Published : 11 Aug 2017 10:26 AM
Last Updated : 11 Aug 2017 10:26 AM
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ‘பஸ் ஸ்டாப்’ என்ற தெலுங்குப் படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் ஹாசிகா. அவரை ஆனந்தி எனப் பெயர் சூட்டி ’கயல்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் பிரபுசாலமன். தெலுங்கு சினிமாவை மறந்துவிட்ட ஆனந்தி, தற்போது அதிக தமிழ்ப் படங்களில் நடித்துவரும் கதாநாயகியாக இருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்தி ஜெகன் இயக்கியிருக்கும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ‘பசங்க’ புகழ் பாண்டிக்கு ஜோடியாக நடிக்க முதலில் மறுத்துவிட்டாராம். அதன் பிறகு பாண்டி மற்ற படங்களில் இதுவரை நடித்திருந்த காட்சிகளை தொகுத்து இயக்குநர் ஒரு குறும்படம்போல் போட்டுக் காட்டியதும், அதைப் பார்த்து நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.
நாகேஷ் பேரன்!
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷின் வாரிசான ஆனந்த்பாபு, தன் மகன் கஜேஷை ‘கல்கண்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அறிமுகப் படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன் எனக் கவர்ந்த கஜேஷ், எ.எம்.பாஸ்கர் இயக்கிவரும் ‘நான் யாரென்று நீ சொல்’ என்ற இரண்டாவது படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்துவருகிறார். காதல் போட்டியால் நடந்துவிடும் எதிர்பாராத கொலை ஒன்றின் முடிச்சை நோக்கி நகரும் க்ரைம் திரில்லராக உருவாகிவருகிறது இப்படம். மகனுக்காக ஆனந்த்பாபு கதை கேட்டு ஒப்புக்கொண்ட படம் இது என்கிறார் இயக்குநர் பாஸ்கர். இவர் ‘குறுக்கெழுத்து’ படத்தின் மூலம் ராய் லட்சுமியைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.
கிருஷ்ணாவின் ‘களரி’
முன்னணிக் கதாநாயகர்களின் பட்டியலில் இடம் கிடைக்க வேண்டுமானால், வளரும் கதாநாயர்கள் ஆண்டுக்கு ஒரு வெற்றிப் படமாவது கொடுத்தாக வேண்டும். அதற்காகப் போராடி வருபவர்களில் கிருஷ்ணாவும் ஒருவர். ‘கழுகு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘கழுகு’ கிருஷ்ணா என்று அழைக்கப்பட்ட இவர், தற்போது ‘பண்டிகை’ படத்தின் வெற்றியால் ‘பண்டிகை’ கிருஷ்ணா என்று அழைக்கப்பட்டுவருகிறார். இந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அறிமுக இயக்குநர் கிரண் சந்த் இயக்கத்தில் ‘களரி’ என்ற படத்தை ஒப்புக்கொண்டு அதில் முழு மூச்சாக நடித்துவருகிறார். தமிழ்ப் படமாக இருந்தாலும் முழுக்க கேரளத்தில் தயாராகிவருகிறது. “கொச்சி மாநகரத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் வாத்துருத்தி என்ற பகுதி இருக்கிறது. இங்கேதான் கதை நடக்கிறதாம். தமிழகத்துக்கு வெளியே பிறந்து வளரும் ஒரு சராசரி இளைஞனின் கலாச்சாரச் சிக்கல்கள்தான் கதை. இதை நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து யதார்த்தமாகக் கூறுகிறேன்” என்கிறார் இயக்குநர் கிரண் சந்த்.
தமிழில் ஒரு அபோகலிப்டோ!
ஆதிவாசி சமூகங்களை மையப்படுத்தி ஹாலிவுட்டில் உருவான படங்களில் அபோகலிப்டோ உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்த படம். ‘ஆறாம் வேற்றுமை’ என்ற தலைப்புடன் அதே பாணியில் தமிழில் ஒரு படம் தயாராகிவருகிறது. படத்தை இயக்குபவர் ஹரிகிருஷ்ணா.
“சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய கற்பனைக் கதை இது. காட்டையும் மலையையும் விட்டுச் சமவெளிக்கு புலம்பெயர விரும்பாத ஆதிமனிதர்களின் கண்டுபிடிப்புகளை, கலாச்சாரத்தை நகைச்சுவை, ஆக்ஷ்ன் கலந்து கூறும் படம். நாயகன் அஜய், நாயகி கோபிகா. யோகிபாபு ஒரு ஆதிவாசியாக வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்கள், துணை நடிகர்கள் ஆகியோருக்கான ஒப்பனை, தோற்றம், உடை ஆகியவற்றின் நம்பகத் தன்மைக்காக ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் பலமணி நேரம் காத்திருந்து படமாக்கி வருகிறோம். அந்த அளவுக்கு அபோகலிப்டோ காலகட்டத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக வேலை செய்துவருகிறோம்” என்கிறார் இயக்குநர். படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா. இவர் ‘ரேணிகுண்டா’ படத்துக்கு இசையமைத்தவர்.
மூன்று படங்கள்
ஜி.எஸ்.டி-க்குப் பிறகு வெளியான படங்களில் ‘விக்ரம் வேதா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய படங்களுக்கு மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில், தனுஷ், அமலா பால், கஜோல் நடித்துள்ள ‘விஐபி 2’, உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ஆண்ட்ரியா, புதுமுகம் வசந்த் ரவி, அஞ்சலி நடித்துள்ள ‘தரமணி’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. டிக்கெட் முன்பதிவில் இவற்றுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துக் கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும். இணையத் தரவிறக்கம் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுவருவதால் மூன்று படங்களுமே வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தொகுப்பு:ரசிகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT