Published : 06 Dec 2013 09:14 AM
Last Updated : 06 Dec 2013 09:14 AM

11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - 2013 : கைது செய்ய வரும் கதாபாத்திரங்கள்!

சந்தடிகள் அடங்கிவிட்ட இரவு நேரம். அந்தக் காவல் நிலையம் பரபரப்பு இல்லாத அமைதியுடன் இருக்கிறது. வாயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும் பெண்ணுக்கு 35 வயது இருக்கலாம். எதிர்ப்படும் மேஜையொன்றின் பின்னால் அமர்த்திருக்கும் பெண் காவல் அதிகாரி, “ நான் உங்களுக்கு உதவலாமா?” என்று கேட்கிறார். உள்ளே நுழைந்த பெண், “என்னைக் கைது செய்யுங்கள்” என்கிறாள். இப்படி அவள் சொல்லும்போது அவளது முகமெங்கும் கடந்த காலத்தின் கறை படிந்த குற்ற உணர்ச்சி படர்கிறது. கொஞ்சமாக அதிர்ச்சி காட்டிய காவல் அதிகாரியின் முன், தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறாள்.

“பத்து ஆண்டுகளுக்கு முன் எனது கணவரின் மரணத்தைப் போலீஸ் விசாரித்தது. இறுதியில் அது தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்துவிட்டது. ஆனால் அது உண்மையல்ல! 8ஆவது மாடியிலிருந்து அவரை நான்தான் தள்ளிவிட்டேன். நாளை என் கணவரின் 10ஆவது நினைவு தினம். தயவுசெய்து என்னைக் கைது செய்யுங்கள்” என்கிறாள். காவல் அதிகாரி ஒரு நடுத்தர வயதுப் பெண்.

“நீ என்ன பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறாயா? முதல் தகவல் அறிக்கையை நான் பதிவு செய்துவிட்டால் நீ மீள முடியாது. இங்கிருந்து போய்விடு. உனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது” என்று அதிர்ச்சி கலந்த குரலில் எச்சரிக்கிறார் அதிகாரி. ஆனால் அந்தப் பெண் கேட்க வேண்டுமே...! தனது கைப்பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுக்கிறாள். அதிகாரியின் தலைக்கு முன்பாக நீட்டுகிறாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.

“இங்கிருக்கும் கம்ப்யூட்டரில் நீங்கள் முதல் தகவல் அறிக்கையை இப்போது பதிவு செய்யத் தொடங்காவிட்டால் நான் இரண்டாவது கொலையைச் செய்யும்படி ஆகிவிடும். அதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்கிறாள். அந்த அதிகாரியின் விரல்கள், மரணம் எய்திய ஒரு குற்றத்திற்கு கம்ப்யூட்டர் கீ போர்டில் உயிரூட்ட ஆரம்பிக்கின்றன.

இப்படி முதல் காட்சியிலேயே உலுக்கும் இந்த பிரெஞ்சுப் படத்தின் தலைப்பு ‘அரெஸ்ட் மீ’. ஜீன் பால் இயக்கத்தில், பிரபல பிரெஞ்சு நட்சத்திரம் சோபி மார்சேயூ, குற்ற உணர்வெனும் சிறையிலிருந்து மீண்டு, சிறை செல்லத் தயாராகும் ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் படம். திரையரங்குகளில் வெளியாகும் முன் உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றுவரும் இந்தக் கதாபாத்திரம், உங்களைக் கைது செய்யச் சென்னைக்கு வருகிறது.

சென்னையில் டிசம்பர் 12 முதல் 19 வரை நடக்கவிருக்கும் சர்வதேசத் திரைப்பட விழா இதுபோன்ற பல்வேறு உலகப் படங்களுடன் மகத்தான திரை அனுபவத்தை அளிக்கவிருக்கிறது. “இதில் திரையிடப்பட இருக்கும் படங்கள் பெரும்பான்மையும் கடந்த இரண்டாண்டுகளில் உலகப் பட விழாக்களில் விருதுகளை அள்ளி வந்திருக்கும் படங்கள்” என்கிறார் 11ஆவது சென்னை சர்வதேசப் பட விழாவின் இயக்குநரும், தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்த விழாவை நடத்திவரும் இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் (ICAF) பொதுச் செயலாளருமான தங்கராஜ்.

ஆஸ்கரை அள்ளிய பர்ஹதி

படங்களின் வகைமைகள் மலைக்கவைப்பவை. இந்தக் கதையைக் கேளுங்கள். அகமது ஓர் ஈரானியன். அழகன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது மணவிலக்கைப் பெறுவதற்காகப் பாரீஸ் நகருக்கு வருகிறான். அவன் மணவிலக்குப் பெறவிருக்கும் மனைவி மேரி பிரிஸ்ஸனைச் சந்திக்கிறான். மேரியும் தோற்றப் பொலிவு கொண்டவள். அவளது முதல் கணவருக்குப் பிறந்த மகள்களையும் அவன் சந்திக்க நேரிடுகிறது. அப்போது சமீர் என்ற அராபியனுடன், மேரி உறவில் இருக்கிறாள். சமீருக்கு ஒரு மகன். சமீரின் மனைவி மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கிறாள். சமீருக்கும் மேரிக்கும் இருக்கும் உறவை, மேரியின் மூத்த மகள் விரும்பவில்லை.

படத்தின் இயக்குநர் அஸ்கர் பர்ஹதியின் முந்தைய படமான ‘எ செபரேஷன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் இப்படம், கடந்த ஆண்டுகான ‘சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்’ என்ற பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. முதல் படத்தில் டெஹ்ரானில் பிரியும் கணவனும் மனைவியும், ‘தி பாஸ்ட்’ படத்தில் பாரிஸில் சந்தித்துக்கொள்கிறார்கள். அகமதும் மேரியும், மணவிலக்கு பெற்றுப் பிரியும்போது இருவரும் பெறும் உணர்வுகளையும், மனப் போராட்டத்தையும், சிதறும் உறவு நிலைகளையும் பர்ஹதி காட்சிப்படுத்திய விதத்துக்காக, நெக்குருகிக் கண்ணீர் சிந்துகிறார்கள் ரசிகர்கள். இந்தப் பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை நீங்களும் உணரக்கூடும்.

காலம் கடந்த பயணம்

உங்களைக் கால எல்லை, தாண்டிக் கூட்டிச் செல்லும் பிரமாண்ட முயற்சிகளையும் இந்த விழாவில் காண முடியும். உதாரணமாக, ‘க்ளவுட் அட்லஸ்’. சில தனிப்பட்ட மனிதர்களின் வாழ்கையில், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஏற்படுத்தும் தாக்கம்தான் கதைக்களம். 1846இல் தொடங்கும் கதை, 1936, 1973 எனப் பயணித்துப் பிறகு 2012 என நிகழ்காலத்தைக் கடந்து, 2144, 2321 என எதிர்காலத்தில் ஊடாடி, எல்லாக் காலங்களிலும் அன்பே உன்னதம் என்பதைக் கண்டடையும் முதன்மைக் கதாபாத்திரங்களுடன் நாமும் வாழும் அனுபவத்தைத் தரக்கூடிய படம் இது. பல நாட்கள் உங்கள் தூக்கத்தைத் தொலைக்கும் அளவுக்கு உணர்ச்சிகளின் வீரியம் உங்களைத் தாக்கும்.

எத்தனை நாடுகள்

மொத்தம் 50 நாடுகளில் இருந்து பங்குபெற இருக்கும் படங்களில் பிரான்ஸ், செர்பியா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தலா 8 படங்கள் கலந்துகொள்கின்றன. ரஷ்யாவின் ‘புதிய அலை’ இயக்குநர்களின் படங்களில் கடந்த இரண்டாண்டுகளில் வெளியான படங்கள் கவனத்தைக் கவர வருகின்றன. ஆசியாவைப் பொறுத்தவரை இலங்கையைத் தவிர, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, எகிப்து, தைவான், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் படங்கள் பங்கேற்கும் அதே நேரம், இதுவரை இல்லாத வகையில், சிங்கப்பூரில் இருந்து ‘ஓளி’ என்ற தமிழ்ப் படம் கலந்துகொள்கிறது என்று தங்கராஜ் குறிப்பிடுகிறார்.

நீதிபதிகள் குழு

வழக்கம்போல இந்தியன் பனோரமா பிரிவில், பல்வேறு இந்திய மொழிகளில் கவனம் பெற்ற 18 புதிய படங்கள் திரையிடப்படுகின்றன. மற்றொரு பக்கம், சிறந்த தமிழ்ப் படங்களுக்கான போட்டியும் சூடுபிடித்திருக்கிறது. போட்டியில் வெல்லும் முதல் மூன்று படங்களுக்கு, முதல் பரிசாக 3 லட்சம், இரண்டாவது பரிசாக 2 லட்சம், மூன்றாது பரிசாக ஒரு லட்சமும் வழங்கிவருகிறார்கள். சிறந்த மூன்று படங்களைத் தேர்வு செய்யும் நீதிபதிகள் குழுவில், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ஸ்ரீப்ரியா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மாநில அரசு கடந்த ஆண்டைப் போலவே தராளமாக நிதியுதவி அளித்திருப்பதில் டிசம்பர் 12 முதல் 19வரை ஏழு நாட்களுக்குச் சென்னை உலக சினிமாவின் மையமாக மாறும் அற்புதம் நிகழ இருக்கிறது.

கூடுதல் தகவல்களுக்கு: www.chennaifilmfest.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x