Last Updated : 05 Dec, 2013 12:00 AM

 

Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM

நவீன சரஸ்வதி சபதம் - தி இந்து விமர்சனம்

பெயருக்கு ஏற்ப நவீனமாக யோசித்திருக்கிறார் இயக்குனர் சந்துரு. கைலாயத்தில் ஐபோன், கம்யூட்டர், டெம்பிள் ரன் விளையாடுவது, கைலாயத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது இங்கிலீஷ் பேசுவது என புதிதாகக் கதையை ஆரம்பிக்கிறார்.

சிவன் ஒரு அசைன்மெண்ட்டுக்காக நான்கு பேரைக் கொண்டு வருமாறு நாரதரிடம் கேட்கிறார். அப்படி வருபவர்கள்தான், ஜெய், சத்யன், விடிவி கணேஷ், ராஜ்குமார்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஃபிளாஷ்பேக் அறிமுகத்துக்குப் பிறகான அடுத்த காட்சியில் இவர்கள் ஒன்றாக இருக்கும்போது, இவர்கள் நண்பர்கள் என்று சொல்லவில்லையே என்று கேட்கும்போது, இவர்கள் எப்படி நண்பர்கள் என்பதற்குக்கூடவா ஃபிளாஷ்பேக் வைக்க முடியும், நான்கு பேர் இருந்தாலே அவர்கள் நண்பர்கள்தான் என்று அசத்தலாகக் கதை முன்னகர்கிறது.

சித்த வைத்தியரான ஜெய்,நிவேதாவைப் பார்த்தவுடன் காதலிக்கிறார். அதற்கான மெனக்கெடல்கள் முடிந்து திருமணத்துக்காகக் காத்திருக்கிறார் ஜெய்.

அடுத்த தேர்தலுக்குத் தயாராகிவருகிறார் சத்யன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் ராஜ்குமாருக்கு, வெங்கட் பிரபு படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைக்க, ஷீட்டிங்குக்காகக் காத்திருக்கிறார். கொடூர பொண்டாட்டியிடம் கஷ்டப்பட்டு ஒரு வாரம் விடுமுறை வாங்கித் தப்பிக்கிறார் விடிவி கணேஷ். இவர்கள் நான்கு பேரும் ஜெய்யின் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடத் தாய்லாந்து செல்கிறார்கள்.

தாய்லாந்து சென்றவர்கள், யாருமே இல்லாத ஒரு தீவுக்குச் சென்றுவிடுகிறார்கள். தீவுக்குள் மாட்டியவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் மீதிக் கதை.

இந்த இடத்தில் இடைவேளை. முதல் பாதியில் இருந்த அத்தனை சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் உஸ்ஸாகிவிடுகிறது. இந்த எண்ணம் நமக்கு வந்துவிடக் கூடாது என்று முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி மொக்கை என்று ஃபேஸ்புக்கில் போட்டு விடப்போகிறார்கள் என்று ஒரு வசனம் வருகிறது. ஆனால் இந்தக் கலாய்ப்பை உண்மையாக்கும் திரைக்கதையால் இதே எண்ணம் பார்வையாளர்களுக்கும் வந்துவிடுகிறது. ஆறு மாதங்கள் தீவில் இருப்பவர்களுக்குத் தண்ணீர், உணவு போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்று யோசித்த இயக்குனர், கதையை மட்டும் எப்படி நகர்த்துவது என்று யோசிக்காமல் விட்டுவிட்டார்.

நான்கு ஆண்களை மட்டுமே வைத்துக்கொண்டு இரண்டாம் பாதியை நகர்த்த யோசித்த துணிச்சல் பாராட்டத்தக்கதுதான். ஆனால் சுவாரஸ்யமான முடிச்சுகளோ நிகழ்வுகளோ இல்லாமல் அதைச் செய்திருப்பதுதான் துணிச்சலை அசட்டுத் துணிச்சலாக்கிவிடுகிறது.

ஆனாலும், ஃபிடீங் பாட்டலில் சரக்கு அடிப்பது, கைலாயம் டைம்ஸ் படிப்பது, wherever you go i will follow என டி ஷர்டில் போட்டுக்கொண்டு ஃபாலோ செய்வது, உடம்பு சரியில்லை என்பதைக் காதலிக்கு உணர்த்தும் விதம், சின்ன வசனங்களில் சிரிப்பை வரவழைப்பது என பல இடங்களில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் தெரியவில்லை என்றால் பல ஜோக்குகளை ரசிக்க முடியாது. அதேபோல இரண்டாம் பாதியில் காமெடி என்ற பெயரில் விடிவி கணேஷ் செய்பவை சில நிமிடங்கள் கடத்துவதற்காகச் செய்வதுபோலவே இருக்கிறது. கணேஷ் சிரிக்கவைக்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் படத்தை நகர்த்த அது உதவவில்லை.

படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை அருகில் இருப்பவரிடம் விவாதம் செய்வதற்காக இயக்குனர் கொடுத்த இடைவெளிதான் பாடல்கள். பிரேமின் மெட்டுக்களில் கானா பாலா பாடும் பாட்டு நன்றாக உள்ளது.

ஹீரோயின் நிவேதா தாமஸ் அழகாக இருந்தாலும், முதல் பாதியில் சில நிமிடங்களும், கிளைமாக்ஸில் சில வினாடிகள் வருகிறார். அவ்வளவுதான்.

பாங்காக்கின் வண்ணங்களை ஆனந்த ஜீவாவின் காமிரா அழகாகப் படம்பிடித்துள்ளது.

கைலாயக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறப்பாக உள்ளன. அங்குள்ள சூழலில் நவீன வாழ்வின் தடங்கலைக் கொண்டுவருவது ரசனை.

சந்துரு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இந்து டாக்கீஸ் மதிப்பீடு:

முதல் பாதி கலகலப்பும் ரசனையுமாக நகர, இரண்டாம் பாதி பொறுமையைச் சோதிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x