Published : 16 Jun 2015 10:42 AM
Last Updated : 16 Jun 2015 10:42 AM

திரை விமர்சனம்: ரோமியோ ஜூலியட்

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் (ஜெயம் ரவி) ஜிம் பயிற்சியாளர். பணக்காரனைக் காதலித்து வசதியாக வாழவேண்டும் என்று நினைக்கும் விமானப் பணிப்பெண் ஐஸ்வர்யா (ஹன்சிகா). பணக்காரர் என்று நினைத்து கார்த்திக்கை காதலிக்கிறார். உண்மை தெரியும்போது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி, காதலை முறித்துக்கொள்கிறார். உண்மையாகக் காதலித்த கார்த்திக்கால் அதுபோல உதறித் தள்ள முடியவில்லை.

ஐஸ்வர்யா எதிர்பார்த்ததுபோல பணக்காரத் தொழிலதிபர் அர்ஜுனுடன் (வம்சி கிருஷ்ணா) அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. தன் காதலை இழக்க விரும்பாத கார்த்திக், காதலியை மீட்க வித்தியாசமான உத்தியைக் கையாள்கிறார். அது அவருக்கு கைகொடுத்ததா, இல்லையா என்பது படத்தின் கதை.

காதலை முடிவு செய்வதில் பணம், அந்தஸ்துக்கு பங்கிருக்கிறது என்ற காரணத்தை கதையின் இழையாக எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண். அதை ஐஸ்வர்யா கதாபாத்திரம் வழியாக அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். ‘என் கனவுகளுக்கு நீ பொருத்தமில்லாதவன்’ என்பதை உணர்த்த அவர் பயன்படுத்தும் உத்தி அழுத்தமானது.

ஐஸ்வர்யாவை திரும்பப் பெற அவரையே பயன்படுத்திக்கொள்ளும் கார்த்திக்கின் உத்தி படத்தை ரொமான்டிக் காமெடியாக மாற்றிவிடுகிறது. ஆனால் இதுவே ஓவர்டோஸ் ஆகி ரசிகர்களை நெளியவைக்கிறது. பல காட்சிகள் ஊகிக்கும்படி இருக்கின்றன. விமானப் பணிப்பெண் ஐஸ்வர்யாவை தன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அர்ஜுன் அமர்த்துவது அபத்தம்.

சினிமா தயாரிப்பாளராக வரும் வி.டி.வி.கணேஷ் (படத்திலும் வி.டி.வி.கணேஷ்தான்) கார்த்திக்கின் நண்பர். ஆர்யாவை வைத்து இவர்களது காதலையே அவர் படமாக எடுக்கும் காட்சியில் இதுதாண்டா திரையுலகம் என்று புரியவைத்துவிடுகிறார் இயக்குநர். படத்தில் ரசிக்கக்கூடிய காட்சிகளில் ஒன்று இது.

ஜெயம் ரவி - ஹன்சிகா - பூனம் பாஜ்வா என்று இளைஞர்களைக் கவரும் நட்சத்திரக் கூட்டணியை இயக்குநர் பயன்படுத்திக் கொண்ட விதம், பொழுது போக்கு சினிமாவுக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்துவிடுகிறது.

எல்லாம் சரி.. ஐஸ்வர்யா என்னும் ஒரு பெண் எடுக்கும் முடிவை சாக்காக வைத்து ஒட்டுமொத்தப் பெண்களையும் சலிக்கச் சலிக்கத் திட்டிக்கொண்டே இருப்பது என்ன நியாயம்? ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்ற ரீதியில் வசவுகளைக் கேட்டு காதுகள் புண்ணாகின்றன.

படத்தை உருவாக்கிய குழுவில் ஒரு பெண்கூட இல்லையோ? ஒரு காட்சியில் அந்தப் பெண்ணே பலர் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும்போதும் நாயகன் விடாமல் திட்டி அவமானப்படுத்துகிறார். பெண்களை இழிவுபடுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம்?

ஜெயம் ரவிக்கு மீண்டும் ஒரு காதல் கதை. காதலியை மீண்டும் பெறுவதற்காக அவளையே துன் புறுத்தும் ‘வித்தியாசமான’ பாத் திரம். அதை நம்பகமாகச் சித்தரித் திருக்கிறார்.

எதிர்மறை அம்சம் கொண்ட நாயகியாக ஹன்சிகா அழுத்தமாக நடித்திருக்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் திறமை கூடியிருக்கிறது. பூனம் பாஜ்வாவின் பாத்திரம் பலவீனமானது என்றாலும் நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார். நாயகன், நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளே நகைச்சுவையாக இருப்பதால் முழுநேர காமெடியன் யாரும் இல்லை. அந்தக் குறையை வி.டி.வி.கணேஷ் ஓரளவு போக்குகிறார்.

காதல் என்று யாசித்து நிற்கும்போது உதாசீனப்படுத்திவிட்டு, பிறகு ‘உனக்காக உயிரையும் கொடுப்பேன்’ என்று கெஞ்சும் நாயகன் - நாயகியைச் சுற்றிப் பின்னப்படும் ஓராயிரம் கதைகளை தமிழ் சினிமா பார்த்துவிட்டது. காவியக் காதலர்களின் தலைப்பைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் படத்தின் கதையும் அதே வகை!

படத்துக்கு வலுசேர்த்திருக்கும் அம்சங்களில் இமானின் இசைக்கும், சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவுக் கும் முக்கியப் பங்கு இருக்கிறது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாடல் இனிமை. படத்தொகுப்பாளர் ஆன்டனி இரண்டாம் பாதியில் கத்தரியை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்.

படம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களைச் சிரிக்கவைக்கும் காட்சிகள் உள்ளன. கணிக்கக்கூடிய காட்சிகளும், பெண்களைத் திட்டுவதிலேயே குறியாக இருப்பதும்தான் படத்தை பலவீனமாக்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x