Last Updated : 13 Jan, 2015 09:52 AM

 

Published : 13 Jan 2015 09:52 AM
Last Updated : 13 Jan 2015 09:52 AM

வெட்டிவேரு வாசம் 18 - வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..?

திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்த காலம். கம்பி வேய்ந்த கேட் கதவு. அடுத்து மூன்றடி அகலத் திண்ணை. அதையொட்டி பித்தளைக் குமிழ்களும், கைப்பிடிகளும் கூடிய தேக்குக் கதவு. அதில் பயணித்து அமெரிக்கா, லண்டன் எல்லாம் போயிருக்கிறேன்.

திண்ணை தாண்டினால் நடை. அங்கே ஆட்டுக்கல் பதிந்திருக்கும். மெருகேறிப் பளபளக்கும் கருப்புக் கருங்கல் குழவி இடைவிடாமல் கடகட வென உருண்டு ஒவ்வொரு வீட்டு இட்லி மாவையும் அரைக்கும்.

நடைக்கு அப்பால் வெயில் தெறிக்கும் முற்றம். அதன் ஓரத்தில் மாநகராட்சி அடி பம்பு. அப்புறம் மொத்த வீட்டுக்குமான ஒரே பம்பாய் கக்கூஸ்.

அது இரண்டு அடுக்கு வீடு. மாடி யில் மூன்று போர்ஷன்கள். ஒன்றில் எங்கள் குடும்பம். இன்னொரு போர்ஷ னில் வீட்டுக்காரரும் அவரது மனைவி யும் வசித்தார்கள். குழந்தை இல்லை. வீட்டுக்காரம்மாவின் தம்பி சோமு சனிக்கிழமைதோறும் சாராய வாசத்துடன் அக்காவிடம் காசு கொடுப்பார். அக்கா வசை பாடியபடி கறிக் குழம்பும், சோறும், மீன் வறுவலும் தையல் இலையை நிறைத்துப் பரிமாறுவாள்.

மூன்றாவது போர்ஷனில் கணவன், மனைவி, மூன்று மகன்கள், மற்றும் மனைவியின் தாய் என்று சற்றுப் பெரிய குடும்பம். மூன்று பிள்ளைகளில் மூத்தவன் மூர்த்தி என்னை விடப் பெரியவன். மூளை வளர்ச்சியற்றவன். வாயோரத்தில் எப்போதும் எச்சில் ஒழுகும். உயிர் தரித்திருக்கும் உணர்வே இன்றி எங்கோ வெறித்தபடி ‘ஆ, ஊ’ என்று கத்திக் கொண்டே இருப்பான்.

கீழே மூன்று போர்ஷன்களில் மூன்று குடும்பங்கள். அந்தக் குடியிருப்பில் என் வயதில் மூன்று தோழிகள். இரண்டு தோழர்கள்.

முற்றத்தில் காலை வேளைகளில் அம்மாக்கள் அடிபம்ப் அடித்து, துணி தோய்ப்பார்கள். உதவுவோம். சனிக் கிழமைகளில் அதே முற்றத்தில் அம்மாக்கள் பையன்கள் தலையில் எண்ணெய் வைத்து சூடுபறக்கத் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.

பிற்பகல் நேரங்களில் அனைத்து சமையல் அறைகளிலும் விறகடுப்புகள் எரிய வீட்டை கருநீலப் புகை சூழ்ந்திருக்கும். ஒரு போர்ஷனில் இறால் குழம்பு மணக்கும். இன்னொரு பகுதியில் பூண்டு ரசம் கொதிக்கும். இன்னொன்றில் மீன் வறுபடும்.

முற்றத்தை ஒட்டி இருக்கும் கூடத்தில் தினம் இரவு 8 மணிக்கு கிராமஃபோன் இயங்கத் தொடங்கும். ‘ஹிஸ் மாஸ்டர் வாய்ஸை’ நினைவுபடுத்தும் அதன் ஒலி பெருக்கிக் குழல் ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்ட’ நாயகியை அறி முகப்படுத்தியது. ‘பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்த’ விநோதத்தைக் கற்பித்தது. ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனை மறக்கக்கூடாது’ என்று அறிவுறுத்தியது.

இரவு நேரங்களில் மொட்டை மாடியில் நட்சத்திரங்களைப் பார்த்துப் படுத்திருப் போம். படித்த கதைகள், கேட்ட கதைகள் எல்லாம் அந்நேரத்தில் ஒலிபரப்பாகும். யார் எப்போது தூங்கிப் போவோம்? தெரியாது!

வியாழனுக்கு வியாழன் மொட்டை மாடியில் இரவில் சாய்பாபா பூஜை நடக்கும். முடிந்ததும் பூந்தி விநியோகம் ஆகும். பத்துப் பதினைந்து முத்துக்களே கிடைக்கும் என்றாலும் அந்த பூந்தியின் சுவை இப்போது எந்த பூந்தியிலும் இல்லை. கோடை விடுமுறை நாட்களில் அதே மொட்டை மாடியில் வற்றல் பிழிவோம்.

வீட்டின் பின் சுவரில் சாணியில் வைக்கோலும், கரித் தூளும் கலந்து வறட்டி தட்டுவோம்.

வீட்டுச் சொந்தக்காரர் வெள்ளி வேலை செய்ப வர். பார்த்தசாரதி கோயில் அருகே பட்டறை வைத் திருந்தார். ஒரு சமயம் ஒரு பெரிய மனிதர் வீட்டுக் கல்யாணத் துக்காகப் பாத்திரங்கள் செய்ய வாங்கி வைத்திருந்த வெள்ளிக்கட்டிகள் மொத்தமும் திருடு போய்விட்டன. ஏகப்பட்ட நஷ்டம். அதனால் வீட்டை விற்க வேண்டிய நிலைமை.

வெடிச் சத்தத்தில் திசைக்கொன்றாகப் பறந்து செல்லும் பறவைகள் போல நாங்களும் எங்கெங்கோ புலம் பெயர்ந்தோம்.

பலவருடங்கள் கழித்து அந்தப் பக்கம் போனேன். வீட்டை வாங்கியவர், ஏதோ காரணத்தால் அதை அப்படியே போட்டு வைத்திருந்தார். மூடாத கதவைக் கண்டதும் நினைவுகள் உந்த, உள்ளே நுழைந்தேன்.

மேலே ஓடுகள் காணாமல் போயிருந்தன. சிதிலமடைந்த வீட்டின் ஒட்டடைப் படலங்களில் சிலந்திகள் நிறைந்திருந்தன. சுவர்களில் செங்கற்கள் அற்றுப் போயிருந்தன. காய்ந்த சருகுகளுக்கு நடுவில் பாம்புச் சட்டை ஒன்று கிடந்தது. சமையலறைகளில் மண் அடுப்புகள் சரிந்து போயிருந்தன. வறட்டி தட்டும் சுவரின் இடுக்குகளில் செடிகள் முளைத்திருந்தன. விளக்கு மாடங்களில் குளவிக் கூடுகள்.

‘இந்த நடையில்தானே ஆற்காட்டு ஆயா சுருட்டு பிடிப்பாள்? இந்தக் கூடத்தில்தானே குடிகாரச் சோமு சிறுநீரில் நனைந்தபடி சுயநினைவின்றிக் கிடப்பார்? நிமோனியா காரணமாகச் செத்துப்போன 10 வயது பத்மினியை இந்த இடத்தில்தானே கிடத்தியிருந்தார் கள்? தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆரை நீக்கிய துக்கத்தில் திராவகம் குடித்து இறந்த தட்சிணாமூர்த்தி அண்ணா, இந்த மூலையில்தானே மைனர் செயினைக் கோத்து உருவாக்குவார்? இந்தத் திண்ணைக்குக் கீழேதானே விளையாட்டு மண் பாண்டங்களை வைத்து சுள்ளி மூட்டி, சோறும், குழம்பும் வைக்கக் கற்றோம்?

மனம் நினைவுச் செதுக்கல்களில் வேதனையுடன் தடுக்கியது. பிரிவென்பது பெருந்துயர்தான்! ஏனென்று தெரியாமல் கீழேயிருந்து மண்ணை கைநிறைய எடுத்துவைத்துக் கொண்டு நின்றேன்.

சாணக்யா திரைப்படம். கதாநாயகன் கணேஷ் (சரத்குமார்) தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு, பல வருடங்கள் கழித்து வருவார். சிதிலமடைந்து கிடக்கும் வீட்டைக் கண்டு கலங்குவார். தோட்டத்து மண்ணை எடுத்து விரல் இடுக்குகள் வழியே அவர் விடும்போது, பழைய நினைவுகள் கிளர்ந்தெழும்.

எண்ணெய் தேய்த்துவிடும் அம்மா, திருநீறு பூசிவிடும் அப்பா, கண்ணாமூச்சி விளையாடும் உடன்பிறந்தவர்கள் என்று பல காட்சித் துணுக்குகள் அவர் நெஞ் சில் அலை மோதும். நெகிழ்ச்சியான ஃப்ளாஷ்பேக் தொடங்கும். அந்தக் காட்சிகளை அமைக்க திருவல்லிக்கேணி வீட்டு அனுபவங்களின் வாசம் உதவியது.

- வாசம் வீசும். . .

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x