Published : 06 Feb 2015 12:28 PM
Last Updated : 06 Feb 2015 12:28 PM

லிங்கா: சிக்கலின் பின்னணி

சினிமாவில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஆனாலும், வெற்றி தரும் பரவசத்தைவிடத் தோல்வி கொடுக்கும் படிப்பினைதான் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும். ஆனால், இப்போது சினிமாவில் நடக்கும் கூத்து தனி ரகம். ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதே இங்கே திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

அந்த விதத்தில் சமீபத்தில் வெளியான விஜயின் ‘கத்தி’, ரஜினியின் ‘லிங்கா’, விக்ரமின் ‘ஐ’ ஆகிய மூன்று முக்கியப் படங்களின் வசூல் விவரங்களே பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த மூன்று படங்களின் வெற்றி - தோல்வி பற்றி அலசினால் அது இன்றைய தமிழ் சினிமா வசூல் களத்தின் நிஜமான நிலவரமாக இருக்கும்.

இந்த மூன்று படங்களையும் ஆவலுடன் பார்த்த ரசிகர்களின் மனநிலை என்ன? ‘கத்தி’ வெற்றி; ‘ஐ’ அளவான வெற்றி; ‘லிங்கா’ சுமார்! தங்களுக்கென பெரிய அளவில் ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினி, விஜய் இருவரும். விக்ரம் இயக்குநர் ஷங்கருடன் கைகோத்துக் கொண்டதால் அவருக்கும் ரசிகர்கள் அளவில் சமபலமே.

ஆனாலும், கதை, படமாக்கியவிதம், திரைக்கதையின் சுவாரஸ்யம் என்கிற விதங்களில் ரசிகர்களின் கணிப்பு ‘கத்தி’, ‘ஐ’ படங்களுக்குச் சாதகமாகவும், லிங்காவுக்குப் பாதகமாகவும் அமைந்திருக்கிறது.

அடுத்து விநியோகஸ்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? ‘கத்தி’, ‘ஐ’ ஆகிய படங்கள் எங்களுக்கு லாபம்தான். ‘கத்தி’ படத்தின் வியாபாரம் மற்றும் வசூலை ‘துப்பாக்கி’ படத்தோடு ஒப்பிட்டால் கம்மிதான். ஆனால், படம் வெளியான தீபாவளி தினத்தில் போட்டிக்கு வேறு படங்கள் இல்லை.

ஆகையால் ‘கத்தி’ மிகப் பெரிய வசூல் செய்தது. தயாரிப்பாளருக்கும், எங்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல லாபம். ‘ஐ’ படமும் ஓரளவுக்கு லாபம்தான். காரணம், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் வியாபார உத்தி.

கம்மியான விலைக்கு நேரடியாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கொடுத்தார் ரவிச்சந்திரன். இதனால் அதிகத் திரையரங்குகள் கிடைத்தன. பிரம்மாண்ட வசூல் இல்லை என்றாலும், முதல் போட்டவர்களைக் காப்பாற்றிய படமாக ‘ஐ’ இருந்தது.

‘லிங்கா’ படத்தில் எல்லாமே தலைகீழ். விளம்பரம், வியாபாரம் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அடுத்தடுத்து அந்தப் படம் கைமாறிய விதம்தான் கவலைக்குரியது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கையிலிருந்து ஈராஸ்... அங்கிருந்து வேந்தர் மூவிஸ்... பிறகு விநியோகஸ்தர்கள்... கடைசியாகத் திரையரங்க உரிமையாளர்களுக்குப் போனது படம். ஒவ்வொருவரும் தங்களுக்கு லாபம் பார்க்க நினைத்து, அநியாயத்துக்குப் படத்தின் விலையை ஏற்றினார்கள்.

ரஜினி படம் ரூ.5 கோடி வியாபாரமாகும் ஏரியாவில் விலை ரூ.8 கோடியானது. ஆனால், இந்த அளவுக்கு வசூல் இல்லை. சரியான விலைக்குக் கைமாறியிருந்தாலே இந்த நிலை வந்திருக்காது’ என்பது சில முன்னணி விநியோகஸ்தர்களின் கருத்து.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதரிடம் இது குறித்துக் கேட்டபோது “‘கத்தி’ வெளியான தீபாவளி நாளில் விஷாலின் ‘பூஜை’யைத் தவிர்த்துப் பெரிய போட்டியே இல்லை. சரியான நேரத்தில் வெளியிட்டதும், ஒரு சில சர்ச்சைகளும், நல்ல கதையும் ‘கத்தி’யைக் காப்பாற்றி, முதல் போட்டவர்களையும் காப்பாற்றிவிட்டது.

‘ஐ’ விஷயத்திலும் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஐ’ நஷ்டமான படம்தான். விநியோகஸ்தர்களுக்குத் தோல்வியான படம். என் நண்பர் திருச்சி விநியோக உரிமையை வாங்கினார். 5 கோடி 40 லட்சம் வாங்கியவருக்கு 60 லட்சத்தில் இருந்து 75 லட்சம் வரை இழப்பு வரும் நிலை. பெரிய அளவில் உருவாகியிருந்த எதிர்பார்ப்பை ‘ஐ’ பூர்த்தி செய்யவில்லை.

5 கிலோ தூக்க முடிந்த ஒருவர் தலையில் 10 கிலோவை ஏற்றிவைத்த கதைதான் ‘லிங்கா’ விஷயத்தில் நடந்தது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட விளம்பரத்துக்கும், வியாபாரத்துக்கும் மிகப் பெரிய வசூல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரஜினி படம் என்று உள்ளே வந்தவர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. அதனால் பெரிய நஷ்டம்” என்றார் மிக வெளிப்படையாக.

மொத்தத்தில், கத்தி - லாபம்; ஐ - எதிர்பார்த்த லாபம் இல்லை. லிங்கா - பெரிய நஷ்டம் என்பதுதான் உண்மை நிலவரம். நட்சத்திர நடிகர்கள் நடித்தாலும் படம் பெரிதாகப் போகாததற்கு வியாபார விஷயங்கள் முக்கியக் காரணங்கள் என்றாலும், மக்களை ஈர்க்கும் கதையோ, காட்சிகளோ இல்லாததுதான் உண்மையான காரணம். படத்தின் விளம்பரத்துக்காக யோசிக்கும் நேரத்தில் பாதியாவது கதைக்கு யோசிக்கலாமே என்பதுதான் ரசிகனின் எண்ணம்.

‘உப்பில்லாத உப்புமாவுக்கு ஒன்பது தட்டாம்’ என்பார்கள் கிராமத்தில். பிரம்மாண்ட விளம்பரங்களும், நட்சத்திர அடையாளங்களும் உரிய கதையில்லாமல் தடுமாறும்போது உப்பு இல்லாத உப்புமா கதைதான். நல்ல கதையும், கைக்கு அடக்கமான விற்பனையும், வெளியீட்டு நேரத்தைக் கணிக்கும் நேர்த்தியும் அமைந்தால், நிச்சயம் பெரிய நஷ்டம் என்னும் பேச்சுக்கே இடமிருக்காது என்பது வசூல் களம் கூறும் உண்மை.

ஸ்ரீதர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x