Published : 04 Aug 2017 11:43 AM
Last Updated : 04 Aug 2017 11:43 AM
‘‘டீ
கடையில் நின்னு டீ ஆத்துறப்போகூட அதில ஆர்வம் இருந்தாதான் அந்த வேலை சரியா இருக்கும். கலை இயக்குநர் வேலையும் அப்படித்தான். ஆர்வம் ரொம்பவும் முக்கியம். நம்மைச் சுத்தி நடக்கும் பல விஷயங்கள கூர்ந்து கவனிக்கணும். அதை மூளைக்குள்ள சேகரிக்கணும். அப்படிச் சேர்த்த விஷயங்கள, கதை, சூழலுக்கு எந்த மாதிரி தேவையோ அந்த மாதிரி யதார்த்தம், உண்மைத்தன்மை குறையாமல் பிரதிபலிக்க வைக்கணும். ஒரு கலை இயக்குநரோட அடிப்படைத் தகுதி இதுதான்னு நம்புவன் நான்!’’ என்கிறார் கலை இயக்குநர், நடிகர் டி.ஆர்.கே. என்கிற கிரண்.
‘கோ’, ‘அனேகன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘நானும் ரவுடிதான்’, ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘கவண்’ ஆகிய படங்களுக்குப் பணியாற்றியவர். தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘குப்பத்து ராஜா’ என்று பரபரப்பாக இருக்கிறார்.
அவரைச் சந்தித்தபோது...
சினிமா கலை இயக்கத்துக்கு எப்படி வந்துசேர்ந்தீர்கள்?
சின்ன வயதில் இருந்தே ரஜினி சாரோட தீவிர ரசிகன். ஸ்கூல்ல படிக்கும்போது வீட்ல கொடுக்குற 10 பைசா, 20 பைசாவை சேர்த்து வைத்து நிறைய ஸ்கெட்ச் பேனா வாங்குவேன். அப்போ அது ஏன், எதுக்குன்னு யாருக்குமே புரியாது. அந்த நேரத்துல ரஜினி சாரோட படங்கள் எப்போ ரிலீஸாகுதோ அவரை படமா வரைந்து சென்னையில இருக்குற ஆல்பர்ட், பாரத் தியேட்டர்களில் கட் அவுட்டா வைப்பேன்.
வெடி வெடித்து, பாலாபிஷேகம் செய்ற ரசிகர்கள் எல்லோரும் என்னை ஓடி வந்து கட்டி பிடித்து தூக்கி கொண்டாடுவாங்க. என்னோட படம் அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த ஆர்வம்தான் ஓவியம் மீதான ஈர்ப்பை அதிகரிக்க வைத்தது. பின்னாளில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். அடுத்த கட்டமாக உதவிக் கலை இயக்குநரானேன். இயக்குநர் ராஜீவ்மேனன் சார்கிட்ட 120-க்கும் மேல விளம்பரப்படங்களுக்கு வேலை பார்த்தேன்.
அவரே ஒரு கட்டத்துல, ‘இனிமே என்கிட்ட இருக்காதே. தயவு செய்து வெளியே போய் படம் பண்ணு. நல்ல எதிர்காலம் இருக்கு!’ன்னு சொன்னார். அடுத்தடுத்து படங்கள் பண்ண ஆரம்பித்தேன். கே.வி.ஆனந்த் சாரோட ‘கோ’ படம் நல்ல அடையாளமாக இருந்தது. ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
கலை இயக்கம், நடிப்பு இரண்டும் வெவ்வேறு துருவங்கள், நீங்க எப்படி நடிகரானீங்க?
ஆரம்பத்தில் நடிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ‘ஹவுஸ்புல்’ படத்தில் வேலை பார்க்கும்போது, ‘உங்க கண் வித்தியாசமா இருக்கு!’ன்னு சொல்லி பார்த்திபன் சார் கட்டாயப்படுத்திக்கிட்டே இருந்தார். டெக்னீஷியனா 20, 30 பேரை வைத்து வேலை பார்க்கும்போது நமக்குன்னு ஒரு கெத்து இருக்கும். நடிக்க வந்து நான் சரியா நடிக்கலைன்னா திட்டு விழும்.
எதுக்கு அதெல்லாம்னு ஒப்புக்கொள்ளவே இல்லை. கடைசியில பார்த்திபன் சார் விடவே இல்லை. அந்தப் படத்துல ரிப்போர்ட்டரா நடிக்க வைத்தார். அடுத்து கே.வி.ஆனந்த் சார் ‘கோ’ படத்துல விடாப்பிடியா நடிக்க வைத்தார். அப்படியே அந்த வேலையும் நடந்துக்கிட்டிருக்கு.
‘நானும் ரவுடிதான்’, ‘கவண்’ மாதிரியான படங்களில் வேலை பார்ப்பதற்கும் ‘இரண்டாம் உலகம்’ மாதிரியான ஃபாண்டஸி படங்கள் வேலை பார்ப்பதற்கும் அனுபவம் வேறுபடுகிறதா?
நடைமுறை காலகட்ட படங்களில் வேலை பார்க்கும்போது நிஜத்தை மீறி போகாமல் பார்த்துக்கணும். இரண்டாம் உலகம் மாதிரியான படங்களில் நாம என்ன வேணும்னாலும் பண்ணலாம். உதாரணத்துக்கு ஒரு பேனா இருக்கிறது என்றால் அதோட வடிவமைப்பை நம்ம நினைத்த மாதிரி அமைக்கலாம். அதுக்கான சுதந்திரம் அங்கே இருக்கும். அதேபோல, எந்த மாதிரியான படங்களாக இருந்தாலும் இயக்குநர் கேட்பதைவிட அழகா கொடுக்க ஒரு கலை இயக்குநர் முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் எதிர்பார்ப்பதையாவது கொடுத்துவிட வேண்டும். அதுதான் முக்கியம்.
தற்போதைய சினிமா சூழலில் கலை இயக்குநருக்கான இடம் எப்படி இருக்கிறது?
நான் கேள்விப்பட்ட விஷயம்தான் இது. 1970-களுக்கு முன்னாடி படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் மட்டும்தான் இருக்கைகள் போடுவார்களாம். கலர் மாற்றம், காஸ்டியூம்ஸ் எதுவாக இருந்தாலும் கலை இயக்குநரைக் கேட்காமல் செய்வதே இல்லை.
ஆனால், 1970-ல் இருந்து 1990 வரைக்கும் ‘சகலகலா வல்லவன்’ மாதிரியான ஒருசில படங்களைத் தவிர கலை இயக்கத்தின் பங்களிப்பு பெரிதாக இல்லை.
யாரும் கண்டுகொள்வதுமில்லை. இந்த சூழலில் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி கூட்டணி உள்ளே வந்தது. மீண்டும் கலை இயக்குநருக்கான கிரீடம் மேலே ஏறியது. திரையில தோட்டாதரணி பெயர் வரும்போது கிளாப்ஸ், விசில் சத்தம் வந்தது. கலை இயக்குநர்களுக்கெல்லாம் அவர் அப்பா மாதிரி.
அந்த இடத்தை இப்போ வரைக்கும் சாபு சிரில் சார் தக்க வைத்திருக்கிறார். மணிராஜ், பிரபாகர், ராஜீவன், முத்துராஜ் மாதிரியான என் சீனியர்கள் எல்லோரும் சிறப்பா பணியாற்றி வருகிறார்கள்.
இப்போ சமீபத்துல ‘மாநகரம்’, ‘ஜில் ஜங், ஜக்’ மாதிரியான படங்களின் கலை இயக்குநரின் வேலைகளும் அற்புதம்.
நடிகனாக வில்லன் வேடங்களில்தான் உங்களை அதிகம் பார்க்க முடிகிறது?
‘நீ நல்லவனாச்சேடா. ஏன்டா இப்படி நடிக்கிறே!’ன்னு என்னோட பிரெண்ட்ஸ் பலரும் வருத்தப்படுறாங்க. என் அம்மா, ‘தியேட்டர்ல உன்னை திட்டுறதை கேட்கவே முடியலைப்பா’ன்னு சொல்றாங்க. ஆனா, என் பசங்க, ‘இப்படியே பண்ணுங்கப்பா’ன்னு ரசிக்கிறாங்க. வில்லன் நல்ல அடையாளம்தான்.
இப்போ வரைக்கும் நான் மெயின் வில்லனாக நடித்ததே இல்லை. சின்ன சின்ன கதாபாத்திரம்தான் நடிக்கிறேன். ஆனாலும் என்னைப் பலருக்கும் தெரியுது. அதேபோல, நான் கலை இயக்குநராக வேலை பார்க்கும் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. ‘காதலும் கடந்து போகும்’, ‘திருநாள்’ இப்படிப் பல படங்கள் நடிகனாக மட்டுமே வேலை பார்த்திருக்கிறேன். கதாபாத்திரம் பிடித்தால்போதும். நடிப்பேன்.
தற்போது?
‘குப்பத்துராஜா’ படத்தில் கலை இயக்குநர், நடிகர் ரெண்டு அவதாரமும் உண்டு. பெயரிலேயே கதை என்ன என்று புரியும். ஒரு குப்பத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம். நடிகனாக என்னோடக் கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். ‘தானா சேர்ந்த கூட்டம்’ பெரும்பகுதி வேலைகள் முடிந்தது. 80 -களின் கதைக் களம். நிறைய சேலஞ்ச் இருக்கிறது. விக்னேஷ் சிவன், சூர்யா இருவருமே நண்பர்கள். அவ்வளவு எனர்ஜியோடு வேலை பார்க்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT