Last Updated : 14 Jul, 2017 10:56 AM

 

Published : 14 Jul 2017 10:56 AM
Last Updated : 14 Jul 2017 10:56 AM

கோலிவுட் கிச்சடி: உலகப் படத்தில் மலையாள மாடல்!

ஈரானிய சினிமாவை உலக சினிமாவாகக் கொண்டாடவைத்த இயக்குநர்களில் ஒருவர் மஜித் மஜிதி. கடந்த 2015-ல் இறைத்தூதர் முகமதுவின் வாழ்க்கையைத் தழுவி எடுத்த ‘முகமது: தி மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஹ்மானுடன் ஏற்பட்ட நட்பால் தற்போது இவர் இந்திய சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தைத் தற்போது இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூருடைய தம்பி இஷான் கட்டார் நாயகனாக அறிமுகமாக, நாயகியாகப் பிரபல மாடல் மாளவிகா மோகனன் அறிமுகமாகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த கேரளப் பெண்ணான இவருடைய தந்தை கே.யூ.மோகனன் மலையாள சினிமாவில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். துல்கர் சல்மான் ஜோடியாக ‘பட்டம் போலே’ படத்தில் அறிமுகமான மாளவிகா தற்போது ஐந்து மலையாளப் படங்களில் நடித்துவிட்டார். ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவர் வலம் வரலாம்.



கோலிவுட் ஜல்லிக்கட்டில் ஆதி!

ஜல்லிக்கட்டைக் காப்பாற்றினால் நமது நாட்டு மாடுகளைக் காப்பாற்றலாம் என்று மியூசிக் வீடியோ போட்டுப் பரபரப்பைக் கிளப்பியவர் ஆதி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சையிலும் சிக்கியவ இவர், ‘கிளப்புல மப்புல’ என்ற பாப் பாடல் மூலம், அதை ஹிப் ஹாப் வடிவத்தில் தரமுயன்று ‘ஹிப் ஹாப் தமிழா ஆதியாக’ ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்தவர். தற்போது கதாநாயகன், எழுத்தாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் எனப் பன்முக அவதாரங்களுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் கோலிவுட் ஜல்லிக்கட்டிலும் குதித்திருக்கிறார். இசையில் சாதிக்க விரும்பும் போராட்ட குணமிக்க இளைஞன் ஒருவனின் சுயசரிதை போல இந்தப் படத்தை இயக்கியிருக்கிறாராம் ஹிப் ஹாப் ஆதி.



மணி ரத்னம் அடுத்து?

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாகிவிட்டாராம் மணி ரத்னம். கடந்த முறை ரவிவர்மனுடன் பணியாற்றிய இயக்குநர், இம்முறை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் ஆறாவது முறையாகக் கைகோக்கிறாராம். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப் படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.



காவிய நாயகி நயன்தாரா!

பிரம்மாண்ட காவிய சினிமாக்களின் கதாநாயகி என்ற பெருமை பெற்றிருப்பவர் அனுஷ்கா. தற்போது அந்த இடத்தை நயன்தாரா எடுத்துக்கொள்ளலாம். சிரஞ்சீவியின் 151-வது படமாகத் தயாராகப்போகிறதாம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மன்னன் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த வரலாற்றுப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்றாலும் நயன்தாராவுக்குத்தான் முதலிடம் என்று தகவல்கள் கூறுகின்றன. இன்னொரு பக்கம் ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.



கவிஞர் வைத்த சிலை

தமிழ் சினிமாவைத் தனது தனித்துவம் மிக்க படங்களால் வளப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். தாதா சாகேப் பால்கே விருதுவரை பயணித்த இந்த மாபெரும் கலைஞருக்கு அவரது சொந்த ஊரான நல்ல மாங்குடி கிராமத்தில் சிலையெடுக்க ஏற்பாடு செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகேயுள்ள நல்ல மாங்குடியில் பிறந்து வளர்ந்தவர் பாலசந்தர்.

பத்து வயதில் வீட்டுத் திண்ணையில் தனது தாத்தாவின் வேட்டியைத் திரைச்சீலையாகக் கட்டி நாடகம் நடத்தி சக குழந்தைகளை மகிழ்வித்த அதே இடத்தில்தான், கடந்த ஜூலை 9 அன்று இயக்குநர் சிகரத்தின் துணைவியார் ராஜம் பாலச்சந்தரால் சிலை திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. ஊரே கூடிக் கொண்டாடிய இந்த விழாவில் கே.பி.க்குச் சிலை வைக்க ஏற்பாடு செய்த வைரமுத்துவின் ஒருமணிநேரப் பேச்சு ஹைலைட் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x