Published : 18 Jun 2017 10:40 AM
Last Updated : 18 Jun 2017 10:40 AM
பல சிக்கல்களைக் கடந்து விலை மதிப்புமிக்க மரகத நாணயத்தை எடுக்கச் செல்லும் இரு நண்பர்களின் கதைதான் இது.
40 லட்சம் ரூபாய் கடனை அடைப் பதற்காக நண்பன் டேனியல் சொன்னதன் பேரில் ராம்தாஸிடம் வேலைக்குச் சேர்கிறார் ஆதி. சின்னச் சின்ன கடத்தல் வேலைகளால் கடனை அடைக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டவர் பெரிதாக ஏதாவது செய்யலாம் என்கிறார். ராமதாஸ் அதற்கு உடன்படாத நிலையில் மரகத நாணயத்தைக் கண்டுபிடித்து கொண்டுவந்தால் 10 கோடி ரூபாய் தருவதாக சீனாக்காரர் ஒருவர் வாக்குறுதி அளிக்கிறார். அந்த மரகத நாணயத்தை தொட்ட 132 பேர் இறந்துள்ளார்கள் என தெரிந்தும் ஆதியும் டேனியலும் துணிந்து அதைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அதற்கு சில ஆவிகளும் உதவுகின்றன. அந்த முயற்சி வெற்றி பெற்றதா என்பதே ‘மரகத நாணயம்’ படத்தின் திரைக்கதை.
காதல், பாடல், கவர்ச்சி, சண்டை, சென்டிமென்ட் இல்லாமல் ஒரு வெகுஜன தமிழ் சினிமா சாத்தியமா? கோரமான உருவம் இல்லாமல் நொடிக்கு நொடி சிரிக்க வைக்கிற பேய் படம் சாத்தியமா? சத்தியமாய் சாத்தியம் என்று அடித்துச் சொல்கிறது மரகத நாணயம். கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்து, சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் சரிசமமாக கலந்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திய விதத்தில் இயக்குநர் சரவன் நிமிர்ந்து நிற்கிறார்.
நாயகன் ஆதி அழகு. பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கவும் செய்கிறார். ஆனால், படத்தின் உண்மையான நாயகன் ராம்தாஸ்தான். சிறு கடத்தல்காரன் ராமநாதனாக வித்தியாசமான நடிப்பைத் தந்திருக்கிறார். இறந்த பிறகு அவரது உடல் ஆவி புகுந்த கூடாக நடித்திருக்கிறது. ஆக இரட்டை வேடத்தில் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்.
நிக்கி கல்ரானிக்கு சவாலான கதா பாத்திரம். கதாநாயகியாக ஒரு காட்சியில் அறிமுகமாகி அடுத்த காட்சியிலேயே வேறு ஒருவரை மணமுடித்து வெளியேறி விடுகிறார் அவர். ஆனால் மரகத நாண யத்தைத் தேடி, கதை தீவிரமடையும்போது புதிய அவதாரத்தில் வருகிறார். அரக்கனின் உயிர், கிளியின் உடலுக்குள் இருப்பது போன்று, இறந்துபோன நிக்கி கல்ராணியின் உடலுக்குள் ஒரு ரவுடியின் ஆவி புகுந்துகொள்கிறது. ரவுடிக்கு ஏற்ப தன் உடல்மொழியைச் சிறப்பாக மாற்றி நடித்துள்ளார் நிக்கி கல்ராணி.
ஆதியின் நண்பனாக வரும் டேனியல், ரவுடிக் கும்பலின் தலைவன் ஆனந்த்ராஜ், அவரது அடியாள் முருகானந்தம், ஆவியாக வரும் சங்கிலி முருகன், சாமியாராக வரும் கோட்டா சீனிவாசராவ், தொல்லியல் துறை அதிகாரி எம்.எஸ்.பாஸ்கர் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து கதைக்கு வலு சேர்த்துள்ளனர். நகைச்சுவை என்ற பெயரில் மெனக்கிடாமல் சிறு சிறு ஸ்பாட் வசனங்களைக் கொண்டு திரையரங்கையே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
வசனம் படத்துக்குப் பெரும் பலம் சேர்க்கிறது. பாடல்கள் கதையை ஒட்டிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திபு நினன் தாமஸின் இசையும், பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றன. அரங்குகள், வெளிப்புற படப்பிடிப்பு என அனைத்திலுமே ஒரு பச்சை நிறம் வருவது போன்று ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.வி.ஷங்கர். பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. பாடல்கள் உறுத்தாமல், படத்தின் காட்சிப் பின்னணியை ஒட்டியே அமைந்திருப்பது சிறப்பு. எடிட்டர் பிரசன்னா ஜி.கே. முதல் பாதியில் மட்டும் சில காட்சிகளை நீக்கியிருக்கலாம்.
முன்பகுதியில் நாணயத்தைத் தேடும் பயணம் தொடங்கும்போது ஒரு தொய்வு இருக்கிறது. மரகத நாணயத்தை நெருங் கும் பகுதியில் அதே தொய்வை உணர முடிகிறது. சக்திவாய்ந்த இரும்புறை அரசனின் ஆவி ஆதியையும் டேனியலை யும் கொல்ல, வண்டி எடுத்துக்கொண்டு சுற்றுவது நம்பும்படியாக இல்லை. இதுபோல சிறு சிறு குறைகள் இருந்தாலும் மரகத நாணயம் ஜொலிக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT