Published : 07 Sep 2014 11:23 AM
Last Updated : 07 Sep 2014 11:23 AM
நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம்.. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.. என எதிர்பார்ப்புகளுடனும், ‘படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர்’ என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமர காவியம். புதிய இயக்குநர் ஜீவா சங்கரின் இந்த படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா?
பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா.
காதல் பறவைகளின் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிறது. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை.
படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்துக் காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன.
நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு நாயகன் தீ வைக்கிறான். நெருப்பு பற்றியெரியும்போது அதே வீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுகிறார்கள். இப்படிப் பல காட்சிகள் நம்பகத்தன்மை பற்றிய கவலையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை.
கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிஜமாக நடந்ததா, இல்லையா என்பது படத்துக்கு முக்கியம் இல்லை. படத்தில் அது வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது.
கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை.
சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். எப்போதும் ஒரே விதமான இறுக்கத்துடன் முகத்தைக் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.
மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.
மைனா, கும்கி போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமய்யாவை உப்பு இல்லாத ஊறுகாய்போல பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. ‘ஏதேதோ எண்ணம் வந்து’ பாடல் மனதில் நிற்கிறது.
முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார். இருவரும் ஒருவரே என்பதுதான் நகைமுரண்.
‘காவியம்’ என்ற பெயரைத் தாங்கி வந்திருப்பதாலோ என்னவோ.. நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக்கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது ‘அமர காவியம்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT