Published : 26 Dec 2014 02:44 PM
Last Updated : 26 Dec 2014 02:44 PM
தமிழர்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரும்பாலும் நம்புவது நிலத்தைத்தான். அதனால் நிலம் சார்ந்த கதைகளை இயக்குகிறேன். கள்ளிக் காட்டு தாய்க்கும், ஆழ்வார்பேட்டை தாய்க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதுபோலத்தான் என் படங்களும். மக்களை ஈர்க்கும் படங்களை இயக்குவதில் தான் அதிக விருப்பம். தன் சினிமா மொழிக்கான ஆன்மாவை அப்படியே வார்த்தைகளில் பிரதிபலிக்கிறார் சீனு ராமசாமி. விரைவில் வெளியாக இருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படம் குறித்து சீனு ராமசாமியிடம் பேசினோம்.
காற்று, கடல், நிலம்னு ஒவ்வொரு களத்துலயும் படம் பண்றீங்களே. எப்படிச் சாத்தியம்?
அமையுற கதைகள்தான் களத்தை முடிவு செய்கிறது. இதை நான் திட்டமிட்டுப் பண்ணலை. கதை எந்தக் களத்தைக் கேட்குதோ அதைத் தேர்ந்தெடுக்கிறேன். அவ்வளவுதான். மீண்டும் வேற ஒரு நிலத்தை அடிப்படையா வெச்சு கதை பண்ற சூழல் இருந்தாலும், நிச்சயம் பண்ணுவேன்.
கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல்னு அழகழகா கதைகளுக்கேற்ற தலைப்பு வைக்குறீங்களே?
படத்துக்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லாம தலைப்பு வெச்சா தனியா துருத்திக்கிட்டு தெரியும். கதையின் ஆன்மாவைப் பிரதிபலிக்குற மாதிரி தலைப்பு வைப்பது என் பழக்கம். அப்படிக் கிடைச்ச தலைப்புதான் இடம் பொருள் ஏவல். மூன்று கதாபாத்திரங்கள் மூணு விஷயங்களைத் தேடி பயணிக்கறாங்க. இடம் பொருள் ஏவல்ங்கிறது பழைய சொலவடை. கதைத் தன்மைக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதால இந்தத் தலைப்பை வெச்சிருக்கேன்.
நடிப்புல விஜய் சேதுபதிக்கும் விஷ்ணுவுக்கும் பலத்த போட்டி இருக்குமா?
இடம் பொருள் ஏவல் படத்துல விஜய் சேதுபதி தனித்துத் தெரிவான். விக்ரமுக்கு இணையான நடிகன் விஜய்சேதுபதின்னு 2011-ல சொன்னேன். விஜய் சேதுபதியைத் தூக்கிச் சாப்பிடுற மாதிரி விஷ்ணுவும் சில இடங்கள்ல நடிச்சிருக்கார். இவங்க ரெண்டு பேருமே என் பிள்ளைகள். இனி, விஷ்ணுவையும் தமிழ் சினிமா கொண்டாடும்.
நந்திதா, ஐஸ்வர்யான்னு கேரக்டருக்கேற்ற ஹீரோயின்களைப் பிடிச்சிருக்கீங்க போல?
மலை கிராமத்துப் பெண் வெண்மணியாவே நந்திதாவைப் பார்க்கலாம். பட படன்னு பேசுவாங்க. பல அர்த்தங்கள் தர்ற நந்திதாவின் நடிப்பு சில சமயம் ஆச்சரியத்தைக் கொடுக்கும். நேரம் தவறாமை, தன் வேலையை மட்டும் பார்ப்பதுன்னு அமைதியான பெண்ணா யூனிட் முழுக்க பாராட்டு வாங்கினாங்க.
பட்டிமன்றப் பேச்சாளர் கலைச்செல்வி கேரக்டரில் ஐஸ்வர்யா அவ்வளவு பொருத்தம். ஒரு ஆண் வாழ்க்கையில தோற்றுப்போய் எல்லாமே கைவிட்டுப்போகும்போது அவனுக்குத் துணையா நிக்கிற ஐஸ்வர்யா கதாபாத்திரம் நிச்சயம் உங்களை உலுக்கும். ஐஸ்வர்யா பேசுற ஒவ்வொரு வசனமும் பெண்களைக் கேவலமா பார்க்கிற ஆண்கள் மனசை அசைக்கும்.
கு.ஞானசம்பந்தன் பட்டிமன்ற நடுவராகவே வர்றார். விஜய் சேதுபதியை வளர்ப்பு மகனாகப் பார்க்கும் தாயின் தவிப்பில் வடிவுக்கரசி நடிச்சிருக்கார். அழகம்பெருமாள், இளவரசு, தீப்பெட்டி கணேசன், பால சரவணன்னு பெரிய குழுவே நடிச்சிருக்காங்க.
வைரமுத்து - யுவன் கூட்டணியில் பாடல்கள் இந்த அளவு கவனம் பெறும்னு எதிர்பார்த்தீர்களா?
ரெண்டு பாடல்கள் நிச்சயம் மக்களை ஈர்க்கும்னு எதிர்பார்த்தேன். ஆல்பமே கவனிக்கப்பட்டது மகிழ்ச்சிதான். வைரமுத்து - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியை முதன் முதலா அமைச்சதுக்கான நியாயத்தை ரெண்டு பேரும் செய்திருக்காங்க. இலக்கியத்தரமான வரிகள் தந்த கவிஞருக்கும், இளமையான இசையைத் தந்த யுவனுக்கும் நன்றி சொல்லணும்.
ஆனா, யுவன் இசை இளையராஜா இசையின் சாயலோட இருக்கறதா சொல்லப்படுகிறதே?
40 வருடங்கள்ல ராஜா சார் இசையைத் தவிர்க்க முடியாது. அந்தச் சாயல் இல்லாம எந்த இசையமைப்பாளரும் வர முடியாது. இளையராஜா சாயல்ல யுவன் இசை இருக்குன்னு சொன்னா அது சந்தோஷம்தான்.
இணையதளங்கள்ல பாடல்கள் லீக் ஆச்சே. இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
இது வழிப்பறி மாதிரி இருக்கு. திருட்டுப் பொருள், தரமற்ற பொருளை மக்கள் எப்பவும் விரும்ப மாட்டாங்க. அதே மாதிரி இந்தத் தப்பான செயல்களை மக்கள் புறக்கணிக்கணும். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது.
தமிழ் சினிமாவின் போக்கைக் கவனிக்கிறீர்களா?
சின்ன படங்கள், கதையம்சமுள்ள படங்கள் தியேட்டரை அடைவதற்காக நடத்தும் போராட்டம் வருத்தம் அளிக்குது. மலையாளத்தில் ஒரு புதுப்படம் நல்ல படமாக இருந்தால் மம்முட்டி, மோகன்லால், திலிப் போன்ற பெரும் நடிகர்கள் தாமாக முன்வந்து அந்தப் படங்களை அடையாளப்படுத்துகிறார்கள். அந்த மனசும் தங்களுக்கு அடையாளம் கொடுத்த கலையைக் காப்பத்தணுங்கிற துடிப்பும் இங்கேயும் வரணும்.
ஏழு வருடங்கள்; நாலே படங்கள் - போதுமா?
வெறுமனே படம் பண்ணணும்னு நான் நினைக்கமாட்டேன். நல்ல கதை, கதையை விரும்புற தயாரிப்பாளர், கூட்டணின்னு எல்லாம் சரியா அமையணும். அப்படி அமையும்போதுதான் அர்த்தபுஷ்டியான படங்கள் பண்ணா முடியும். அதுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது. ஆனா, அர்த்தமுள்ள படங்கள் பண்றோம்ங்கிற திருப்தி எனக்குப் போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT