Published : 18 Sep 2015 10:01 AM
Last Updated : 18 Sep 2015 10:01 AM
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். அந்தப் படத்தில் ‘காளையன்’ என்ற வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் கதாபாத்திரம் ஒன்றை இவர் வெளிப்படுத்திக் காட்டியவிதம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு ‘ஜிகர்தண்டா’ படத்தில் ‘ஜிப்ரிஸ் வாத்தியாராக’ வந்து கலங்கடித்தார்.
‘கடல்’, பாண்டிய நாடு’ என ஏற்கும் கதாபாத்திரம் எதுவாயினும் அதுவாகவே மாறிவிடத் துடிக்கும் முனைப்பு கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘பெஞ்ச் டாக்கீஸ்’ திரைப்படத் தொகுப்பில் இடம்பெற்ற ‘தி லாஸ்ட் பேரடைஸ்’ குறும்படத்தில் வசனம் எதுவும் பேசாமல் உடல்மொழியால் மட்டுமே நடித்துக் கவனிக்க வைத்த சோமசுந்தரம் தனது பெயரைத் தற்போது வாலி என மாற்றிக்கொள்ளவிருக்கிறார். ‘கலை முகம்’ பகுதிக்காக அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
நடிப்பின் மீதான ஆர்வம் எப்படி வந்தது ?
நான் நடிக்க வந்தது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கேமரா முன்பு நிற்கும்போதும் எனக்கு அதிசயமாகத் தோன்றுகிறது.
பள்ளி, கல்லூரி நாட்களில் நிறைய சினிமா பார்ப்பேன். மதுரை மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர் திரையரங்குகளில் ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடுவார்கள். அவ்வப்போது சாப்ளின் கார்னிவெல், ஹிட்ச்காக் கார்னிவெல், பிராண்டோ கார்னிவெல் என்று திரையரங்கே திரைப்பட விழா நடந்தும் அளவுக்கு அந்தத் திரையரங்கின் உரிமையாளர் ஒரு தீவிர சினிமா ரசிகர். ஒரே டிக்கெட்டில் காலை தொடங்கி இரவு வரை ஐந்து படங்கள் பார்க்கலாம். வெளியே தெரியாத மதுரையின் இந்த சினிமா கலாச்சாரம் என்னையும் அறியாமல் என்னை பாதித்திருக்க வேண்டும்.
உங்கள் சொந்த ஊர் எது? சென்னைக்கு எப்போது வந்தீர்கள்?
மதுரை இராமேஸ்வரம் சாலையில் இருக்கும் பார்த்திபனூர் எனது அப்பாவின் சொந்த ஊர். அம்மாவின் சொந்த ஊர் பேராவூரணி. இரண்டு ஊர்களிலும் படித்து வளர்ந்தேன். இதனால் மதுரை, தஞ்சை ஆகிய இரண்டு மாவட்டங்களின் பேச்சு வழக்கு, கலாச்சாரம் இரண்டுமே எனக்குள் ஊறிப்போய்விட்டது. எனது பேச்சுமொழி, வசன உச்சரிப்பு இரண்டிலுமே இந்த மண்வாசனை ஒட்டிக்கொண்டுவிட்டது.
மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படித்தேன். டிப்ளமோ முடித்துவிட்டு மதுரை டி.வி.எஸ். ரப்பர் கம்பெனியில் வேலைசெய்தேன். ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வது பிடிக்காமல் போய்விட்டது. இனி ஆபீஸ் போகும் வேலை வேண்டாம் என்று முடிவுசெய்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் வேலையை ராஜிநாமா செய்தேன்.
அந்த சமயத்தில் வார இதழ் ஒன்றில் ‘கூத்துப் பட்டறை’ பற்றி வெளியாகியிருந்த கட்டுரை என்னைக் கவர்ந்தது. ‘கூத்துப் பட்டறை’ என்ற பெயரே என்னைக் கவர்ந்துவிட்டது. உடனே சென்னைக்கு வந்துவிட்டேன். நேரே நாசர் வீட்டுக்குப் போனேன். அவர்தான் ‘கூத்துப் பட்டறை’யின் முகவரியை எனக்குக் கொடுத்து அனுப்பி வைத்தவர். 2002-ல்- ‘கூத்துப் பட்டறை’யில் சேர்ந்தேன். ஆறு மாதம் ஒரு வருடம் வகுப்புகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு காட்டாறுபோல அது என்னை வாரிச் சுருட்டி இழுத்துக்கொண்டது. கூத்துப் பட்டறையில் ஒன்பது ஆண்டுகள் இருந்தேன்.
அவ்வளவு காலம் அங்கே என்ன செய்தீர்கள்?
பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் என்ன பாடத்திட்டம் என்ற ஒரு வரையறை இருக்கிறது. அதைப் படித்து முடித்துவிட்டால் அந்தந்த வருடங்கள் முடிந்துவிடும். ஆனால், கூத்துப் பட்டறையில் அப்படி எதுவும் இல்லை. முழுவதும் சுயமாக உணர்ந்து கற்றுக்கொள்ளும் முறைதான். சிறந்த, முழுமையான மனிதர்களை உருவாக்குவதுதான் கூத்துப் பட்டறையின் நோக்கம் என்று அதன் நிறுவனர் ந. முத்துசாமி சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட நல்ல மனித ஆளுமைகளாக உருவாகிவிட்டாலே நமது கலை மனம் முழுமையைத் தேடத் தொடங்கிவிடும் என்று உணர வைத்தது கூத்துப் பட்டறை.
தவிர, நாடகம் என்பது நடிப்பது மட்டுமல்ல. நான் கொஞ்சம் எழுதவும் செய்தேன். ஒரு முழுநீள நாடகத்தை இயக்கினேன். பல வீதி நாடகங்கள் எழுதி இயக்கினேன். பெரிய நாடகங்களுக்கு நடிகர்கள் தேர்வு தொடங்கி, தயாரிப்பைப் பார்த்துக்கொள்வது, அதே நாடகத்தில் நடிப்பது வரை எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். நாடகம் மீதே ஆர்வம் குவிந்துபோனதால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தவிப்போ விருப்பமோ அப்போது ஏற்படவில்லை.
பிறகு ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் எப்படி வாய்ப்பு அமைந்தது?
‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குநர் குமாரராஜா 2003 முதலே கூத்துப் பட்டறை நாடகங்களைக் காணத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தார். நான் அவருடன் அதிகம் பேசியதுகூட கிடையாது. 2003-ல் நான் நடித்த ‘சந்திரகிரி’ நாடகத்தைப் பார்த்துவிட்டு “ நான் ஒரு படம் எடுப்பேன், அதில் நீங்கள் நடிக்க வேண்டும்” என்றார். சரி ஏதோ பேச்சுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், 2007-ல் அவர் படம் தொடங்கியபோது என்னைக் கூப்பிட்டு ‘காளையன்’ கதாபாத்திரத்துக்கு என்னைத் தேர்வு செய்தார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் வடிவமைத்திருந்த விதம் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நாம் நடிக்கலாம் என்ற எண்ணத்தை எனக்குக் கொடுத்தது. காரணம் அவர் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் தந்திருந்த நிறைகளும் குறைகளும் அவ்வளவு நேர்த்தியாகவும் தனித்ததன்மையோடும் இருந்தன. ‘சந்திரகிரி’ நாடகத்தில் வசனங்களை நான் பேசி நடித்த உச்சரிப்பையும் குரல் த்வனியையும் வைத்தே காளையன் கதாபாத்திரத்துக்கான வசனங்களை எழுதியதாக குமாரராஜா சொன்னார். முதல் வாய்ப்பை வழங்கிய அவரை நான் என்றைக்கும் மறக்க முடியாது.
குமாரராஜா தற்போது எங்கே இருக்கிறார்? ஆரண்ய காண்டத்தில் உங்கள் மகனாக நடித்த சிறுவன் வசந்த் என்ன செய்கிறார்?
சென்னை போரூரில்தான் குமாரராஜா வசிக்கிறார். அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசுவேன். எந்த ஒளிவட்டமும் இல்லாத எளிய இளைஞர் அவர். இரண்டாவதாக அவர் எழுதிய திரைக்கதையின் பட்ஜெட் பெரிது என்பதால் கொஞ்சம் அவகாசம் எடுக்கிறது. ஆனால், விரைவில் தன் அடுத்த படத்தை அறிவிப்பார். வசந்தின் சொந்த ஊர் திருப்பரங்குன்றம். தற்போது ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கிறார். திறமையானவர்.
ஏற்கெனவே நடித்த கதாபாத்திரங்களின் சாயல் இல்லாமல் நடிக்க முடிவது எப்படி?
‘பாண்டிய நாடு’ படத்தில் கறாரும் நேர்மையும் மிக்க வட்டாட்சியராக நடித்ததைப் பார்த்துவிட்டு நீங்கள்தானா என்று கேட்டார்கள். இதில் நடிகனின் பங்கு என்று எதுவும் இல்லை. இந்த இயல்புத் தன்மைக்கு இயக்குநர்களே காரணம். அவர்கள் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வண்ணம் இருக்கிறது. நடிகன் ஏற்கும் கதாபாத்திரத்தின் மீது எந்த வண்ணத்தை இயக்குநர் ஊற்றுகிறாரோ அதை அப்படியே பிரதிபலிக்கும் ‘கலர் பேலட்’தான் நடிகன். அதற்கு மேல் அதில் எந்த ரகசியமும் இல்லை.
கதாநாயகன் ஆகும் ஆசை இருக்கிறதா?
கதையின் நாயகனாக நடிக்க அழைப்புகள் வருகின்றன. மனம் ஏற்றுக்கொள்ளும் கதைகளில் கதையின் நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
நடிப்பைத் தவிர?
குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவதும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பதும் அதிகம் பிடிக்கும். கார்ப்பரேட் ஊழியர்களுக்கும் பயிற்சியளித்துவருகிறேன். இவை தவிர விவசாயம் செய்வதிலும் ஈடுபட்டுவருகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT