Published : 12 Dec 2014 06:14 PM
Last Updated : 12 Dec 2014 06:14 PM

‘3 டி’யில் உறுமிய டயனோசர்

முதலில் இரு பரிமாண அனிமேஷன் படங்கள். அதாவது 2டி-யில் கதாபாத்திரங்களின் செயல்களையும், பின்னணிக் காட்சிகளையும் கையால் வரைந்து உருவாக்கிய செல் அனிமேஷன் அது. அடுத்து ஸ்டாப் மோஷன் அனிமேஷன். பொறுமையாக ஒவ்வொரு பொருளையும், கதாபாத்திரப் பொம்மைகளையும் நகர்த்தி நகர்த்தி உயிர் கொடுக்க வேண்டிய கடும் உழைப்பைக் கோரிய உத்தி.

இந்த ஸ்டாப் மோஷன் உத்தியைப் பயன்படுத்தியே கிங்காங் படங்கள் முதல் ஃபெண்டாஸ்டிக் மிஸ்டர் பாக்ஸ்வரை வந்து புகழையும் மில்லியன்களில் டாலர்களையும் அள்ளின. ரே ஹேரி என்ற அனிமேஷன் படைப்பாளியின் தளராத ஊக்கத்தால் ஸ்டாப் மோஷன் அனிமேஷன் அகிலம் முழுதும் புகழ்பெற்றுப் பரவியது.

ஸ்டாப் மோஷன் உத்தியே டிஜிட்டல் யுகத்தின் அடுத்தகட்ட அனிமேஷன் புரட்சியாக அமைந்த 3டி அனிமேஷனுக்கு வீரிய விதையாக அமைந்தது. கம்ப்யூட்டரை முழுமையாகப் பயன்படுத்தி அனிமேஷன் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் அற்புதம் உருவானது. அதன் முதல் முழுமையான வீச்சாக அமைந்தது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம். மனிதகுல வரலாற்றுக்கு முன் வாழ்ந்த டைனோசர் விலங்குகளை உயிருடன் கொண்டுவந்து நிறுத்தியது 3டி அனிமேஷன்.

முதலில் ஜூராசிக் பார்க் படத்தை லைவ் ஆக்‌ஷன் படமாக எடுக்கத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கினார் ஸ்பீல்பெர்க். முதலில் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ உதவியுடன் அனிமேடிரானிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட டயனோசர் பொம்மைகளை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்தினார். ஆனால் அதில் போதிய உயிரோட்டம் இல்லாமல் அது பொம்மை உணர்ச்சியைக் கொடுத்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்ட ஸ்பீல்பெர்க், தற்காலிகமாகப் படத்தை நிறுத்திவிட்டு, விஷுவல் எஃபெக்ட் கலைஞர்களை நாடி சரியான தீர்வு கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தார்.

அப்போது ஸ்பீல்பெர்க்கிடம் சிக்கியவர்தான் ‘ஜூமாஞ்சி’, ‘தி மாஸ்க்’ படங்களுக்கு 3டி முறையில் விஷுவல் எஃபெக்ட் செய்து வெற்றிகண்டிருந்த ஸ்டீவ் வில்லியம்ஸ். இவர் தனது சகாவான மார்க் டிபேவுடன் இணைந்து, டீரெக்ஸ் டயனோசர்கள் நடந்துசெல்லும் காட்சியை 3டி மூலம் உருவாக்கி உயிரோட்டத்துடன் அசைத்துக் காட்டியதில் ஸ்பீல்பெர்க் அசந்துபோய் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

கம்ப்யூட்டருக்குள் இருக்கும் 3 டி உருவங்களை மவுஸின் உதவியுடன் நகர்த்திய நிலையை மாற்றிக் காட்டியவர் பில் திபேத். பொம்மலாட்டத்தன்மை கொண்ட ஓர் எலும்புக்கூட்டை அசைத்து கம்ப்யூட்டருக்குள் பல புள்ளிகளை நகர்த்திக் காட்டினார். அந்தப் புள்ளிகளை இணைத்தால் அது உருவமாக நகரும். ஏற்கனவே வரைந்து உருவாக்கப்பட்ட ஓர் உருவத்தில் அந்தப் புள்ளிகளைப் பொருத்திய அவர், அதே பொம்மலாட்ட முறையில் வெளியேயிருந்து அசைத்து அதை ஆடவும் பாடவும் வைத்தார்.

அவரது இந்த உத்திதான் பின்னாட்களில் வளர்ந்து ‘மோஷன் கேப்ஸரிங்’ ஆக வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு நடிகனை நான்கு புறங்களிலிருந்தும் இன்ப்ரா ரெட் காமிரா மூலம் படம்பிடித்தால் அந்த அசைவுகளும் பிம்பங்களும் கம்ப்யூட்டர் திரையில் புள்ளிகளாகப் பதிவாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் நவீன வடிவமே, அசையும் நடிகனின் செயல்களை இம்முறையில் படம்பிடித்து அதை அசையாத உருவத்துக்குக் கொடுப்பது. ரஜினி ஃபெர்பாமென்ஸ் கேப்சரிங் முறையில் நடித்துக் கொடுத்த ‘கோச்சடையான்’ 3டி அனிமேஷன் முறையில் உருவானது.

கோச்சடையானின் தரம் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘டாய் ஸ்டோரி’ 100 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது மட்டுமல்ல, 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தையே புரட்டிப்போட்டது! அது எப்படி என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x