Published : 15 May 2015 01:18 PM
Last Updated : 15 May 2015 01:18 PM
பிரான்ஸ் தேசத்தின் பெருமைக்குரிய நகரம் கான். அந்தக் கடற்கரை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் உலகத் திரைப்பட ஆளுமைகளின் முகங்களே நிறைந்திருக்கும். வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் கடற்கரை மணலில் கலந்துகிடப்பது போன்ற பிரமை ஏற்படும். இதற்குக் காரணமான நிகழ்வு, உலகத் திரைப்பட ரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற கான் சர்வதேசத் திரைப்பட விழா.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ம் தேதி அன்று தொடங்கி உற்சாகமாக நடைபெற்றுவருகிறது. வரும் 24-ம் தேதிவரை இந்தத் திருவிழா நடைபெறும். இந்தத் திரைப்பட விழா ஐரோப்பியப் படங்களுக்கான பெருவெளி. உலக அளவில் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இதழியலாளர்கள் எனத் திரைப்படத் துறையுடன் தொடர்பில் உள்ள அத்துணை பேரும் லட்சக்கணக்கில் ஒன்றுகூடும் மையம் கான். புதிய திரைப்படங்களை வெளியிடத் திரையரங்குகள் உண்டு.
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படங்களைத் திரையீடு செய்ய வழியுண்டு. படங்களின் வியாபாரத்துக்கான வாய்ப்பும் கிடைக்கும். ஏனெனில் உலகம் முழுவதும் திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருப்போரும் இங்கு வருகிறார்கள். அனுதினமும் திரையில் தோன்றித் தங்களை மகிழ்வித்த நட்சத்திரங்கள் தரையில் இறங்கி சிவப்புக் கம்பளத்தில் நடந்துசெல்லும் காட்சியை ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்ந்திருக்கும் உன்னதத் திருவிழா இது. ரசிகர்களும் படைப்பாளிகளும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமைகிறது இந்த விழா.
எப்படித் தொடங்கியது?
இந்தத் திரைப்பட விழா தோன்றிய வரலாறு சுவாரசியம் நிறைந்தது. இரண்டாம் உலகப் போர் மேகங்கள் உலகை அச்சுறுத்திய சூழலில் பிரான்ஸ் நாட்டின் கல்வி, கலைகளுக்கான அமைச்சர் ஜோ ஸ்ஷே (Jean Zay) என்பவரின் ஆர்வத்தாலேயே இந்த விழாவுக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வெனிஸ் திரைப்பட விழாவுக்கு மாற்றாக, சலனப் பட காமிராவைக் கண்டறிந்த லூயிஸ் லூமியர் தலைமையில் 1939-ல் தொடங்கத் திட்டமிடப்பட்டது கான் திரைப்பட விழா.
ஆனால் ஜெர்மனி ராணுவத் துருப்புகள் போலந்து நாட்டில் ஊடுருவியதால், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஓராண்டுக்குப் பின்னரே, அதாவது 1946-ம் ஆண்டு செப்டம்பர் 20-ல்தான் கான் திரைப்பட விழா நடைபெற்றது. 1948,1950 ஆகிய இரண்டு ஆண்டுகளும் நிதிப் பற்றாக்குறை காரணமாக விழா நடைபெறவில்லை. அந்த ஆண்டுகளைத் தவிர ஏனைய ஆண்டுகளில் கான் திரைப்பட விழா செப்டம்பரில்தான் நடைபெற்றது. ஆனால் 1952-ம் ஆண்டுக்குப் பிறகு மே மாதத்தில் அந்த விழா தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
நிறம் மாறிய விழா
தொடக்க கால கான் திரைப்பட விழா கிட்டத்தட்ட ஒரு சமூக நிகழ்வாகத்தான் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்புக் கிடைத்துள்ளது. கலந்துகொண்ட அனைத்துப் படங்களும் விருது பெற்றுள்ளன. ஆனால் நாளாக நாளாக ஊடகக் கவனம் காரணமாக சர்வதேச வரவேற்புப் பெற்ற ஒரு விழாவாக இது மாறிவிட்டது. சினிமா என்னும் கலையை ஊக்குவிப்பதும் சினிமா தயாரிக்கும் நாடுகளிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுமே கான் திரைப்பட விழாவின் முதன்மை நோக்கங்கள்.
அனைத்து நாட்டுத் திரைப்பட ஆளுமைகளுக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் கான் திரைப்பட விழா என்றால் மோகம்தான். ஒருமுறை அங்கு போக வேண்டும் என ஆசைப்படாத திரை ஆர்வலர்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர்களது கவனம் குவிந்திருக்கும். உலகத் திரைப்பட ஆளுமைகளின் கால்களை எல்லாம் நனைத்த பெருமையில் ஆர்ப்பரித்துக்கொண்டேயிருக்கும் இந்தக் கடற்கரையைத் தொட்டுத் தொட்டுத் திரும்பும் அலைகள். சினிமா என்னும் மொழியே இந்த நகரின் காற்றிலே தவழ்ந்துகொண்டிருக்கும். நகரத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சினிமா தொடர்பான உரையாடல்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கும்.
கவனம் பெறும் சமூகப் படம்
இத்தனை பாரம்பரியம் கொண்ட இந்தத் திரைப்பட விழாவில், இந்த ஆண்டு இம்மானுயேல் பெர்காட் (Emmanuelle Bercot) என்னும் பிரெஞ்சுப் பெண் இயக்குநரின் ஸ்டேண்டிங் டால் (Standing Tall) என்பதே தொடக்கப் படமாகத் திரையிடப்பட்டது. அவ்வளவாக அறியப்படாத இந்த இயக்குநரின் படத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதால் சில முணுமுணுப்புகளும் எழுந்தன. ஏனெனில் இந்தத் திரைப்பட விழாவின் தொடக்கப் படம் என்பது பெருமைக்குரிய ஒரு வைபவம்.
அதிரடியான படங்களே எப்போதும் முதலில் திரையிடப்படுவது வழக்கம். த க்ரேட் கேட்ஸ்பை, ராபின் ஹூட், த டாவின்சி கோட் போன்ற அதிரடிப் படங்களுடன் தொடங்கும் இந்த விழா இம்முறை, சமூக அக்கறை கொண்ட அரசியல் படமொன்றைத் திரையிட்டுத் தொடங்கியுள்ளது. 1987-ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் ஒரு பெண் இயக்குநரின் படம் விழாவின் முதலில் திரையிடப்பட்டிருக்கிறது.
பொதுவாக அமெரிக்க இயக்குநர்களுக்கு கான் திரைப்பட விழாவில் பிரதான இடம் மிக அரிதாகவே அளிக்கப்படும். இந்த ஆண்டு கோயன் சகோதரர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்கள்தான் தலைமை நடுவர்கள். இந்த விழாவின் உயரிய விருது சிறந்த படத்துக்காக அளிக்கப்படும், தங்கப் பனை எனச் சொல்லப்படும் பால்மே டி-ஓர் விருது. இது முதன்முதலில் 1955-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பந்தயத்தில் இப்போது இருக்கும் இரு அமெரிக்க இயக்குநருள் ஒருவர் டோட் ஹைனஸ்.
இவரது கரோல், இரு பெண்களுக்கிடையே உள்ள ஒருபால் உறவைச் சித்தரிக்கும் படம். இதன் கதை 1950-களில் நடைபெறும் சம்பவங்களால் புனையப்பட்டது. மற்றொருவர் கஸ் வான் சந்த். இவர் ஏற்கெனவே 2003-ல் எலிஃபெண்ட் என்னும் படத்துக்காக பால்ம் டி-ஓர் விருதைப் பெற்றுள்ளார். இவரது த ஸீ ஆஃப் ட்ரீஸ் என்னும் படமே இந்த ஆண்டில் களத்தில் உள்ளது. வாழ்வு, தற்கொலை போன்றவற்றின் வழியே மரணம் குறித்து ஆழமாக விவாதிக்கும் படம் இது.
இயக்குநர் பெடே டாக்டரின் அனிமேஷன் படமான இன்சைடு அவுட், இயக்குநர் வுடி ஆலனின் இர்ரேஷனல் மேன், இயக்குநர் ஜார்ஜ் மில்லரின் மேட் மேக்ஸ் ஃபரி ரோட் உள்ளிட்ட ஏராளமான படங்கள் ரசிகர்களைப் பரவசப்படுத்தக் காத்திருக்கின்றன. 2013-ல் த கிரேட் பியூட்டி என்னும் படத்துக்கு ஆஸ்கர் விருது வாங்கிய இத்தாலிய இயக்குநர் பௌலோ சொரெண்டினோவின் (Paolo Sorrentino) யூத் என்னும் படமும் இதில் திரையிடப்படவுள்ளது.
இறுதிப் படமாக பிரெஞ்சு இயக்குநர் லூக் ஜேக்கின் ஐஸ் அண்ட் ஸ்கை படம் திரையிடப்படும். வணிகப் படம், கலைப் படம், குறும்படம், ஆவணப் படம் என அத்தனை வகையான திரைப்படங்களையும் ஒருசேர காணும் வாய்ப்பை வழங்கும் கான் திரைப்பட விழா என்னும் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருக்கும் அத்தனை பேருக்கும் இந்த வாரம் என்றென்றும் நினைவில் நிற்கும் வாரமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT