Published : 04 Oct 2019 10:13 AM
Last Updated : 04 Oct 2019 10:13 AM
தஞ்சாவூர்க் கவிராயர்
எனது அரை நூற்றாண்டுத் திரைப்பட வாழ்வில் திரை உலகில் எத்தனையோ பேர் வந்தார்கள்; வளர்ந்தார்கள்; வென்றார்கள். ஆனால், எனது குறுகிய காலத் திரை வாழ்வில் நான் கண்டு, கேட்டு, படித்துத் தெரிந்துகொண்டோரைத் தவிர சக கலைஞர்கள் என்று வெகு சிலருடன் மட்டுமே என் நட்பு வட்டம் இருந்தது. நான் ஒரு ‘சீனியர் ஆர்டிஸ்ட்’ என்ற முறையில் திரைத்துரையினர் என்னிடம் மதிப்பும் மரியாதையும் அபிமானமும் வைத்திருந்தனர்.
இன்றும்கூட ஏதாவது படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளும் முன்பாக மென்மேலும் புகழ் அடையும் உத்தேசம் இருப்பதில்லை. ஏற்கெனவே பெற்ற நல்ல பெயரையும் புகழையும் தக்கவைத்துக்கொண்டால் போதும் என்றே பாடுபடுகிறேன். ஒரு கலைஞர் என்ற முறையில் இதை என் கடமையாகவும் கருதுகிறேன்.
மாமியார் கதைகள்
அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளர் என்பதே எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நான் சந்திக்கும் மனிதர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக எழுத்தில் உலவவிடுவது எனக்குப் பிடித்தமானது. அவ்வப்போது பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமாகும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. இவை ‘பானுமதி கதலு’ (பானுமதி கதைகள்) என்ற பெயரிலும் ‘அத்தகாரு கதலு’ (மாமியார் கதைகள்) என்ற பெயரிலும் புத்தக வடிவில் வந்தன. நிஜவாழ்வில் நானும் என் மாமியாரும் குடும்பத்தில் எதிர்கொண்ட சம்பவங்களை மாமியார் கதைகளாக எழுதித் தமிழிலும்கூட இக்கதைகள் பாராட்டைப் பெற்றன.
“மறுபடி மாமியார் கதைளைத் தொடர்ந்து ஏன் எழுதவில்லை?”
“நீங்கள் எழுதுவதாயிருந்தால் சொல்லுகிறேன்” என்றார் பானுமதி.
அவ்வாறே பானுமதி அம்மையார் சொல்லி, சில கதைகள் தமிழ்ச் சஞ்சிகைகளில் வெளிவந்தன. அவரது நகைச்சுவை மெலிதானது, நாசூக்கானது, யாரையும் புண்படுத்தாது. ஆந்திர அரசாங்கம் சாகித்ய அகாடெமி ஒன்றை நிறுவி இலக்கியத்துக்காகப் பரிசுகளை வழங்கியது. சிறந்த கதைகளுக்கான விருது பானுமதிக்குக் கிடைத்தது. அதே ஆண்டு மத்திய அரசு சிவாஜி கணேசனுக்கும் பானுமதிக்கும் பத்மஸ்ரீ விருது அளித்துக் கவுரவித்தது. ஒரே ஆண்டில் இரண்டு விருதுகள். இரண்டுமே பெருமைக்குரியவை. அவரது பன்முகத்திறமைக்கான அங்கீகாரம். பானுமதி எப்போதும் இசையையும் எழுத்தையுமே பெரிதாக மதித்தார்.
கடிதப் பெருமை
“அகில இந்திய பெண் எழுத்தாளர் மாநாட்டுக்கு என்னை அழைத்திருந்தார்கள். எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம், ஒரு நடிகை என்று நினைக்காமல் நானும் அவர்களில் ஒருத்தி என்ற ஸ்தானத்தை அளித்ததே. இதை நான் வாழ்நாளில் மறக்க முடியாது. விஜயலட்சுமி பண்டிட் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். நாடெங்கிலும் இருந்து புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மாநாடு முடிந்து திரும்பியதும் அங்கு எனக்கு அறிமுகமான பெண் எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுத விரும்பினேன். ஆனால், எனக்கிருந்த பல்வேறு வேலை காரணமாக அவர்களுக்குக் கடிதம் எழுத முடியாமல் போய்விட்டது.
நான் கடிதம் எழுதினால் அது சிறுகதை மாதிரி நீளமாக எழுதிவிடுவேன். இரண்டு மூன்று வரிகளில் எழுதத் தெரியாது. நீண்ட கடிதங்களை எழுத எனக்கு அதிக ஆசை. என் வாழ்வில் கடிதங்கள் எழுத முடியாமல் போனதை ஓர் இழப்பாகவே இன்றுவரை நினைக்கிறேன். எங்கள் கிராமத்தில் தபால்காரர் வந்து கடிதக் கட்டைப் பிரிப்பார். குழந்தைகள் எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொள்வோம். எங்கள் வீட்டுக்குத்தான் அடிக்கடி கடிதம் வரும். என் சிநேகிதர்கள் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள். பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து படிக்கும் அவர்களை நான் பொறாமையுடன் பார்ப்பேன்.
படிப்பில் நாட்டம்
எப்போதுமே நான் பள்ளிப் படிப்பைத் தொடராமல் போனது பற்றி வருத்தப்படுவது வழக்கம். மெட்ரிக் படித்த பிறகு பி.ஏ.பி.எல். படிக்க ஆசைப்பட்டேன். நான் திடீரென்று என் கணவரிடம் மெட்ரிக் தேர்வு எழுதும் ஆசையைச் சொன்னேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். மெட்ரிக்கா? அது எதுக்கு இப்போ?
என் மகன் பரணியின் டியூஷன் மாஸ்டரை வரவழைத்தேன். மெட்ரிக் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.1966-ல் ஆந்திரா பல்கலைக்கழகம் வால்டேரில் நடத்திய தேர்வை எழுதினேன்.
தேர்வு என்னவோ சுலபம்தான். ஆனால், இளம் வயது மாணவிகளுக்கு மத்தியில் உட்கார்ந்து தேர்வு பற்றிய அவர்கள் பயங்களையும் கவலைகளையும் பார்த்ததும் பகிர்ந்து கொண்டதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.
அந்தத் தேர்வில் நான் நிறைய மதிப்பெண்களுடன் பாஸ் ஆகிவிட்டேன். எல்லோரும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். என் கணவர் முகத்திலே ஒரு கேலிச் சிரிப்பு. எல்லா ஆண் பிள்ளைகளும் இப்படித்தான் என்று மவுனமாக அவரை நான் முறைத்தேன். 1967-ல் பி.யு.சி. பரீட்சை. அதுவும் பாஸ் ஆனேன்.
இந்தத் தேர்வை எழுத நான் விசாகப்பட்டினம் சென்றபோது என் நாத்தனார் மகள் (அவள் தெலுங்கில் எம்.ஏ. முடித்து பிறகு ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்தாள்) “அத்தை இப்ப படிக்கணும்னு ஏன் இவ்வளவு ஆசைப்படுறீங்க? அதுக்கு என்ன அவசியம்?”
நான் சொன்னேன்.
“பெண்ணே, சிலர் வேலை தேடுவதற்காகப் படிப்பார்கள். வேறு சிலர் அறிவை அபிவிருத்தி பண்ணிக்கொள்ளப் படிப்பார்கள். வேறு சிலர் ஒரு குறிக்கோளை நிறைவேற்ற படிப்பார்கள். படிப்பதால் கிடைக்கும் மரியாதைதான் பெண்ணுக்கு சாஸ்வதம். இருந்தும் நான் படிக்காமல் விட்டுவிட்டேன். அதுக்காகத்தான் இப்ப படிக்கிறேன்” என்றேன்.
“ஐயம் ப்ரவுட் ஆஃப் யூ அத்தை!” என்றதும் பெருமையில் பூரித்தேன் நான். வியந்துபோய் பானுமதி அம்மாவைப் பார்த்தேன். “ok, we will continue tomorrow” என்று நேர்த்தியான ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு எழுந்துபோனார் பானுமதி அம்மையார்.
- தாரகை ஒளிரும்
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT