Published : 30 Jun 2017 10:19 AM
Last Updated : 30 Jun 2017 10:19 AM

கோலிவுட் கிச்சடி: பிரபுதேவா பேசாத படம்

பிரபுதேவா பேசாத படம்

‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படம் ‘மெர்குரி’. இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, மணிரத்னம் என சீனியர்கள் திரண்டுவந்து இயக்குநரைப் புகழ்ந்து தள்ளினார்கள். தன் மைத்துனர் கார்த்திக்குடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் தொடங்கிய ‘ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்’ குறும்படங்களைத் தொகுப்புத் திரைப்படங்களாக வெளியிடும் முறையைத் தொடங்கி வைத்தது. தற்போது படத் தயாரிப்பிலும் இறங்கி இரண்டு திரைப்படங்கள், இணையத்தில் மட்டுமே வெளியாகும் தொடர் ஆகியவற்றைத் தயாரித்துவருகிறது. இரண்டு படங்களில் ஒன்றுதான் பிரபுதேவா முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கும் ‘மெர்குரி’. வசனங்களே இல்லாத இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு திரு, இசை சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் என முன்னணிக் கலைஞர்களை அமர்த்தியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறாராம்.

திசை திருப்பும் பயணம்

கல்வித்துறை தொடர்பான கடும் விமர்சனங்களைத் தனது முதல் படமான ‘சாட்டை’யில் வைத்துக் கவனம் ஈர்த்தவர் அன்பழகன். ‘சாட்டை’ படத்தின் வெற்றி காரணமாக, அதன் இரண்டாம் பாகமாக சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘அப்பா’வும் வெற்றிபெற்றது. தற்போது அன்பழகன் இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் ‘ரூபாய்’. ‘கயல்’ படத்தின் மூலம் அறிமுகமான சந்திரன், ஆனந்தி இருவரும் இந்தப் படத்திலும் நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியக் கதாபாத்திரத்தில் சின்னி ஜெயந்த் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன் முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சந்திரனும் கிஷோரும் இணைந்து ஒரு சிறு வேன் வாங்குகிறார்கள். சவாரி சரிவரக் கிடைக்காமல் தொடர்ந்து மூன்று மாதங்களாக லாரிக்கான தவணையைக் கட்ட முடியாத நிலையில், வேனைப் பிடுங்க வருகிறது வங்கி. இந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சவாரி, அவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. “பயணத்தில் நிகழும் பரபரப்பான கதை இது” என்கிறார் இயக்குநர்.

விற்பனை முடிந்தது

தயாரிப்பில் இருக்கும்போதே சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை சன் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. அதில் ஒன்று சிவகார்த்திகேயன், பிரபல மலையாள நாயகன் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. பெயரிடப்படாத அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் நிறுவனம் வாங்கிவிட்டதாகத் தயாரிப்புத் தரப்பில் உறுதிசெய்தனர்.

யார் இவர்?

சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய உச்ச நட்சத்திரங்களை இயக்கியவர் பழம்பெரும் இயக்குநர் டி.பிரகாஷ் ராவ். இவருடைய பேரன் டி.சத்யா, தெலுங்குத் திரையுலகில் இரண்டு படங்களை இயக்கிவிட்டு, தனது மூன்றாவது படத்தைத் தமிழில் இயக்கி இங்கே அறிமுகமாகிறார். ‘யார் இவன்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஈஷா குப்தா. கடந்த 2007-ல் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றவர். பத்து பாலிவுட் படங்களில் நடித்த பின், தமிழுக்கு வந்திருக்கும் இவருக்குத் தமிழில் பேசி நடிக்க பயிற்சி அளித்திருக்கிறார் இளைய திலகம் பிரபு. ‘யார் இவன்’ படத்தில் ஈஷாவுக்கு பிரபுதான் அப்பாவாக நடித்திருக்கிறார்.

தொகுப்பு: ரசிகா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x