Published : 02 Sep 2016 11:18 AM
Last Updated : 02 Sep 2016 11:18 AM
சபிக்கப்பட்ட ஒரு வீடியோ டேப்பின் காட்சிகளைப் பார்ப்பவர்கள் எண்ணி ஏழே நாளில் செத்துப்போகிறார்கள். இந்த ஒற்றை வரியில் உருவாகி, உலகத் திகில் பட வரிசையில் நிலையான இடம் பிடித்த ஹாலிவுட் திரைப்படம், ‘த ரிங்’. 2002-ல் வெளியான இப்படத்தைத் தொடர்ந்து 2005-ல் ‘த ரிங் டூ’ வெளியானது. அதன் பின்னர் 11 ஆண்டுகள் கழித்து வருகிறது ‘ரிங்ஸ்’. இத்தனை வருட இடைவெளியில் ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளியாவதும், அதற்கான ரசிக எதிர்பார்ப்புகள் அப்படியே இருப்பதும் திகில் பட வரலாற்றில் புதுசு.
‘த ரிங்’ அமானுஷ்ய வீடியோ
சிடி, டிவிடிகளுக்கு முன்பு புழக்கத்திலிருந்த விசிஆர் சாதனத்தையும் அதற்கான வீடியோ கேசட்டையும் நினைவிருக்கிறதா? அப்படியொரு வீடியோ டேப்பில் மர்மமான காட்சிகள் பதிவாகியிருக்க, அதைப் பார்ப்பவர்களின் மரணம் 7 நாட்களில் உறுதிசெய்யப்படுகிறது. வீடியோ ஓடி முடிந்ததும் வீட்டில் அடிக்கும் தொலைபேசியில் ‘7 நாட்கள்’ என்பதோடு அமானுஷ்யக் குரல் துண்டாகும். அதன்பின் முதல் நாள், இரண்டாவது நாள் எனத் திரையில் அறிவிப்பு ஒளிர, ‘லப்டப்’ எகிறல்களோடு தங்களது கொடூர மரணத்தை நோக்கிக் கதாபாத்திரங்கள் செல்லும்.
உறவுப் பெண் மர்ம மரணத்தைத் துலக்க முற்படும் ஒரு பெண் பத்திரிகையாளர் அந்த டேப் காட்சிகளைப் பார்க்க நேரிடுகிறது. அவருடைய மகன், முன்னாள் கணவர் ஆகியோரும் இந்த வரிசையில் சேர, தங்களைக் கொல்ல வரும் ஆவியை முந்திக்கொண்டு மரணத்தை வெல்ல, அதை நோக்கியே அடியெடுக்கிறார்கள். தொடர்ந்து நடப்பவைதான் 2002-ல் வெளியான ‘த ரிங்’ திரைப்படம்.
திகில் பட வரலாற்றில் புதிய வரலாறு
80 மற்றும் 90-களின் ஹாலிவுட் திகில் படம் என்றால் திரையிலும், படம் பார்ப்பவர் முகத்திலும் ரத்தம் தெறிக்க விடுவார்கள். ‘த ரிங்’ படம் அப்படியான slasher திகில் படப் பாணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருக்கை நுனியில் இருத்தும் வெற்று திகில் படமாக மட்டுமல்லாது, கதையோட்டத்துடன் சிக்கும் முடிச்சுகள், அவற்றை அவிழ்க்கும் த்ரில்லர் பாணியால் பொதுவான சினிமா ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது. இந்தப் படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்த அமானுஷ்யக் காட்சிகள் ரசிகர்களின் உள்வாங்கும் திறனின் கதவுகளை இன்னும் அகலமாகத் திறந்துவிட்டதால், இத்தனை வருடங்களாக அதன் அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஜப்பான் இறக்குமதி
ஜப்பானின் கோஜி சுஸுகி என்ற நாவலாசிரியர் அந்நாட்டின் பிரபலமான ஆவி பழிவாங்கும் நாட்டுப்புறக் கதை ஒன்றில், Thoughtography தொடர்பான அறிவியல் ஆய்வுகளையும் கலந்துகட்டி எழுதிய நாவல் 1998-ல் ‘ரிங்கு’ என்ற பெயரில் அங்கு படமானது. ஜப்பான் சினிமா வரலாற்றில் சாதனை படைத்த அதன் ஹாலிவுட் ஆக்கமே 2002, ‘த ரிங்’. படம் வெளியான 24 மணி நேரத்தில் மட்டும் 20 லட்சம் டிவிகள் விற்றுத்தீர்ந்தன. பாக்ஸ் ஆபீஸிலும் தாறுமாறு ஹிட்டடித்த இப்படத்தின் வசூல் சாதனை திகில் பட வரிசையில் 2010 வரை நீடித்தது.
‘த ரிங்’ தொடர்ச்சியாக 2005-ல் ஒரு குறும்படமும், இரண்டாம் பாகமாக ‘த ரிங் டூ’ திரைப்படமும் வெளியாயின. முதல் படம் போலில்லை என விமர்சகர்கள் எச்சரித்தும், இரண்டாம் பாகம் வசூலில் குறை வைக்கவில்லை. இவ்வரிசையில் தற்போது வெளியாகும் ‘ரிங்ஸ்’ மூன்றாம் பாகமல்ல. முதல் படத்தின் 2-வது இரண்டாம் பாகம். அதாவது, ‘த ரிங் டூ’ படத்தைப் புறக்கணித்துவிட்டு, முதல் படத்தின் எதிர்ப்பார்ப்புகளோடும் அக்கதையின் தொடர்ச்சியாகவும் ‘ரிங்ஸ்’ படம் தயாராகியுள்ளது.
இணையப் பெருவெளியில் துரத்தும் ‘சமாரா’
ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளியில் அடுத்த பாகத்தைக் கொடுப்பதில் எக்கச்சக்க சிக்கல்கள் எழுந்தன. முந்தைய பாகத்தை நினைவுபடுத்தும் திரை நட்சத்திரங்கள் இதில் இல்லை. முதலாவது படத்தின் பிரதான கதாபாத்திரமாகவே வளையவரும் VHS வீடியோ கேசட் தற்போது வழக்கொழிந்துள்ளது. எனவே டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப இணையப் பெருவெளியில் உலவும் வீடியோவைத் தரவிறக்கி பார்ப்பவர்களைக் கொத்துக் கொத்தாக மரணம் துரத்தியடிப்பதாகக் கதை மாறியது.
கடந்த நவம்பரில் வெளியாக வேண்டிய இப்படம் 3டி ஆக்கத்துக்காகத் தள்ளிப்போடப்பட்டு, பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டார்கள். இந்த ஊசலாட்டங்களுக்குக் காரணம் ஜப்பான் கோஜி சுஸூகி. தனது ‘ரிங்கு’ முதல் நாவலுக்குக் கிடைத்த வெற்றியால், அதன் முன்பின்னாய் கால வலத்தில் ஊடாடும் பல்வேறு நாவல்களை எழுதினார். அவற்றில் பலவும் ஜப்பான் திரையுலகில் 3டி ஆக்கம் பெற்றன. கொல்லப்பட்ட சிறுமி ‘சமாரா’ ஆவியின் சக்தி மேகக்கணினியத்தின் வழி ஊடுருவும் அவரது 2012, ‘எஸ்’ நாவலின் பாதிப்பு தற்போதைய ரிங்ஸில் உண்டு.
கோலிவுட் ‘பேய்’களுக்கு சவால்
சர்வேதசத் திகில் பட ரசிகர்களின் 11 ஆண்டுக் காத்திருப்புக்கு ரிங்ஸ் நியாயம் சேர்க்குமா என்பது படம் வெளியாகும் அக்டோபர் 28 தொடங்கி தெரிந்துவிடும். நம்மூரில் கபாலி, ஜோக்கர் வீச்சுகளுக்கு மத்தியிலும் பேய்ப் படங்களின் வரிசை கோலிவுட்டில் தொடர்வதால், ரிங்ஸ் ஆவியின் உடனடித் தமிழ் மிரட்டலுக்கு நாமும் காத்திருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT