Published : 07 Jul 2017 10:53 AM
Last Updated : 07 Jul 2017 10:53 AM
அழிந்துபோன நகரங்கள் வரலாறெங்கும் கதைகளாக நிறைந்துள்ளன. ஆனால், தொன்மைச் சிறப்பும் தனித்துவக் கலாச்சாரமும் கொண்ட தனுஷ்கோடி கடல்கோளால் மூழ்கி ஒரு பேய் நகரமாக ஆகி 53 ஆண்டுகள்தான் ஆகின்றன. தனுஷ்கோடியை வணிகத் துறைமுகமாக ஞாபகத்தில் பதித்துள்ள வயதான மனிதர்கள் இன்னமும் தமிழகமெங்கும் இருக்கிறார்கள். நமது தந்தையரின் கண்களுக்கு முன்னர் ஒரு நகரம் மூழ்கிப்போன கதை இது. ஆயிரக்கணக்கான மக்களை ஜலசமாதியாக்கிய தனுஷ்கோடியின் மர்ம வசீகரத்தை ‘தனுஷ்கோடி’ என்ற ஆவணப் படத்தின் மூலம் முழுமையாகப் பதிவுசெய்திருக்கிறார் 21 வயது இளைஞர் ஜெனிக் கமலேசன்.
தனுஷ்கோடி குறித்த புராணிக நினைவுகளுடன் தொடங்கும் இந்த ஆவணப்படம் சென்ற நூற்றாண்டில் இந்த நகரம் பெற்றிருந்த கலாச்சார முக்கியத்துவம் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது. 1914-ம் ஆண்டில் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பின்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடி வரும் போட் மெயிலில் வரும் பயணிகள், நீராவிப் படகில் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்லும் சேவை இருந்ததை அசைபோடுகிறது.
இலங்கைக்குச் செல்ல எழும்பூரிலிருந்து ஒரே பயணச்சீட்டுதான் என்ற தகவல் இந்தத் தலைமுறையினருக்கு அதிசயமாக இருக்கும். தனுஷ்கோடியிலிருந்து இலங்கையை வெறும் 35 கிலோமீட்டர் படகுப் பயணத்தில் அடைந்துவிடலாம். கடல் சார் நகரம் என்பதால் தனித்த மீன் உணவுகள் மற்றும் பயணிகளுக்கான சிறப்பு உணவுகள் கிடைக்கும் இடமாகவும் தனுஷ்கோடி திகழ்கிறது.

1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி நள்ளிரவில் ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய போட் மெயில் மீண்டும் திரும்பவேயில்லை. ஓட்டுநரும் ரயிலும் பயணிகளும் பயணிகளுடன் வந்த கால்நடைகளும் கடலில் மூழ்கியதுபோலவே தனுஷ்கோடி என்ற ஒரு உயிர்ப்பு கொண்ட துறைமுக நகரமும் நினைவுகளாகக் கடலில் மூழ்கியதை இந்த ஆவணப்படம் ஓவியங்கள் போன்ற காட்சிகளுடன் நம்மிடம் விவரிக்கிறது. கடல் கொள்ளை கொண்ட பிறகும் முற்றிலும் அழியாமல் சாட்சிபோல நின்றிருந்த தேவாலயத்தின் கதவுகளும் மதிப்புமிக்க கட்டிடப் பொருட்களும் மனிதர்களின் வயிற்றுக்குள் சென்று தற்போது எலும்புக்கூட்டைப் போல நிற்கிறது.
வாழ்வு என்றால் மரணமும் சகஜம்தான்; இருப்பைப் போல இழப்பையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்பது போல தனுஷ்கோடியைக் காவு கொண்ட கடல் நீலமாக மர்மத்தின் வசீகரத்துடன் இன்னும் பயணிகளை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
ஆய்வாளர்கள் பாலுசாமி, செலினா, அரவிந்தன் போன்றோர் ஆவணப்படத்தின் நடுவில் தனுஷ்கோடி குறித்த தகவல்களை நம்மிடம் தருகின்றனர். வாழ்வதற்குத் தகுதியற்ற ஊர் என்று அரசு அறிவித்த நிலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் மீன்பிடிப்பை வாழ்வாதாரமாகக் கொண்டு இங்கு குடிசைகள் போட்டு வசித்துவருகின்றன. குடிநீருக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் வெகுதொலைவு பயணிக்க வேண்டும்.
தனுஷ்கோடியின் புராதனத்தை நன்கு காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஜெனிக் கமலேசன், இந்தியாவின் புவி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தனுஷ்கோடியை அரசு எப்படிப் பார்க்கிறது? மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நல்லெண்ணம் உண்மையிலேயே அரசுக்கு உள்ளதா என்பது போன்ற கேள்விகளுக்குப் பின் செல்லவில்லை. சாலை வசதிகள், சூரிய மின்சார வசதி, பள்ளி போன்ற உள்கட்டுமானங்கள் ஏற்பட்டால் தனுஷ்கோடி எதிர்காலத்தில் மீண்டெழுந்துவிடும் என்ற குரலை இந்த ஆவணப்படத்தின் முடிவில் அப்பாவித்தனமாகக் கேட்க முடிகிறது.

இதுபோன்ற சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், தனுஷ்கோடி என்ற சிதைந்த நிலத்தின் காட்சிகளை முழுமையான அனுபவமாக்கியிருப்பதில் ஜெனிக் கமலேசன் வெற்றிபெற்றுள்ளார். ‘தி இந்து’வில் வெளியான சமஸ் எழுதிய தனுஷ்கோடி பற்றிய கட்டுரைகளே இந்தப் படத்துக்கான உந்துதலாக இருந்தது என்று கூறுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT