Published : 23 May 2014 03:11 PM
Last Updated : 23 May 2014 03:11 PM
கடந்த ஏப்ரல் 11 அன்று சித்திரைத் திருநாள் பண்டிகை நாளில், முதலில் மூன்று படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு மூன்று தயாரிப்பாளர்களும் ஆலோசனை செய்து, முதலில் மான் கராத்தே படத்தை 4-ம் தேதியும், நான் சிகப்பு மனிதன் படத்தை 11-ம் தேதியும் தெனாலிராமன் படத்தை 18-ம் தேதியும் வெளியிடுவது என்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வெளியிட்டார்கள். இந்த மூன்று படங்களுமே இன்று வரை நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று படங்களும் ஒரே தேதியில் வந்திருந்தால், மூன்றுக்குமே சரியான விநியோகம் கிடைக்காமல், படங்களுக்கான குறைந்தபட்ச உத்தரவாத வசூலும் கிடைக்காமல், தற்போது கிடைத்துள்ள வசூலில், 30 முதல் 40 சதவீதத்தை இழந்திருக்கும். எனவேதான், நாம் எடுத்திருக்கும் படம் சிங்கம் போல ஒரு பெரிய நடிகரைக் கொண்டிருந்தாலும் அல்லது எதிர்பார்க்கப்படும் படமாக இருந்தாலும், தனியாக வருவதுதான், அப்படத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை முழுமையாக எடுக்க வழி. அதிக வசூல் வேண்டும் என்றால் சிங்கம் சிங்கிளாத்தான் வரணும் என்பது தற்போதைய நிலை.
பத்து வருடங்களுக்கு முன்பு வரை முக்கியப் பண்டிகை நாட்களில், பெரிய நடிகர்களின் 3 அல்லது 4 படங்களும், அடுத்த நிலையில் வியாபாரம் கொண்ட நடிகர்களின் 4 படங்களுமாக 7 முதல் 8 படங்கள் வெளியான தமிழ்நாட்டில், ஏன் இன்று இரண்டு பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் கூட ஒரே தேதியில் வெளியாகக் கூடாது?
நான்கு முக்கியக் காரணங்கள்:
1. எண்ணிக்கைதான் எல்லாமே!
பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய நடிகர் நடித்த படம், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தோராயமான 1,000 அரங்குகளில், 100 முதல் 125 அரங்குகளில், வெளியானாலே அதிகம். ரஜினியின் படையப்பா 1999-ல், முதன்முதலாக, 200 அரங்குகளில் நேரடியாக வெளியானபோது, அது ஒரு சாதனையாகச் சொல்லப்பட்டது. இன்று, ஒரு சிறு முதலீட்டு படம் கூட, 200 அரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. பெரிய நடிகர்கள் நடித்த படம், 350 முதல் 400 அரங்குகள் வரை வெளியாகிறது. இதனுடன், ஒரு நாளைக்கு 3 காட்சிகள் மட்டுமே என்ற நிலையும் மாறி, இன்று 4 காட்சிகள் திரையிடப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் ஒரு புதுப் படம் வெளியான முதல் வாரமே அதைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தகைய வெளியீட்டை ஒவ்வொரு பெரிய நடிகர் நடித்த படமும் அடைய, இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானால் சாத்தியமில்லை. 350 முதல் 400 அரங்குகள் என்ற வாய்ப்பு குறைந்து, 200 முதல் 250 அரங்குகளில் மட்டுமே வெளியாக முடியும். இதனாலேயே ஒரு படத்தின், 30 சதவீத வசூல் பாதிக்கிறது.
2. தொலைக்காட்சிகளின் தூண்டில்
பத்து வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சேனல்கள் 2 அல்லது 3 மட்டுமே. இன்றோ, 8 முதல் 10 சேனல்கள். ஒரு பண்டிகை நாளில், குறைந்தது, 3 படங்களைக் காண்பிக்கும்போது, வீட்டில் இருந்துகொண்டே, 24 முதல் 30 படங்களை (பெரும்பாலானவை சமீபத்தில் வெளியானவை) பார்க்க முடியும். இந்தச் சூழ்நிலையில், மக்களை அரங்குகளுக்கு வரவழைப்பது அத்தனை சுலபம் இல்லை.
3. வசூல் காலத்தின் ஆயுள்
ஒரு சிறந்த, பாராட்டப்படும், பெரிய நடிகரின் படம் 100 முதல் 175 நாட்கள் ஓடி வசூல் செய்யும் நிலை இன்று இல்லை. அனேகப் படங்களின் முதல் வார வசூலானது அப்படத்தின் மொத்த வசூலில், 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கிறது. மேலும் 2 அல்லது 3 வாரங்களில், மீதம் 40 முதல் 50 சதவீதம் வசூல் கிடைத்து விடுகிறது. ஆக இன்று 4 வாரங்கள் மட்டுமே ஒரு படம் அனேக அரங்குகளில் சரியாக ஓடுகிறது. அடுத்தடுத்துப் புதுப்படங்கள் வெளிவருவதால் (வருடத்திற்கு 160 முதல் 170 வரை), பெரிய நடிகர்களின் படமானாலும், 4 வாரங்களுக்கு மேல் ஓட்டும் சூழ்நிலை தற்போது இல்லை. எனவே, முக்கியமான முதல் வார வசூலை இன்னொரு படத்துடன் பிரித்துக்கொள்ளாமல், மொத்தமாக எடுத்துக் கொள்ள, தனியாக வெளிவர வேண்டியது அவசியம்.
4. திரையரங்குகளின் பரம எதிரி
2000-வருடம் வரை, திருட்டு டிவிடி-களின் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை. வீடியோ கேசட்டுகள் வெளியானாலும், அதன் பாதிப்பு கொஞ்சமாக இருந்தது. கடந்த 13 வருடங்களில், தொழில்நுட்ப முன்னேற்றத்தால், ஒரு புதுப்படம் வெளியான அதே நாளில், வலைத்தளங்கள் மூலம் முழுப்படமும் வெளியாகி, அதை இங்கே உள்ள திருட்டு டி.வி.டி தயாரிப்பாளர்கள், பதிவிறக்கம் செய்து, டிவிடி-களாக ரூபாய் 30-க்கு தெருவெங்கும் மறுநாளே தரும் போது, ஒரு புதுப்படத்தை அரங்கில்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற கட்டாயநிலை தமிழ்நாட்டில் இல்லை. எனவே, பிறகு ஒரு புதிய படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு நிலை ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டால் (இரண்டு பெரிய நடிகர்கள் நடித்த படம் ஒரே நாளில் வெளியாவதும்), அப்படங்கள், அநேகமாக இவ்வாறு டி.வி.டி-கள் மூலமாகத்தான் பார்க்கப்படுகின்றன.
இரண்டு எடுத்துக்காட்டுகள்
மேலே கூறிய காரணங்கள் சரியா என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் உங்களுக்குத் தெளிவுபடுத்தும். கடந்த மூன்று வருடங்களில், தமிழ் நாட்டில் மிகப் பெரிய வசூல் செய்த இரண்டு படங்கள் ரஜினியின் எந்திரன் (2010), விஜய்யின் துப்பாக்கி (2012).
எந்திரன், தோராயமாக ரூபாய் 103 கோடி தமிழ்நாட்டில் வசூலித்தது. தமிழ்நாடு முழுவதும், சராசரி டிக்கெட் விலை ரூபாய் 60 என்று எடுத்துக் கொண்டால், அப்படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 71 லட்சம் பேர். இது தமிழ்நாட்டின், மொத்த ஜனத்தொகையான 7.21 கோடியில் (2011), 24 சதவீதம் மட்டுமே.
துப்பாக்கி படம், தோராயமாக, ரூபாய் 80 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்தது. சராசரி டிக்கெட் விலை ரூபாய் 60 என்றால், இப்படத்தை, தமிழ்நாட்டில் பார்த்தவர்கள் 1 கோடியே 33 லட்சம் மட்டுமே. இது, 18 சதவீதம்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரம்மாண்டமான எந்திரன் படத்தை, 24 சதவீத மக்கள் மட்டுமே அரங்குகளில் பார்த்தார்கள் என்பதுதான் நிஜம். அதே போல, அதிகம் பேசப்பட்ட, பாராட்டப்பட்ட துப்பாக்கி படத்தை 18 சதவீத மக்கள் மட்டுமே அரங்கில் பார்த்துள்ளார்கள் என்பதும் நிஜம். அப்படி என்றால், மீதம் உள்ள தமிழ் மக்கள் இப்படங்களை எப்படிப் பார்த்தார்கள்? படம் பார்க்கும் எண்ணம் உள்ள மக்கள் மொத்தத்தில் 60 சதவீதமாவது இருப்பார்கள் என்று எடுத்துக்கொண்டாலும், மீதம் உள்ள 36 சதவீத மக்களும் (எந்திரன் படத்துக்கு), 42 சதவீத மக்களும் (துப்பாக்கி படத்துக்கு) எப்படி இப்படங்களைப் பார்த்தார்கள்?
அடுத்த வாரமும் சில ஆதாரங்களுடன் ஆலோசிப்போம்.
தொடர்புக்கு (dhananjayang@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT