Published : 21 Jun 2015 09:54 AM
Last Updated : 21 Jun 2015 09:54 AM
ஒரு திருட்டு ‘எலி’ மூலம் கடத்தல் கும்பலைப் பொறி வைத்துப் பிடிக்கும் கதை தான் வடிவேலு நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘எலி’.
நகைக்கடையில் திருடுவது, வீடு புகுந்து திருடுவது என்று தன் சகாக்களுடன் களவாடுவதை மட்டுமே தொழிலாக வைத்திருக்கிறார், எலி என்கிற எலிச்சாமி (வடிவேலு). சிகரெட் விற்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட காலகட்டம் அது. அதைக் கடத்திப் பெரிய அளவில் பிசினஸ் செய்து வரும் கடத்தல் கும்பல் தலைவன் நாகராஜை (பிரதாப் ராவத்) பிடிப்பதற்கு காவல்துறை திட்டம் தீட்டிவருகிறது. எந்த வியூகம் வகுத்தாலும் போலீஸாரால் நெருங்க முடியாத கடத்தல்காரன் நாக ராஜுக்குக் காவல்துறையைச் சேர்ந்த யாரோ ஒருவர் தொடர்ந்து உதவி செய்துவருகிறார்.
கடத்தல்காரனைப் பிடித்தே ஆக வேண்டுமென்று காவல்துறைக்கு அமைச்சர் தரப்பில் அழுத்தம் அதிகரிக்கிறது. திருடனைத் திருடனால்தான் பிடிக்க முடியும் என்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கிட்டி யும், காவல்துறை அதிகாரி ஆதித்யாவும் திட்டம் வகுக்கிறார்கள். அந்தக் கடத்தல்காரனைப் பிடிக்கச் சரியான திருடன் ‘எலி’தான் என்று முடிவுசெய்து அவனை உளவாளியாக உள்ளே அனுப்புகிறார்கள்.
காவல் துறையில் சேர வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட ‘எலி’ உளவாளியாக எப்படிச் செயல்பட்டான்? அவனுக்கு வெற்றி கிடைத்ததா?
1960-களின் பின்னணியில் மெதுவாக நகரும் கதை. சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே இருந்தாலும், விறு விறுப்பான காட்சிகளோ திருப்பங்களோ இல்லாமல் நகர்ந்து செல்லும் திரைக்கதை. அறுபதுகளில் வந்த ‘கொள்ளைக்கூட்ட பாஸ், துப்பறியும் போலீஸ்’ பாணியில் அமைந்த காட்சிகள். எளிதாக யூகிக்கக்கூடிய கதை நகர்வு. அங்காங்கே வடிவேலு பாணி நகைச்சுவை. இவற்றை வைத்துக்கொண்டு இயக்குநர் யுவராஜ் தயாளன் சமாளிக்க முயல்கிறார். ஆனால், வடிவேலு பாணியிலேயே சொல்வதானால், ‘முடியல...’
நகைக்கடை திருட்டு, சாகும் வரை உண்ணாவிரதம், பர்ஸ் அடிப்பது, பெண் வேடம் அணிந்துகொண்டு கொள்ளைக்காரனுக்கு உதவுவது என்று வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் எல்லாமே அவர் காமெடியனாக வரும் படங்களின் காமெடி டிராக்கைப் போல உள்ளன. ஒரு படத்தை நகர்த்திச் செல்லும் தன்மை அவற்றில் இல்லை. வடிவேலுதான் நாயகன், நகைச்சுவைதான் இலக்கு என்று முடிவுசெய்துவிட்ட பிறகு கதையுடன் இயல்பாக இணைந்து செல்லும் நகைச்சுவையை உருவாக்கியிருக்க வேண்டும்.
படத்தில் வேறு எதுவுமே இல்லையா என்று கேட்டால், இருக்கிறது. சதா நடனம் ஆடுகிறார். காமெடி வில்லன் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது தலை காட்டுகிறார்கள். வடிவேலு சண்டை போடுகிறார். கடத்தல், ரகசியத் திட்டம், உளவு எல்லாமே வருகின்றன. ஆனால் எல்லாமே சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு…
60-களில் நடந்த கதை என்றால் 60-களில் வந்த படம் போலவே எடுக்க வேண்டுமா? வசனம் பேசும் முறை, காட்சி அமைப்பு, உடைகள் எல்லாவற்றிலும் பழைய படங்களின் சாயல் தெரிகிறது. வடிவேலுவின் பேச்சும் உடல் மொழியும் அப்படியே இருக்கின்றன. ஐடியாக்களில் புதுமை இல்லாததால் பெரிதாக எடுபடவில்லை. தான்தான் உளவாளி என்பது தெரியாமல் மறைப்பதற்காக, வில்லன் முன் சேர்களை எடுத்து அடித்து உடைக்கும் ஒரு காட்சியில் மட்டும் வடிவேலு அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
நாயகி சதாவுக்கு வேலையே இல்லை. அவரைப் போலவே வேலையே இல்லாமல் படத்தில் பல கதாபாத்திரங்கள். கலை இயக்குநர் தோட்டாதரணியின் அரங்கு செட்டிங் அழகு. வித்யாசாகரின் இசையில் வடிவேலு குரல் கொடுத்திருக்கும் ‘கண்ண மேய விட்டியா’ என்ற ஜெயில் பாட்டு மட்டும் ஓ.கே. ஆனால், பின்னணி இசையில் பேரிரைச்சல்.
காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கக்கூடிய கதையை, காமெடியாகவே ஆக்கியிருக்கிறார் இயக்குநர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT