Published : 04 May 2014 12:31 PM
Last Updated : 04 May 2014 12:31 PM

ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: நான் ஒரு ஒப்புக்குச் சப்பாணி!

பம்பரம், சில்லு பாண்டி, சொட்டாங்கி, பூப்பறிக்க வருகிறோம், எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, தென்னை மட்டையில் ஆடிய வயல்வெளி கிரிக்கெட், தாயம், அணிலா குருவியா, ஆடுபுலியாட்டம், திருடன் போலீஸ், கண்ணாமூச்சி, நாடு பிடி என விளையாட்டோடும் விளையாட்டாகவும் வாழ்ந்த காலம் அது.

பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த வகுப்பு பி.இ.டி.வகுப்புதான். வாரத்துக்கு வரும் ஒரே ஒரு உடற்கல்வி வகுப்பையும் சில ஆசிரியர்கள் கடன் கேட்பார்கள், ஆனால் எங்களுடைய பி.இ.டி.வாத்தியார் சொக்க லிங்கம் அவர்கள் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டாலும் கொடுப்பார், வகுப்பை கடனாக கொடுக்கவே மாட்டார். முதலில் கிரவுண்டை மூன்று முறை சுற்றி வர வேண்டும். அப்போதே பலருக்கும், நாக்கு தள்ளிவிடும். இதில் தப்பிக்க பலர், “சார், ஃபீவர்” என்று பம்முவார்கள். “வியர்வை வெளியேறுனாலே. ஜுரமும் வெளியேறிடும், ஓடுடா நல்லா” என்று வியர்க்க வெலவெலக்க ஓடவிடுவார்.

பி.இ.டி.பீரியடில் தான் பசங்களுடைய தலை முடி அளவெடுக்கப்படும். அப்போது, தேவர் மகன் படம் வெளிவந்திருந்தது. ஊருக்குள் பலர் கமலஹாசனாக மாறி நீண்ட தலைமுடியோடு ஃபங்க் ஹேர்ஸ்டைலில் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுடைய முடியை கோதிப் பிடித்து, அடி விட்டு வெளுக்க ஆரம்பித்துவிடுவார். அதற்கு பயந்த சிலர், “சார், கோவிலுக்கு முடி வச்சிருக்கேன் சார்”, என்று ஜகா வாங்குவார்கள். இருந்தாலும் விடாமல், “சாமிக்கு பதினோரு ரூபாய் முடிஞ்சு வச்சிட்டு வெட்டுடா”, என்று விரட்டி விரட்டி வெட்ட வைப்பார். கோகோ, கபடி போன்ற விளையாட்டுகளுக்கு அவரை மிஞ்சும் கோச் யாருமே கிடையாது.

கோகோ போட்டி சிலநேரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நடக்கும். பெண்களிடம் தோற்றால் மானப்பிரச்சினை என்பதால் பசங்க உயிரை கொடுத்து விளையாடுவார்கள், சிலரோ மனசை (பறி)கொடுத்து விளையாடுவார்கள். கோகோவில் ஒரு நபர் ஓடி வந்து அடுத்த நபர் முதுகை தொட்டு ‘கோ’ சொல்லவேண்டும். அவர் சொன்ன வேகத்திற்கு தொடப்பட்டவர் சிட்டாய் பறக்க வேண்டும். ஆனால், பெண்களோடு மோதும் போது மட்டும் தொடுவதற்கு பதில் அடிப்பது, தள்ளி விடுவது என்று தங்கள் ஹீரோயிசத்தை காட்ட ஒவ்வொருவரும் முயற்சி பண்ண, ஆண்கள் அணி மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.

கபடிதான் அப்போதைய வீர சாகச விளையாட்டு. சிலர் மூச்சடக்கி கபடி பாடுவதே ரசனையாக இருக்கும். ‘க...பா....டி...., க....பா...டி...’ என்று அவர்கள் ரெய்டு போவதே அவ்வளவு ரிதமாய் இருக்கும். சிலர், கபட்...கபட்.... என்று மொபெட் ஓட்டுவது போல கபடி பாடுவார்கள். எதிரணியில் எவனுக்காவது கட்டம் கட்டிவிட்டால், அவனை அவுட் ஆக்குவதோடு, கோட்டுக்கு வெளியே அலேக்காக தூக்கி போடுவதும் வழக்கம். அப்போது நடக்கும், சண்டைகளில் கிழியாத சட்டை எங்காவது இருக்குமா என்ன? பனியன் கிழிந்ததுக்கெல்லாம், பஞ்சாயம் வைத்திருக்கிறோம். எங்கள் செட்டில் ‘விசுக்’ முருகராஜாவும், ‘லெஃப்ட்’ முருகப்பனும், கபடியில் கில்லிகள். கபடி சொல்லும்போது மூச்சை விட்டுவிடுபவர்களையும், போங்கு அடிப்பவர்களையும் கண்டுபிடிப்பதில் ராஜா கில்லாடி. என்னிடம் மட்டும் இப்படி விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் மட்டும் இருபதுக்கு மேல் இருக்கும். ஆனால், அதில் பல சப்ஸ்டிடியுட் ஆக சென்று வாங்கியவை, அதாவது ஒப்புக்கு சப்பாணியாக இருந்து வாங்கியதுதான்.

நான் மிகவும் ரசித்து ஆடும் ஒரு ஆட்டம் புத்திக்குண்டு. குழி போட்டு லாக் விளையாடுவது, வட்டம் போட்டு மோத்தி பளிங்கு வைத்து அடித்து ஆடுவது, என ஊருக்கு ஒரு வகை. பேந்தா கோலியில் அடித்து விரட்டப்படும் சின்ன கோலியை நாக்கால், மூக்கால் தள்ளவேண்டும் என்றெல்லாம் நிபந்தனை இருக்கும். அதற்காகவே, பெண்கள் விளையாடும் பகுதிக்கு கோலியை அடித்து விரட்டி அவர்களின் முன்னால் நம் கோலியை நாக்காலும் மூக்காலும், வட்டம் வரை தள்ளிக்கொண்டு வர வைப்பார்கள். தோற்றவர்கள் கடுப்பில், புத்திக்குண்டு குழியில் சிறுநீரை பெய்து வைத்துவிடுவார்கள். அவர்களை தண்டிக்க, கோவிலில் காசெல்லாம் வெட்டி போட்டு பயமுறுத்தியிருக்கிறோம்.(அட கடவுளே!!!)

சில்லு பாண்டியில், சிகரெட் மற்றும் தீப்பெட்டி அட்டைகளை வைத்து எத்தி எத்தி விளையாடுவோம். சிசர்ஸ் அட்டைக்கு மதிப்பு குறைவு, தங்க நிற அட்டைக்கு மதிப்பு அதிகம், வில்ஸ் வெள்ளை அட்டை வைத்திருந்தால் அவன் தான் பிஸ்தா. இதற்காக ரெட்டைக் கிளி தீப்பெட்டி மற்றும் சிகரெட் அட்டைகளை தெருத்தெருவாக பொறக்கி, ‘பொறுக்கி’னு திட்டு வாங்கியது இன்னும் காதில் ஒலிக்கிறது. இந்த அட்டைகளை வட்டத்தில் வைத்து சில்லால் ஏத்துவோம். ஜல்லிக்கட்டு மாட்டுக்கு கொம்பை சீவி சீவி மெருகேற்றுவது போல, எத்து சில்லை செதுக்கி செதுக்கி உருவாக்குவோம். சிலர் ராசியான சில்லை பத்திரமாக, டிரவுசர் பாக்கெட்டில் போட்டபடியே திரிவார்கள்.

கொஞ்சம் ஆபத்தான விளையாட்டுக்களுள் ஒன்று ‘கிட்டிபுள்’, அதாவது ‘கில்லி’. ஒரு ஒன்றரை அடியில் கிட்டியும், 3 அங்குலத்தில் புள்ளும் தான் இதன் தேவை. கருவை, சவுக்கு, பூசனை, உசிலை என்று வகைவகையாக மர குச்சிகளை பயன்படுத்துவோம். எப்போது விளையாண்டாலும் யாருடைய தலையிலாவது அடிபடுவதும், பின்னர் கிட்டியும் புள்ளும் அம்மாவால் அடுப்புக்கு விறகாவதும், ஒரு சில நாட்களில் மீண்டும் புதிய கிட்டி புள்ளு தயார் செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு சமயத்தில்தான் பம்பரம் சீசன் ஆரம்பிக்கும். கொய்யா, கருவேலம், பூவரசம், நவா மரம், என தேடித்தேடி பம்பரக் கட்டையை தேர்வு செய்வோம். பம்பரத்திற்கு ஆணி அடிப்பது, பப்ளிக் எக்சாமில் பிட் அடிப்பதை விட கடினம். அதன் பின் ஆணியின் கொண்டையை தேய்த்து நல்ல கூராக மாற்ற வேண்டும். இப்படி பம்பரம் தயாரானதும், கையில் சாட்டையோடு எங்க வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர். ரேஞ்சுக்கு களம் காண்போம். ஆனால், அபிட் எடுக்க முடியாமல் வட்டத்தில் சிக்கும் முதல் பம்பரம் நம்முடையதாய்தான் இருக்கும்.

ஆக்கர் குத்தும் போதும், லேட் கட்டை அடிக்கும் போதும் ஒரு சிலர் நம்மேல் உள்ள கடுப்பையெல்லாம் பம்பரம் மேல் காட்டி, இரண்டாய் பிளந்தே விடுவார்கள். சில நேரங்களில் பம்பரத்தை தரையில் விடாமல் காற்றிலேயே சுழற்றி கையில் எடுப்போம். கையில் கிறுகிறுக்கும் பம்பரத்தை ஏந்தியபடி குறுகுறுக்கும் பார்வையில், நமக்கு பிடித்த பெண்களை லுக் விடுவது உச்சகட்ட ஹீரோயிசம்.

இப்படி நம் மண்ணோடு இணைந்த, பாரம் பரிய விளையாட்டுக்களை எல்லாம் யாரும் இப்போது ஆடுவதில்லை. ப்ளே ஸ்டேஷனில் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் வைத்து அடுத்த சந்ததி குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது, நிறைய பயமாக இருக்கிறது. கணினியின் முன்னர் கட்டிப் போடப்பட்டுள்ள குழந்தைகளை கட்டாந்தரையில் விளையாட அனுமதிப்பதில்லை. விளையாட்டுகளே, குழந்தைகளின் உலகத்தை தீர்மானிக்கின்றன, குழந்தைகள்தான் நாளைய உலகத்தை நிர்மாணிக்கின்றனர். குழந்தைகளை குழந்தை களாய் வைத்திருக்கும் விளையாட்டுக்கள் மறையும்போது, குழந்தைகளிடம் குழந் தைத்தனம் குறைவதையும் மறுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x