Published : 03 Feb 2017 09:38 AM
Last Updated : 03 Feb 2017 09:38 AM

கோலிவுட் கிச்சடி: ஐந்து மொழி நாயகி

‘மேகா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சிருஷ்டி டாங்கே, ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த்துடனும் ‘தர்மதுரை’ படத்தில் விஜய் சேதுபதியுடனும் நடித்தார். ஆனால் பெரிய நட்சத்திரக் கதாநாயர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவே இல்லை. தற்போது அந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ‘1971 – Beyond The Border’ என்ற படத்தில் அவருடன் நடிக்கிறார். ராணுவம் சம்மந்தப்பட்ட கதை இது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகும் படம் இது.

காதல் முன்னேற்றக் கழகம்

பாக்யராஜின் மைந்தர் சாந்தனுவுக்கு கோலிவுட்டில் தற்போது ஏறுமுகம். சாந்தனுவைப் போலவே போராடிக்கொண்டிருந்த பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜனும் தற்போது வலுவான கதையுடன் களமிறங்கிவிட்டார். அறிமுக இயக்குநர் மாணிக் சத்யா இயக்கத்தில் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் ப்ரித்விராஜன், இந்தப் படத்துக்காகத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்துவருகிறார். 80-களில் நடைபெறும் கதை. இந்தப் படத்தில் ப்ரித்விராஜனுக்கு ஜோடி சாந்தினி.

முழு வீச்சில் செல்வா

எஸ்.ஜே.சூர்யா – ரெஜினா கஸாண்ட்ரா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கி முடித்துவிட்டார் செல்வராகவன். தற்போது சந்தானம் – அதிதி நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தைப் படமாக்கிவருகிறார். இந்தப் படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டார் செல்வராகவன். அந்தப் படத்துக்கு நாயகன் அரவிந்தசாமி. நாயகி ரித்திகா சிங். இதற்கான கதை விவாதம் முழுவீச்சில் நடந்துவருகிறது. இதில் நந்திதாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

உண்மையான வாழ்வியல்

“மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வன்முறை, சாதி ஆகியவற்றில் அதிகப் பிடிப்புள்ளவர்களாக தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரித்துவந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தென் மாவட்ட மக்களின் வாழ்வில் வறட்சிக்கு நடுவே அவர்கள் காட்டுகிற வற்றாத அன்பும் அரவணைப்பும், தஞ்சம் என்று வருபவர்களுக்கு தரும் நிபந்தனையற்ற அடைக்கலமும் என இத்தகைய குணத்தில் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அவர்களது இந்த ஈரமான குணத்தை ஒரு உண்மைச் சம்பவத்தின் துணையுடன் ‘அரசகுலம்’ படத்தின் மூலம் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறோம்” என்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் குமார் மாறன். ரத்தன் மௌலி – நயனா நாயர் ஆகியோர் நாயகன், நாயகியாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.

‘விழித்திரு’ படத்துக்கு ‘யூ’

‘அவள் பெயர் தமிழரசி’ படத்துக்குப் பிறகு மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் ‘விழித்திரு’ படத்துக்கு தணிக்கைக் குழு ‘யூ’ சான்றிதழ் அளித்திருக்கிறது. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா, எஸ்.பி.பி. சரண், தன்ஷிகா, எரிக்கா பெர்னாண்டஸ், அபிநயா, ராகுல் பாஸ்கரன், பேபி சாரா, சுதா சந்திரன், சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

பாராட்டப்படும் ‘நிசப்தம்’

ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்தப் படத்தின் திரைவிழாவில் இயக்குநர்கள் கூட்டமாகக் கூடி பாராட்டித் தள்ளுவார்கள். சமீபத்தில் அப்படியொரு பாராட்டைப் பெற்றிருக்கிறது அறிமுக இயக்குநர் மைக்கேல் அருண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நிசப்தம்’. ‘நாடோடிகள்’ படப்புகழ் அபிநயா, அஜய் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், அறிவழகன், மீரா கதிரவன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாராட்டித் தள்ளினார்கள். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பவர் ஷான் ஜேஸீஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x