Published : 16 Dec 2013 04:44 PM
Last Updated : 16 Dec 2013 04:44 PM
தேதி : 17 DEC 2013
திரையரங்கம் : WOODLANDS
11:00 am : Inertia
நீங்கள் உங்கள் காதலியை, துணையை எவ்வளவு நேசிப்பீர்கள்? கடலளவு? கடவுள் அளவு?. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும்.. லூசியா அளவு முடியாது. இத்தனைக்கும் பிலிப் அவளை ஏமாற்றி கைவிட்டு ஓடிச் சென்றவன். அந்த பிலிப் இப்போது கிட்னி செயலிழந்து சாகக் கிடக்கிறான். ஒழிந்தான் துரோகி என லூசியா போய்விடவில்லை. நேசிப்பின் இலக்கணம் லூசியா. இசபெல் முனோஸ் என்கிற ஸ்பானிய பெண் இயக்குனரின் படம்.
2:00 pm : What They Don't Talk About Men When They Talk About Love
பேரைச் சொல்லவே அரை நிமிடம் ஆகும் இந்த இந்தோனேசியப் படத்துக்கு உலக அளவில் ஏகப்பட்ட விருதுகள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண் இல்லாதவர்களுக்கு காதல் இருந்தால். டயானா, மாயா - கண் பார்வையற்றவர்கள். டயானா.. அவளைப் போலவே பார்வையற்றவனைக் காதலிக்கிறாள். மாயாவுக்கோ ஒரு டாக்டர் மீது காதல். அந்த டாக்டர் நான்தான் என்று ஒருவன் அவளை ஏமாற்றுகிறான். அவனுக்கு காது கேட்காது. மாற்றுத்திறனாளிகளின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் காதல்.
4:30 pm : Parviz
மஜீத் பர்ஸேகர் இயக்கிய ஈரானியப் படம். நான்கு சுவருக்குள் பாதுகாப்பான வாழ்க்கை, வெளியே சவாலானது. நானூறு வகை மனிதர்களை வெற்றி கொள்ள வேண்டும். சரியான அப்பாக்கோண்டு ( தன் அப்பாவையே சார்ந்திருக்கும் ) அப்பாவி பர்விஸ். இத்தனை நாள் அப்பாவின் கைப்பிடித்து, தோள் அமர்ந்து உலகம் பார்த்தவன், அப்பா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள.. தெருவில் வீசப்படுகிறான். இத்தனை நாள் அப்பாவின் விழிவழியே பார்த்த உலகம் அல்ல இது. இது வேறு உலகம். பர்விஸ் இதை ஜெயிக்க வேண்டாம். இதில் ஜீவித்தாலே போதும். இங்கே கவனிக்க வேண்டியது. பர்விசுக்கு 5 வயதோ 10 வயதோ அல்ல.. 50 வயது. 50 வயதுக் குழந்தையின் கதை.
7:00 pm : Wałęsa, Man of Hope
1970களில் போலந்தில் ஒரு அமைதி புரட்சியை நிகழ்த்தியவர் தலைவர் வாலேசா. அவரின் வாழ்க்கைச் சரித்திரம். இயக்கியிருப்பவர் ரஷ்யாவின் ஆந்த்ரே வாஜ்டா. உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவரின் வயது இப்போது 87. வந்த வேகத்தில் களைத்து காணாமல் போகும் கலைஞர்கள் பூமியில் இன்றும் உழைக்கும் ஓர் இளைஞன்.
*****************************
திரையரங்கம் : WOODLANDS SYMPHONY
10:45 am : Beau Travail
நம்மைவிட திறமையானவர்கள் மீது நமக்கு முதலில் வருவது பொறாமை. கணக்கை போட்டுக் காட்டும் முன் மாணவன் விடை சொன்னால்?. கணக்கு வாத்தியார் அல்ல கலோப்.. ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தரும் அதிகாரி. செண்டைன் அவரிடம் பயிற்சிக்கு வந்த வீரன். பல விதத்தில் அவன் அவரைவிட மேல். குருவை மிஞ்சிய சிஷ்யன். குருவுக்கு பொறாமை. உருப்படுவானா செண்டைன்?. பிரெஞ்சு படம். இயக்கம்: கிளேர் டென்னிஸ்.
1:45 pm : HONEYMOONS
நம்மூர் போலவே அல்பேனியாவிலும், செர்பியாவிலும் காதலுக்கு தடையாக ஜாதி, மதம், அந்தஸ்து போன்ற பல சமாச்சாரங்கள் உள்ளன. அத்தனை தடைகளையும் உடைத்து அல்பேனியாவிலிருந்து ஒரு ஜோடி, செர்பியாவிலிருந்து ஒரு ஜோடி மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடிப் போகின்றன. போகிற இடத்தின் புதுச் சூழல், கலாச்சார சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று விளக்குகிற படம். அல்பேனியா, செர்பியா இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு.
2:00 pm : The Future
ஸ்ரோடின்கரின் பூனை: ஒரு சிறிய நிகழ்வு உங்கள் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் அல்லது போடாது. தாமசும் பியான்காவும் அண்ணன் தங்கை. வசதியான குடும்பம். ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போக.. எல்லாம் தலைகீழ் ஆகிறது. இருவரும் இப்போது நடுத்தெருவில். குடிகாரன் விழுந்தால் தடுமாறி எழுந்து விடுவான். தெளிவானவன் விழுந்தால்.. எழுந்தால்தான் உண்டு. இயக்கம்: ஆலிசியா ஷெர்சன்.
6:45 pm : Rock Bottom
வில்லி ஒரு பத்திரிகையாளன். தொழில் பக்தி. கூடவே பயம். ஏனென்றால் அவனுடைய மேலதிகாரி ஹிட்லரும் இடிஅமீனும் கலந்த கலவை. வில்லி பத்திரிகையோடு நின்றிருக்கலாம்.. ஆனால் வயசுக் கோளாறு. அதனால் காதல் வேறு. 'நீ என்ன காதலன்.. எப்பப் பாத்தாலும் வேலை.. வேலை.. ச்சே!' என காதலி எகிற.. 'வரும் வீக்எண்ட் இருநாட்களும் கண்ணே உன்னோடுதான்' என்கிறான் வில்லி. ஹிடலர் சதி செய்கிறான். அந்த இரண்டு நாளுக்கு அவனுக்கு ஒரு அசைன்மென்ட். வேலையா?.. காதலா?.. வில்லிக்கு இரண்டும் வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்படி அடிப்பது?. இயக்கம்: போர்கர் கன்னர்சென்.
*******************************************************
திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI
11:00 am : EL MUDO
டேனியல் மற்றும் டியாகோ விகா எனும் சகோதரர்கள் இயக்கியது. நேர்மை நற்பண்பு. ஆனால் நேர்மையாளர்கள்?. நிர்வாண ஊரில் கோவணம் கட்டினால்?. செரேகா கோவணம் கட்டியே தீர்வேன் என்கிறான். இதில் அவன் லாயர் வேறு. விடுவார்களா? அவன் லாயர் லைசன்ஸ் ரத்தாகிறது. கார் கண்ணாடி உடைகிறது. தோட்டா தோள்பட்டையை உரசிச் செல்கிறது. இப்பொழுதும் செரேகா திருந்த மறுக்கிறான். அந்த லாயர்.. லையர் ஆகவே கூடாது. ஆவானா? மாட்டானா?
2:00 pm : The Last Floor
ராபர்ட் வைகிவிஸ்- இளம் போலந்து இயக்குனர். இவருடைய முதல் படம் ஒரு திரில்லர். இந்த இரண்டாவது படமும் ஒரு திரில்லர். திரில்லர் படத்தில் இது வேறு வகை. யுத்தப் பின்னணியில் நிகழும் திரில்லர் இது. கேப்டன் தேர்சின்ஸ்கிக்கு தேசமும் குடும்பமும் இரு கண்கள். போரில் ஜெயிக்க வேண்டும். கூடவே குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கடைசித் தளத்தில் அவன் குடும்பத்தைக் கொண்டு போய் மறைத்து வைக்கிறான். அவனால் தேசத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற முடிந்ததா?
4:30 pm : THE SHOOTER
கோபன்கேஹனில் ஒரு டிவி நியூஸ் சேனலில் மியாவுக்கு ரிப்போர்ட்டர் வேலை. அரசாங்கம் ஆர்டிக் கடல் பகுதியில் ஓட்டை மேல் ஓட்டைப் போட, அதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது என்று கவரேஜ் பண்ணி திரும்புவபளுக்கு.. ஒரு போன் வருகிறது. 'அரசாங்கம் ஆர்ட்டிக் கடலில் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் தினமும் ஒருவனைக் கொல்வேன்'. மியாவுக்கு இது ஸ்கூப் நியுஸ். மிரட்டலை அரசுக்கும் சொல்கிறாள். மிரட்டியவன் சொன்னதைச் செய்கிறான். தினம் ஒரு கொலை. அரசாங்கம் மியாவை சந்தேகப்படுகிறது. ஆனால் அத்தனை கொலைகளையும் செய்பவன் ஒரு முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கி வீரன். சுற்று சூழல் நலன் பேசும் ஒரு திரில்லர்.
7:00 pm : A Touch of Sin
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம். இயக்கம்: ஜியா சான்கே. வாழ்வில் விதி விளையாடினால் சரி.. சதி விளையாடினால்?. துரோகம் கழுத்தை நெரித்தால்.. அடுத்த நொடி திமிறி எழுந்தால்தான் வாழ்வு. இது நான்கு பேரின் திமிறல்கள். ஒரு நாடோடி, ஒரு சுரங்கத் தொழிலாளி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருத்தி, அடிக்கடி இடமாற்றப்படும் அலுவலக ஊழியன். நால்வரும் சமூகத்தின் கடைக்கோடி மக்கள். இவர்கள் கழுத்தை நெரிப்பதோ அதிகாரத்தின் கைகள். சுற்றும் வரை பூமி.. போராடும் வரை மனிதன்.
*******************************
திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI
10:45 am : Club Sandwich
பணமும் சரி, பாசமும் சரி.. பங்குக்கு யாரும் வந்துவிடக்கூடாது. முழுமையாக நமக்கே வேண்டும். அதுதான் மனித மனம். 35 வயது பலோமாவுக்கு தன் 15 வயது மகன் ஹெக்டர் மீது அளவில்லாப் பாசம். அம்மாவுக்கு மகன்.. மகனுக்கு அம்மா. இடையில் முளைக்கிறாள் ஜாஸ்மின். ஹெக்டர் வயதுப் பெண். ஹெக்டர் இப்போது அம்மாவை விட்டுவிட்டு அம்மணி பின்னால் ஓடுகிறான். பாவம் அம்மா.. உலகெங்கும் இந்த அம்மாக்களே இப்படித்தான். ஃபெர்னாண்டோ எம்பெகே இயக்கிய மெக்சிகோ நாட்டுத் திரைப்படம்.
4:15 pm : The Tree and The Swing
லண்டன் காலேஜில் எலினா ஓர் ஆசிரியை. விடுமுறையில் ஊர் வருபவளுக்கு அதிர்ச்சி. அப்பாவின் அருகே ஒருத்தி. அவள் அப்பாவின் புது மனைவி. கொஞ்ச நாளில் தெரிந்து விடுகிறது. சித்திகாரி சூழ்ச்சிக்காரி என்று.. சித்தியின் நோக்கம் அப்பாவின் சொத்து. எலினா இப்போது சித்தியுடன் போராடத் தயார். அந்த கால மனோகரா.. இந்தக் கால மெகா சீரியல். இயக்கம்: மரியா டௌசா.
******************************
திரையரங்கம் : INOX 2
10:45 am : Arrows of the Thunder Dragon
குஹென்பென் அண்ணன். ஜம்யங் தங்கை. இருவருக்கும் தாத்தாவிடம் வில் வித்தைப் பயிற்சி. இருவரும் தேர்ச்சி. உடனே குஹென்பென் உலகம் சுற்றக் கிளம்புகிறான். ஜம்யங்கோ சமையல் அறைக்குப் போகிறாள். கல்யாணம் வரை வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணத்துக்குப் பின் கணவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளோ நான் வில்லையும் அம்பையும்தான் பார்ப்பேன் என்கிறாள். அண்ணனுக்கு ஒரு சட்டம்.. எனக்கு ஒரு சட்டமா?. அம்பறாத்தூணி.. அம்புகள் சகிதமாக அவளும் ஒரு குதிரை ஏறி கிளம்பி விட்டாள். படம் முழுக்க இமயமலையின் வனப்பும் வசீகரமும். இயக்கம்: கிரெக் ஸ்னேடான்.
1:45 pm : Coming Forth By Day
ஹலா லாஃப்டி எனும் ஈரானியப் பெண் இயக்குனரின் முதல் படம். சோட் எனும் பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையே கதை. சோட்டின் பெற்றோர் வயதானவர்கள். அம்மாவுக்கு ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை. அம்மா இரவுப் பணிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். நோயாளியான அப்பாவை இரவு முழுக்கப் பார்த்துக் கொள்வது சோட்டின் வேலை. சோட்டின் தனிமையைப் பேசுகிற படம்.
4:15 pm : Sunlight, Moonlight, Earth
ஈரான் மொழிப் படம். அந்த விவசாய கிராமத்துக்கு புது வரவு ஷேக் எனும் ஒரு நாடோடி. ரத்தினக் கம்பளம் விரித்து, அவனை வரவேற்பார் அந்த ஊரில் யாரும் இல்லை. இவனொருத்தன்.. ஏன் வந்தான்? என்கிற எரிச்சல்தான். அந்த ஊர்ப் பெண்ணொருத்தி ஷேக்கை காதலிக்கிறாள். ஆனால் அவளைக் காதலிப்பவனோ வேறு ஒருத்தன். சொந்த ஊர்க்காரனை விட்டுவிட்டு, எங்கிருந்தோ வந்தவனை காதலிப்பதா? ஷேக்குக்கு எதிராக ஒட்டு மொத்த கிராமத்தையே திருப்புகிறான். இதில் ஒரு விசித்திரம்.. ஷேக் ஒருத்தன்தான் அந்த ஊர்க்காரன்.. மற்றவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள். இயக்கம்: அலி கவிட்டான்.
6:45 pm : The Illusion
ஆசைப்படாதே- இது புத்தன். அத்தனைக்கும் ஆசைப்படு- சத்குரு. எப்படியோ.. ஆசைகளால் ஆனது உலகம். கலர்கலரான ஆசைகள். வீடுகட்ட ஆசை, எதிரியை வீடுகட்டி அடிக்க ஆசை. 24 மணிநேர மின்சாரம் பேராசை. பிடித்த மீனை மறுபடியும் ஆற்றுக்குள் விடும் பைத்தியக்கார ஆசை. ஆசைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம். ஓர் இரவு 6pm டூ 6am நீங்கள் நினைத்தது நடக்கும். ஆசைப்பட்டது கிடைக்கும். அதற்கு நீங்கள் ஜெர்மனியில் இருக்கும் அந்த குறிப்பிட்ட பாருக்கு செல்ல வேண்டும். அங்கே உங்கள் கனவை நனவாக்கும் ஒரு மந்திவாதி இருக்கிறான், இதோ இப்போது அந்த பாருக்குள் இருக்கும் அந்த 8 பேரின் ஆசைகளை நிறைவேற்ற அவன் ரெடி. ரோலான்ட் ரீபர் இயக்கிய ஃபாண்டசி ஜெர்மன் படம்.
****************************
திரையரங்கம் : INOX - 3
11.00 am : WAKOLDA
லூசியா புயென்சோ இயக்கிய படம். 1960 பட்டோன்கியா எனும் பாலைவன நகரத்தில் கதை நடக்கிறது. ஒரு அர்ஜென்டினா குடும்பத்திற்கு அறிமுகமாகிற தாமஸ் கொஞ்ச நாளில் நெருக்கமான நண்பன் ஆகிவிடுகிறான். தாமஸ் ஒரு டாக்டர். ஜெர்மனியைச் சேர்ந்தவன். அக்குடும்பத்தின் லிலித் அவனை உருகி உருகிக் காதலிக்கிறாள். ஒரு நாள் உண்மை தெரிகிறது. தாமஸ் ஒரு சைக்கோ கொலைகாரன். உயிர் கொடுக்கும் மருத்துவன் உயிர் எடுத்தால்?. அர்ஜென்டினா நாட்டுப் படம்.
2:00 pm : Cold Bloom
சுனாமிக்குப் பிறகு சுணங்கிப் போன அந்த இரும்புப் கம்பெனியை தூக்கி நிறுத்தப் பார்க்கிறான் கென்ஜி. கருமமே கண்ணாகி ஒரு பல்க் ஆர்டரை பிடித்தும் விடுகிறான். ஆனால் கம்பெனிக்கு இன்னொரு சுனாமி. ஒப்பந்த நாளில் ஒரு விபத்தில் கென்ஜி உயிரை விடுகிறான். அந்த விபத்துக்கு காரணம் அவனது நண்பன் டகூமி. அனைவரும் அவனை வெறுக்கின்றனர். கென்ஜி நினைத்ததை முடித்துக் காட்டினால், இன்று வெறுப்பவர்கள் நாளை நேசிப்பார்கள். முடிவெடுத்துவிட்டான் டகூமி. அடூசி ஃபனாஹசி இயக்கிய ஜப்பான் திரைப்படம்.
4:30 pm : The Priest's Children
ஃபாதர் ஃபாபியன் கட்டை பிரம்மச்சாரி.. கண்ணியமாணவர்.. ஒழுக்கசீலர். ஆனால் அவருக்கு ஓராயிரம் குழந்தைகள். எப்படி?. ஃபாதர் திடீரென பணிமாறுதலில் ஒரு தீவுக்கு வருகிறார். அந்த தீவு அவரின் பொறுப்பு. தீவில் ஒரு குறை. அங்கு குழந்தை பிறப்பு மிகக் குறைவு. வருஷத்துக்கு ஒன்று இரண்டுதான் தேறும். யானை குட்டி போடுவது போல என்பார்கள். யானைக்கு சரி.. ஆனால் தீவுக்கு?. இப்படியே போனால் வளர்ச்சிக்கு சங்கு ஊத வேண்டியது தான்.. தீவு அப்பறம் 'ஊ ஊ.. 'ஆகிவிடும்! அதனால் ஃபாதர் ஒரு முடிவெடுத்தார். அடுத்த வருடம் வதவதவென தீவு முழுக்க குழந்தைகள். தீவுப்பிதா. கொண்டாட்டமான திரைப்படம்.
******************************
திரையரங்கம் : CASINO
11:00 am : Suzanne
'அன்னா கரினீனா'வின் முதல் வரியை லியோ டால்ஸ்டாய் இப்படி எழுதுவார்.. 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட துயரமென ஒன்று உண்டு'. இந்தப் படம் பிரான்சின் மெரெவ்ஸ்கி குடும்பத்தின் சோகங்களை சூசன் எனும் பெண் வாயிலாக பேசுகிறது. சோகம் போலவே காதலும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை காதல். படத்தில் சோகக் கதைகளின் ஊடே சில காதல் கதைகளும். காதல் என்றாலே சோகமும் சேர்த்தித்தான் என்கிறீர்களா? இயக்கம்: கேத்தல் ஃகுல்லேவெரே பிரெஞ்சு பெண் இயக்குனர்.
2:00 pm : Fill The Void
பெண்ணியம் பேசும் மற்றொரு இஸ்ரேல் திரைப்படம். ஷீரா 18 வயதுப் பெண். இஸ்ரேலின் ஹரேடி இனத்தைச் சேர்ந்தவள். ஆச்சார அனுஷ்டானத்தில் கண்டிப்பான குடும்பம். ஷீராவின் அக்கா இறந்து போக, அக்காவின் கணவனுக்கு இனி அவள் மனைவி ஆக வேண்டும். அவர்கள் இனத்தில் அப்படித்தான். அந்த நாட்டில் அப்படித்தான். ஆனால் ஷீராவுக்கு அதில் விருப்பமில்லை. அவள் விருப்பத்தை யார் கேட்டது. அடங்கு- இது அதிகாரத்தின் குரல். முடியாது- இது ஷீராவின் முடிவு. போராடத் துணிந்து விட்ட முதல் பெண் அவள். ஷீராவின் போராட்டம்.. ஹரேடி இனப் பெண்களின் போராட்டமும் கூட. இயக்கம்: ரமா பர்ஸ்டியன் எனும் பெண் இயக்குனர்.
4:30 pm : The Girl And Death
நிகோலாய் ஒரு ரஷ்ய மருத்துவர். 50 வருடங்களுக்குப் பிறகு அவர் அந்த ஹோட்டலுக்கு வருகிறார். அந்த ஹோட்டலில்தான் அவர் எலிசாவை சந்தித்தார். எலிசா.. அவருடைய காதலி. இருவரும் இருவேறு சமூகத்தை சார்ந்தவர்கள். கல்யாணத்தில் முடிய வேண்டிய காதல் எலிசாவின் மரணத்தில் முடிந்தது. நம்மூர் போலவே.. ரஷ்யாவிலும் சமுதாய அந்தஸ்தால் சீரழிந்த ஒரு காதல் கதை. இயக்கம்: ஜாஸ் ஸ்டெல்லிங்.
7:00 pm : Errata
அன்று உலிசஸ்க்கு மோசமான நாள். அவன் காதலியைக் காணவில்லை. தேவதை போல் இருப்பாள். அவள் பெயர் அல்மா. தொலைந்தால் வேறொன்று வாங்கிக்கொள்ள அவள் என்ன செல்போனா?. விலை மதிப்பில்லாத பொக்கிஷம் அவள். தேசம் எங்கும் தேடி அலைகிறான். கடைசியில் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவளோ நான் அல்மா இல்லை பியன்கா.. இருவரும் ட்வின்ஸ் என்கிறாள். உலிசஸ்சின் ஒவ்வொரு அணுவும் சொல்கிறது அவள் அல்மாதான் என்று. அவள் அல்மாவா? இல்லை பியன்காவா? இயக்கம்: ஈவான் வெஸ்கோவோ.
******************************
திரையரங்கம் : RANI SEETHAI HALL
11:00 am : Back To 1942
இந்த வருட ஆஸ்கரின் அயல் நாட்டுப்பட விருதுக்கு சீனாவின் திரைப்படம். 1942ல் நடந்த ஒரு உண்மை வரலாற்றுக் கதை. 'ரிமெம்பரிங் 1942' எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. 1942. குளிர்காலம். சீனாவுக்கும் ஜப்பானுக்குமான போர் முடிந்தபாடில்லை. எங்கே பார்த்தாலும் பசி.. பட்டினி.. வறுமை. உயிர் வாழும் போராட்டத்தில் மனிதர்களுக்கு முன் உயிர்விடுவது.. அன்பு, கருணை, இரக்கம், இன்னபிற குணங்கள். உயிர்ப் பசிக்கு மனிதர்கள் மனிதர்களைக் கொன்று புசித்த கதை. ஃபெங் சியாகேங் இயக்கிய படம்.
7:00 pm : Night Market Hero
டியன் லன் லே இயக்கிய தைவான் திரைப்படம். அது தைவானின் மிகப் பெரிய இரவு மார்க்கெட். நூற்றுக்கணக்கான கடைகள். ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி, பொறாமை, அடிதடி. கொஞ்சமும் ஒற்றுமை இல்லை. ஆனால் ஒரு நாள் கதை மாறுகிறது. இனியும் சண்டையிட்டால் கதை கந்தல் ஆகிவிடும். காரணம்.. மார்க்கெட் அவர்கள் கைவிட்டு போய்விட்டது. அரசாங்கம் அவர்களை நடுத்தெருவுக்கு துரத்தி விட்டது. மனிதன் பலகீனமானவன்.. மனிதர்கள் பலமானவர்கள். ஒற்றுமையே உயர்வு.. நீதி போதனைப் படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT