Published : 25 Aug 2017 11:24 AM
Last Updated : 25 Aug 2017 11:24 AM
ஏவி.மெய்யப்பன் 110 -வது பிறந்ததினம்
ஏவிஎம் என்ற முத்திரையைப் பார்த்தவுடன் தமிழ் சினிமாவின் தந்தை என்று போற்றத்தக்க வெகுசிலரில் ஒருவரான ஏவி.மெய்யப்பன் நம் நினைவுக்கு வருவார். அவரது வழியில் ஏவி.எம்.சரவணன், ஏவி.எம்.பாலசுப்ரமணியன், பேரன் குகன் ஆகிய வாரிசுகள் சின்னத் திரையிலும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை எழுப்பி, குடும்பத் தொலைக்காட்சித் தொடர்களைத் தந்து, மெய்யப்பன் விட்டுச் சென்ற கலையை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.
திரைவானில் ஏவிஎம் என்ற சகாப்தம் ஒரே இரவில் உருவானது அல்ல. மெய்யப்பன் என்ற மனிதரின் உழைப்பு, வேகமாக முடிவெடுக்கும் திறன், மக்கள் மீது நம்பிக்கை வைத்து புதுமைகளைத் துணிந்து அறிமுகப்படுத்தியது எனப் பல வெற்றி ரகசியங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. திரையுலகில் 1935-ல் காலூன்றி அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தனது நிறுவனம் வளரப் பாடுபட்டார். தாமும் வளர்ந்து மற்ற கலைஞர்களையும் மிளிரச் செய்த பெருமை ஏவிஎம்முக்கு உண்டு.
அங்காடியில் தொடங்கிய கலை
பாடகர் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், நகைச்சுவையில் மிளிர்ந்த டி.ஆர்.ராமச்சந்திரன், ‘கருவண்டுக் கண்ணழகி’ குமாரி ருக்மணி, ‘நாட்டியப் பேரொளி’ குமாரி கமலா எனப் பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள், டி.டி.கிருஷ்ணஸ்வாமி, எம்.வி.ராமன், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.சங்கர் ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்கள் ஏவி.எம்மால் முன்னுக்கு வந்தனர்.
ஏவி.எம்மின் தந்தை முதலில் சிறு பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வந்தார். பேசாத சினிமா (மௌனப் படம்) வெளிவந்த அந்த நாட்களில் வீடுகளில் சிறிதளவே மின் வசதி இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டி கண்டறியப்படாத காலம். ஆனால், கிராமஃபோன் பெட்டி என்ற கருவியில் சிறிய உலோக ஊசியின் மூலம் ஒலி வரச் செய்து, பாடலைக் கேட்டு ரசிக்கும் காலம். கிராமஃபோன் இருக்கும் வீடுகளின் ரசனையும் அந்தஸ்தும் மதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட கிராமஃபோன் இசைத் தட்டுகளைத் தயாரித்த அனுபவத்துடன் திரையுலகில் நுழைந்த நிறுவனம்தான் ஏவிஎம்.
மெய்யப்பன் பதின் பருவத்திலேயே தந்தைக்கு உதவியாளராக இருந்தார். ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்( HMV), கொலம்பியா, ஹட்சின்ஸ், ட்வின் போன்ற இசைத்தட்டு கம்பெனிகளின் இசைத்தட்டுகளை விற்பனைசெய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் இசைத் தட்டுகளைத் தாமே தயாரித்து விற்கத் தொடங்கின. இப்படித்தான் பின்னால் படங்களைத் தயாரிக்கவிருந்த ‘சரஸ்வதி சவுண்ட் புரடெக்ஷன்’ நிறுவனம் உருவானது.
‘சரஸ்வதி ஸ்டோர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியதும் பல துறைகளைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் அதன் முன்னேற்றத்துக்கு ஊக்கமளித்தனர். ஓடியன் என்ற பெயருடன் பரிமளித்த சரஸ்வதி ஸ்டோர், பின்னர் பல விதமான இசைத் தட்டுகளைத் தயாரித்துப் புகழ்பெற்றது.
முதல் பின்னணிப் பாடல்
இசைத் தட்டுகளுக்கு அடுத்த கட்டமாகப் படத் தயாரிப்பில் இறங்கினார் ஏவிஎம். தொடக்கத்தில் சினிமா ‘டாக்கீ’ தயாரிப்பில் கண்ட பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியில் ‘நந்தகுமார்’ என்ற படம் எடுக்கப்பட்டு வெற்றிகண்டது. டி.ஆர்.மகாலிங்கம் இளவயது கண்ணனாக நடித்த இந்தப் படத்தில், கண்ணனின் தாய் யசோதையாக நடித்தவர் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான டி.பி.ராஜலட்சுமி. இவர் பாடுவதாக அமைந்த காட்சியில் இடம்பெற்றது அவரது குரல் அல்ல. லலிதா வெங்கடராமன் என்ற வாய்ப்பாட்டு இசைக் கலைஞரைக் கொண்டு, அவரைப் பின்னணி பாடவைத்துப் பதிவுசெய்தார் மெய்யப்பன். முதன் முதல் தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகருக்கு ஒரு பாடகரின் பின்னணிப் பாடலைப் பயன்படுத்திய புதுமையால் விளைந்த புகழ், மெய்யப்பனுக்கே உரித்ததாகும். 1938-ல் எடுக்கப்பட்ட ‘நந்தகுமார்’ மெய்யப்பனுக்குப் புகழ் தந்தது. மகாலிங்கத்துக்கும் விடிவெள்ளியாய் அமைந்தது.
முதல் மொழிமாற்றம்
ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் லட்சுமி பாய் சந்திரமதியாகவும் சுப்பையா நாயுடு ஹரிச்சந்திரனாகவும் சிறுவன் நரசிம்மன் லோகிதாஸாகவும் நடித்த ‘ஹரிச்சந்திரா’ படத்தை 1943-ல் கன்னடத்தில் நேரடியாகத் தயாரித்தது ஏவிஎம் நிறுவனம். கன்னடத்தில் மாபெரும் வெற்றிகண்ட அந்தச் சோகச் சித்திரத்தைத் தமிழில் ஒரு நேரடித் தமிழ்ப் படம்போலவே ‘டப்’ செய்து தமிழ்நாட்டில் வெளியிட்டதால் முதல் மொழிமாற்றம் செய்த திரைப்படத்தை உருவாக்கிய பெருமையையும் ஏவிஎம் எடுத்துக்கொண்டது.
இப்படிப் பல சாதனைகள் செய்துவந்த ஏவி.மெய்யப்பனைப் பற்றி ‘நாம் இருவர்’ படத்தைப் பார்த்த தலைமுறையினர் நன்கு அறிவார்கள். அதன்பிறகு அவர் புகழேணியில் மேலே மேலே ஏறிக்கொண்டேயிருந்தார். அந்த நிறுவனத்தின் 150-வது படம் ‘மாநகர காவல்’.
ஏவிஎம்மின் 50-வது ஆண்டு விழாவில் ‘மின்சாரக் கனவு’ என்று முத்திரை பதித்த வெற்றித் தடங்கள் என்றும் மறையாது. 1907-ல் பிறந்து 1979-ல் மறைந்த அவருக்குக் கடந்த ஜூலை 28-ம் தேதி 110-வது பிறந்ததினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT