Published : 27 Mar 2015 01:04 PM
Last Updated : 27 Mar 2015 01:04 PM

தேசிய அளவில் சாதித்த புதுமுகங்கள்

தேசிய அளவில் மீண்டும் தமிழ்ப் படங்கள் சாதித்துவிட்டன. புதிய திறமைகள் அதிகமாகச் சாதித்திருப்பது விருது வென்ற படங்கள், கலைஞர்கள் மீது ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறது.

சிம்ஹா மற்றும் விவேக் ஹர்ஷன்

‘ஜிகர்தண்டா' படத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ள பாபி சிம்ஹாவும் இதே படத்தின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை வென்றிருக்கும் விவேக் ஹர்ஷனும் விருதுகளை ஒருசேர படத்தின் எழுத்தாளர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். சிறப்பான உள்ளக்கம் கொண்ட திரைக் கதையும் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரமும் கிடைக்காவிட்டால் இந்த விருதுகள் சாத்தியமில்லை என்று பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார்கள்.

பிரம்மா

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்து வந்த இளைஞர். பிரச்சினைகளை நேரடியாகக் கண்டு கதையாக்குவதிலும் காட்சிப்படுத்துவதிலும் தனித்து தன்னை அடையாளம் காட்டியிருக் கிறார். பள்ளிக் கல்வித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் பற்றி விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாகக் 'குற்றம் கடிதல்' படத்தை எழுதி இயக்கி, சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளார்.

மணிகண்டன்

தமிழ் சினிமாவிலிருந்து உலக சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமான கதையமைப்புடன் உருவாகியிருக்கும் ’ காக்கா முட்டை’ சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருதை வென்றுள்ளது. குடிசைப் பகுதிதியில் வசிக்கும் சிறுவர்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பிட்சாவை உண்பதைக் கனவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது கனவு நனவானதா என்பதைப் பேசும் இந்தப் படம் உலகமயமாதலுக்குப் பிறகான தமிழகத்தின் ஏழ்மையை மறைமுகமாகக் கிண்டலடிக்கிறது. படத்தை இயக்கியிருக்கும் மணிகண்டனுக்கு இது முதல்படம். நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருப்பது அவர்களது ஈட்டுபாட்டைக் காட்டியிருக்கிறது.

உத்ரா

சிறந்த பாடகிக்கான விருதை வென்றுள்ளார். ஏ.எல். விஜய் இயக்கிய 'சைவம்' படத்தில் 'அழகே அழகு’ பாடலைப் பாடியிருந்த பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா. இது இவர் பாடிய முதல் பாடல் என்பது சிறப்பு.

கோ. தனஞ்ஜெயன்

திரையுலகம் குறித்து வரலாற்றினை கராரான தரவுகளுடன் நூலாக்கி ஆங்கில வாசகர்களுக்குத் தருவதில் முனைப்புடன் இயங்கிவரும் கோ. தனஞ்ஜெயனின் எழுத்தில் உருவான 'பிரைட் ஆஃப் தமிழ் சினிமா’ என்ற நூல், ஏற்கனவே மத்திய அரசின் கோவா படவிழாவில் அதிகார பூர்வமான வெளியிடப்பட்டது. தற்போது சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருதை வென்றிருக்கும் இந்த நூல் தமிழகம் தாண்டி கவனம் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x