்னைப் பிரிஞ்ச ஏக்கத்துலயே அம்மா இறந்துட்டாங்க. ஏன்டா சென்னைக்கு வந்தோம்னு ஆகிப்போச்சு. அதுக்கு அப்புறம் நீ போய்ப் பொழப்பைப் பாருன்னு அப்பா தைரியம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிவிட்டார். மறுபடியும் ஹோட்டல் வேலை. நான் வேலை செஞ்ச ஹோட்டல்ல ஸ்பெஷல் என்னன்னா... நடிகர்கள், இயக்குநர்கள் சாப்பிட வருவாங்க. டெய்லி ஒரு நடிகரையாவது பார்த்துடலாம்.
என்னோட டேபிள்ல டிபன் சாப்பிட வந்தவர். “தம்பி நான் டைரக்ட் பண்ணிட்டு இருக்க படத்துக்கு உன்னைமாதிரி ஒரு பையனைத் தேடிக்கிட்டிருக்கேன். நடிக்கிறியா?”ன்னு கேட்டார். அவர் அப்படிக் கேட்டதும் ஓடிப்போய் வாஷ்பேஷன் கண்ணாடியில என் முகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என்னை நடிக்கக் கூப்பிட்டவர் “வெளியே வெயிட் பண்றேன் வா”ன்னு கூப்பிட்டார். ஆனால் நான் வெளியே போக முடியல. அவர் எனக்காகக் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டுக் கிளம்பிட்டார். ஒரு பெரிய வாய்ப்பை இழந்துட்ட மாதிரி கவலைப்பட ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் வேலையை விட்டு தைரியமாக நின்னுட்டேன். உதவி இயக்குநரா இருந்த என் நண்பர் ரூம்ல போய்த் தங்கிட்டு அவரோட சேர்ந்தே சினிமா கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி போக ஆரம்பித்தேன்.
உடனே சினிமா வாய்ப்பு கிடைச்சுதா?
மூணு வருஷம் அலைஞ்சேன். முதல்முதல்ல ஒரு டிவி சீரியல்ல ஒரு காட்சியில நடிக்கிற வாய்ப்பு. டைரக்டர் ஆக்ஷன் சொன்னதும் பயங்கரமா சொதப்பிட்டேன். எனக்கு நடிக்க வரலன்னு அப்போதான் உணர்றேன். ரீடேக்லயும் சொதப்புறேன். கூட நடிச்சவர் படக்குன்னு “நடிக்கத் தெரியலன்னா நீயெல்லாம் எதுக்கு இந்தப் பக்கம் வர்றேண்ணு” கேட்டுட்டார். பட்டுன்னு ஸ்பாட்லயே அழுதுட்டேன். அவர்மேல கோபம் கோபமா வந்தது. ஆனால் அவர் சொன்னதுல இருந்த உண்மைய மனசு ஏத்துகிச்சு. ஆசையில வந்தாச்சு. நடிப்புப் பயிற்சி வகுப்புல பணம் கட்டி சேர்ற அளவுக்கு வசதியில்ல.
கிரவுட் தேவைன்னு கூட்டிக்கிட்டு போற பெரிய படங்களுக்கு முதல் ஆளா போவேன். அங்க பெரிய பெரிய நடிகர்கள் எப்படி நடிக்கிறாங்கன்னு கூர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். கிரவுட் ஆர்ட்டிஸ்டுக்கு இங்க என்ன வேலைன்னு துரத்துவாங்க. நான் கேட்க மாட்டேன். தண்ணி, டீ, காப்பி கொடுத்து உதவி செஞ்சுகிட்டே அவங்க நடிப்பை கவனிப்பேன். நடிப்புங்கிறது வெறும் டயலாக் பேசுற விஷயம் கிடையாது. இது உள்ளுக்குள்ளேர்ந்து வந்து விழற உணர்ச்சின்னு புரிஞ்சது. ஒரு கட்டத்துக்கு அப்புறம் ரீடேக் வாங்காம நடிக்க முடியும்கிற நம்பிக்கை வந்துடுச்சு. அதுக்குப் பிறகு செத்தாலும் இனிமே நடிப்பு மட்டும்தான் முடிவு பண்ணிடேன்.
திரும்பிப் பார்க்கவே இல்ல. ஒருநாளைக்கு ஐஞ்சுலேர்ந்து ஏழு சினிமா கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடிப் போவேன். உதவி இயக்குநர்கள், மேனேஜர்கள்ன்னு ஒரு சர்க்கிள் நண்பர்களாக அமைஞ்சாங்க. அவங்க உதவியோட ‘மறுமலர்ச்சி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘கில்லி’ன்னு பல படங்கள்ல ஒரு காட்சியில வர நடிகனா வர ஆரம்பிச்சேன். ‘மறுமலர்ச்சி’ படத்துல ஒரு காட்சியில நடிச்சிட்டு ஆசையா ஊருக்குப் போனேன். அப்பாவை தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போய் நான் நடிச்சிருக்கேன் பாருங்கன்னு காட்டினேன். “ என்னப்பா இது ஒரு சீன்ல வந்தே… அதுக்கப்புறம் வரவே இல்லையேன்னு?” கேட்டார்.
எனக்கும் பொளேர்ன்னு கன்னத்துல அறைஞ்சமாதிரி இருந்துச்சு. ஒரு முழு கேரக்டர்ல நடிச்சாத்தான் எல்லாரும் ஏத்துகிறாங்கன்னு தெரிஞ்சுது. அதுக்கப்புறம்தான் ஒரு சீன் பொழப்பு வேணாம்னு முடிவெடுத்தேன்.
இந்த நேரத்துலதான் ‘வெண்ணிலா கபடிக்குழு’ வாய்ப்பு அமைஞ்சுதா?
ஆமாம். ஒரு டீக்கடை நண்பர் மூலமாக இயக்குநர் சுசீந்திரன் அறிமுகமானர். அவர் இயக்கின ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்துல முதல்ல எனக்கு அப்புக்குட்டி கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கு முடிவானவர் நடிக்க முடியாமல் போனதால், நான் எப்படி நடிப்பேன்னு கூட தெரியாத நிலையில என்னை நம்பி அந்த கேரக்டரை கொடுத்தார் சுசீந்திரன். நான் இப்போ நடிகனாக வெளியே தெரியறதுக்கு அவர்தான் காரணம். அடுத்து ‘குள்ளநரிக்கூட்டம்’ படத்திலயும் நல்ல பெயர் கிடைச்சது.
இதுக்கிடையில சுசீந்திரன் மறுபடியும் என்னைக் கூப்பிட்டார்… ‘அழகர்சாமியின் குதிரை’ன்னு ஒரு படமெடுக்கிறேன். அதுல நீதான் ஹீரோவா பண்றேன்னு” சொன்னார். எனக்குக் கைகால் உதற ஆரம்பிச்சுடுச்சு. உள்ளுக்குள்ள ஒருத்தன் சவால் விட்டான். ஹிட் கொடுத்த டைரக்டர் உன்னை நம்பி இப்படியொரு லீட் ரோல் கொடுக்கிறார். அதை கான்ஃபிடண்டா பண்ணி அவர் உன்மேல வெச்ச நம்பிக்கையக் காப்பாத்துவியான்னு கேட்டான். வெறித்தனமான தைரியத்தோட நடிச்சேன். சுசீந்திரன் அருமையா சொல்லிக்கொடுத்தார். சிறந்த படம், சிறந்த துணை நடிகன்னு ரெண்டு தேசிய விருதுகள் கிடைச்சது.
எனக்கு கிடைச்ச தேசிய விருதுக்கு அப்புறமும் என்னை எல்லாரும் மரியாதையா பார்த்த பார்வையில, பாராட்டுல பலமாசம் பசியே எடுக்கல. இது எல்லாத்துக்குமே சுசீந்திரன்தான் காரணம்.
‘அழகர்சாமியின் குதிரை’க்கு அப்புறம் கதையின் நாயகனாகத் தொடர்ந்து நடிக்கலையே ஏன்?
எனக்கான கதை கிடைக்கலங்கிறது முதல் காரணம். அப்பறம் அப்புக்குட்டிய வெச்சு இந்தக் கதைய எடுக்கலாம்ன்னு தயாரிப்பாளர் வரணும். அப்படி வந்தா கண்டிப்பா பண்ணுவேன். ஆனால் ‘சுந்தரபாண்டியன்’ல பண்ணின மாதிரி இவன் இப்படியும் பண்ணுவானாங்கிற கேரக்டர்ஸ்தான் எனக்குத் தீனியா இருக்கும்.
‘சுந்தரபாண்டியன்’ல 'புவனேஸ்வரன்’னு’ ஒரு குட்டி வில்லனா என்னைப் பார்த்தவங்க ஆடிப்போய் “நீதானாப்பா அது!?” கேட்டு பயந்துகிட்டே ஒரு ஐந்தடி தள்ளி நின்னு ஆச்சரியப்படும்போது நாம கேரக்டரா நடிச்சிருக்கோம்ங்கிற சந்தோஷம் வருது. இப்போ அஜித் சாரோட ‘வேதாளம்’ படத்துல நான் நடிச்சிட்டிருக்கிற கேரக்டரும் கண்டிப்பா ஷாக் கொடுக்கும்.
அஜித் உங்க பெயரையே மாத்திட்டாரே?
பெயரை மட்டுமா மாத்தினார்? ஆளையும் மாத்திட்டாரே… அவரை மாதிரி ஒரு மாஸ் ஹீரோ என்னை மாதிரி ஒரு சின்ன நடிகனைக் கண்டுக்கணும்ன்னு என்ன இருக்கு? அதான் அஜித் சார் கேரக்டர்.
ஒரே தலைமுடி, தாடி, மீசைன்னு ரொம்ப நாளாவே ஒரே மாதிரி நடிக்கிறீங்களே, மாறணும்ன்னு ஆசையில்லையான்னு கேட்டார். இல்லை சார் பல படங்கள் ஒருவருஷம் வரைக்கும் எடுக்குறாங்க. அதனால கண்ட்டினியூட்டி பிரச்சினை. மாத்த முடியலேன்னு சொன்னேன். அதெல்லாம் ஒரு காரணமே இல்லன்னு சொல்லிட்டு என்னோட கெட் அப்பை மாற்றி ஒரு பெரிய போட்டோ சூட் பண்ணினார்.
அந்தப் படங்களைப் பார்த்து எனக்கே என்னைப் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. என்னோட தோற்றத்தை மாற்றினது மட்டுமில்ல சிவபாலன்கிற உங்க அம்மா அப்பா வெச்ச பேரே பவர்ஃபுல்லா இருக்கே.. அப்புறம் எதுக்கு கேரக்டர் பேரு. இனிமே சிவபாலன்கிற பேரையே பயன்படுத்துங்கன்னு சொன்னார். சூட்டிங் ஸ்பாட்ல அஜித் சார் என்னை இப்போ ரொம்ப ரசிக்க ஆரம்பிச்சுட்டார். ரசிகர்களும் என்னோட மாற்றங்களை ரசிப்பாங்கன்னு நம்புறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT