Published : 21 Nov 2014 03:43 PM
Last Updated : 21 Nov 2014 03:43 PM
யார் இவர்?
கல்பனா லாஜ்மியைத் திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என்றெல்லாம் சொன்னாலும், யதார்த்தமான மாற்றுப் படங்களை எடுக்கும் இந்தி இயக்குநர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
“பெண்ணியவாதி என்ற உணர்வுடன் எல்லாவற்றையும் நான் செய்வதில்லை” என்று அவர் சொன்னாலும், அவருடைய பெரும்பாலான படங்கள் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டவைதான்.
அவருடைய ‘ஏக் பல்’, ஒரு பெண்ணின் திருமணத்தைத் தாண்டிய பாலுணர்வு வெளிப்பாட்டைக் கூறியது. ‘ரூடாலி’, ஒடுக்கப்பட்ட பெண்ணைப் பற்றியது. திருநங்கையான தனது ஒரே குழந்தையை ஒரு அம்மா துறப்பதைப் பற்றிய நிதர்சனப் பதிவு ‘தர்மியான்’.
பின்னணி
கல்பனா லாஜ்மியின் அம்மா லலிதா லாஜ்மி ஓர் ஓவியர். குடும்ப உறவுப்படி புகழ்பெற்ற இயக்குநர் குரு தத்தின் மருமகள் கல்பனா. புகழ்பெற்ற இந்தி இயக்குநர் ஷ்யாம் பெனகலின் உதவி இயக்குநராகத் திரை உலகில் கால் பதித்தார்.
அசாமில் பிறந்த பன்மொழிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளராகத் திகழ்ந்த பூபேன் ஹசாரிகாவுடன் தொழில்முறையிலும் தனிப்பட்ட முறையிலும் இணைந்து வாழ்ந்தார் கல்பனா லாஜ்மி. கல்பனா லாஜ்மியின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் பூபேன் ஹசாரிகாதான்.
முதல் அரும்பு
‘டி.ஜி. மூவி பயனீர்’ (1978) என்ற ஆவணப்படம் மூலம் இயக்குநர் ஆனார். அதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து வெளியான ‘ஏக் பல்’ (ஒரு கணம்) அவருடைய முதல் முழுநீளப் படம். ஷபானா ஆஸ்மியும் நசீருத்தின் ஷாவும் நடித்திருந்தார்கள். குல்சாருடன் இணைந்து திரைக்கதையை அவர் எழுதியிருந்தார். பிறகு ‘லோஹித் கினாரே’ (1988) என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.
முக்கியப் படைப்புகள்
1993-ல் மீண்டும் சினிமா பக்கம் வந்த கல்பனா, டிம்பிள் கபாடியாவை வைத்து ‘ரூடாலி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். கதையை எழுதியவர் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி. நம்மூரில் சாவுக்கு ஒப்பாரி வைக்கும் பெண்களைப் போல ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தொழில்முறை ஒப்பாரி வைப்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ரூடாலி என்று பெயர்.
பெற்றோரால் கைவிடப்பட்ட ஷானிசாரி, குடிகாரக் கணவனைப் பெறுகிறாள். மனநலக் குறைபாடுள்ள மகனையும் ரூடாலியையும் விட்டுவிட்டு அவனும் இறந்து போகிறான். இப்படித் தன் வாழ்க்கை முழுக்க இருள் சூழ்ந்தபோதும் ஷானிசாரி கண்ணீர் விடுவதில்லை. ஆனால், வயிற்றைக் கழுவத் தொழில்முறை ஒப்பாரி வைப்பவளாக அவள் மாறுவதுதான் கதை.
இப்படத்துக்குச் சிறந்த நடிகை, சிறந்த கலை இயக்கம் (சமீர் சந்தா), சிறந்த ஆடை வடிவமைப்பு (சிம்பிள் கபாடியா) ஆகிய மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.
அவருடைய ‘தமன்’ - திருமண வன்முறையின் பலிகடா (2001) என்ற படத்தை மத்திய அரசு நிறுவனமான என்.எஃப்.டி.சி. வெளியிட்டது. நம் நாட்டில் பரவலாக இருந்தும் அதிகம் பேசப்படாத நடுத்தர வர்க்கப் பெண்கள், கணவனாலேயே வல்லுறவு கொள்ளப்படும் கொடூரத்தைப் பற்றி ‘தமன்’ பேசுகிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக ரவீணா டான்டண் தேசிய விருது பெற்றார்.
தெரியுமா?
திரைத்துறைக்கு வந்த காலத்தில் ஷ்யாம் பெனகலின் ‘பூமிகா’ படத்தில் துணை ஆடை வடிவமைப்பாளராகக் கல்பனா லாஜ்மி இருந்துள்ளார். தனது படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் இரண்டு வணிகப் பட நாயகிகளுக்குத் தேசிய விருது கிடைக்க லாஜ்மி காரணமாக இருந்தார். தனது படங்களில் பேசப்படும் கசப்பான சமூக உண்மைகளுக்கு நட்சத்திர அந்தஸ்து எனும் இனிப்பைத் தடவிக் கொடுப்பவர் கல்பனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT