Last Updated : 13 Jan, 2017 10:24 AM

 

Published : 13 Jan 2017 10:24 AM
Last Updated : 13 Jan 2017 10:24 AM

எம்.ஜி.ஆரை உருமாற்றிய திரைப்படம்: பெற்றால்தான் பிள்ளையா 50 ஆண்டுகள் நிறைவு

ஜனவரி 17: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு

எம்.ஜி.ஆர் முதலில் தோன்றும் அறிமுகக் காட்சிக்கான மெனக்கெடல்கள் அவரது பெரும்பாலான படங்களில் தீராத நோயாகப் பீடித்திருந்த கட்டத்தில் வெளியானது இந்தப் படம். தான் நடித்த படங்களில் தனக்குப் பிடித்த படம் இது என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார். கிழிந்த சட்டையுடன் தாறுமாறான கோலத்தில் கதாநாயகனான எம்.ஜி.ஆரைக் கதையின் மைய நீரோட்டத்துக்குள் இழுத்துச் சென்ற காட்சிகள் ரசிகர்களைத் திகைக்கவைத்தன. ‘நம் தலைவர் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாக மாறி, இப்படியும் கூட நடிப்பாரா!’ என வியந்து ரசித்தார்கள். அந்தப் படம், தன் வழக்கமான அம்சங்களிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர்.குணச்சித்திரப் பாத்திரம் ஏற்று நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’. இந்த உணர்ச்சிப் போராட்டச் சித்திரம் வெளியான ஆண்டு 1966. இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு.

கதையும் கதாபாத்திரங்களும்

ஜீவாவைக் கிராமத்தில் சந்தித்து ஆசைவார்த்தைகள் கூறி ஒரு குழந்தைக்குத் தாயாகவும் ஆக்கிவிட்ட சேகர் (எஸ்.ஏ.அசோகன்), அவளைக் கைவிட்டுவிட்டு நகரத்துக்கு வந்துவிடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியாக ஜீவா (சௌகார் ஜானகி) நகரத்துக்கு வந்ததும் நடக்கும் சம்பவங்கள் ஜீவாவைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. கையிலிருந்த குழந்தையாவது வாழட்டும் என்று கோயில் பிராகாரத்தில் வைத்துவிட்டுச் செல்கிறார். அதிர்ஷ்டவசமாகக் குழந்தை ஆனந்தனின் (எம்.ஜி.ஆர்) கைகளுக்கு வரவும் கதை வேறு திசைக்கு நகர்கிறது. குழந்தையோடு ஆனந்தன் கொள்ளும் பாசமும் தற்கொலை முயற்சியிலிருந்து தடுக்கப்பட்ட ஜீவா குழந்தையைத் தேடிச் செல்வதில் உண்டாகும் பரிதவிப்பும் மோதிக்கொள்கின்றன.

சௌகார் ஜானகிக்கு இதுபோன்ற பாத்திரங்கள் தனி ஜொலிப்பைக் கொடுக்கக்கூடியவை. மற்ற பாத்திரங்களுக்கும் பழகிவந்த பாதைகள்தான். ஆனால், எம்.ஜி.ஆர். தன் இயல்புகளை விட்டொழித்துத் தனித்த பாத்திரமாகிறார். தான் ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரம் தன் இயல்பில் மாறிவிடாமல் கதையின் மையத்தோடு பொருந்திக்கொள்கிறார். அனாதையாகத் திரியும் ஆனந்தன் அதற்கேற்ற உடைகளோடும் பித்தேறிய மனத்தோடும் ரசிக மனங்களுக்குள் புகுந்துகொள்வதில் சிரமமில்லை.

ஜீவாவைக் கைவிட்டு சுகபோகமாக வாழ முயற்சி செய்கிற சேகர், எதிர்பாராத விபத்தில் கால்களை இழந்ததும் ஜீவாவே தனக்கேற்ற துணைவி என்று மனம் மாறுகிறான். ஜீவாவுக்கோ தன் குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கம். நகர வாழ்வின் கொடுங்கரங்கள் அவளுக்கு மாற்று வழியைக் காட்டவில்லை. சேகரின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சியாகக் கலா மேற்கொள்ளும் அபத்த நாடகம் சேகரின் கண்ணைத் திறந்தபிறகு வரும் காட்சிகள் அந்தப் படத்தை இன்னும் உயர்த்திவிடுகின்றன.

தானே தாயாதல்

பிற படங்களில் எம்.ஜி.ஆர். ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தாயின் அரவணைப்புக்குள் சிக்கிக் கிடப்பதாகும். பல விதமான நெருக்கடிகள் நேர்ந்தாலும் தாயின் நல்லொழுக்கத்துக்கும் அன்புக்கும் மாறான செயல்களை அக்கதாபாத்திரம் செய்வதில்லை. இப்படம் எம்.ஜி.ஆருக்கான முதல் சவாலைத் தாய் கதாபாத்திரம் இல்லாத ஒரு கதைக்களத்தில் நிலை நிறுத்தியது. அவரே தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் மாறுகிறார். வாழ்க்கையைப் பற்றிய அக்கறையில்லாமல் கால் போன போக்கிலெல்லாம் அலைந்து திரிகிற ஆனந்தனுக்குச் சிறுவன் கண்ணனின் இருப்பு வேறு உலகை நிர்ப்பந்திக்கிறது.

விடலைத்தனங்கள், சம்பாத்தியமின்மை, அலட்சியம் என்றிருந்த நிலை மாறுகிறது. கிழிந்த சட்டையோடு தெருவெங்கும் சுற்றித் திரியும் ஆனந்தன், தன் உழைப்புக்குப் பின்னரே நல்ல சட்டையை அணிந்துகொள்ளும் வாய்ப்பை எய்துகிறான். ஆனந்தனுக்கு இருக்க இடமளிக்கிற கபாலியும் மோகினியும் அந்தக் குழந்தையின் வளர்ப்புக்குத் துணைபுரிகிறார்கள். தாயும் தந்தையுமற்ற கண்ணனை முன்வைத்து ஆனந்தனும் மோகினியும் தாயும் தந்தையுமாக மாறும் வாய்ப்பு உருவாகிறது.

ஆனால், குழந்தைக்காகப் பரிதவிக்கும் ஜீவாவும் சேகரும் எடுக்கும் தீர்மானம் ஆனந்தனைப் பெரும் சுழலுக்குள் தள்ளுகிறது. கண்ணன் இல்லையென்றால் ஆனந்தனுக்கு அடுத்த வாழ்க்கை இல்லை. ஆனந்தனின் நிழலில் கண்ணன் வளர்கிறான் என்ற தோற்றம் மாறி, கண்ணனின் நிழலில் ஆனந்தனுக்கு வாழ்க்கை கிடைத்திருப்பதை உணர்கிறோம். கற்பனையான ‘அம்மா’ ஊருக்குப் போயிருக்கிறார் எனக் கண்ணனை நம்பவைத்து அந்தக் கற்பனையில் தன்னைத் தந்தையாக்கிக் கொள்கிற ஆனந்தனின் வாழ்வு என்னாகும்? குழந்தைக்கான போராட்டம் அவனுடைய சொந்த வாழ்க்கைப் போராட்டமாக மாறுகிறது.

ஆனந்தனிடமிருந்து கண்ணனைப் பிரித்தெடுக்கும் சூழல் இருவரையும் பாசப் போராட்டத்துக்குள் தள்ளுகிறது. ஒரு குழந்தை தன் தாயின் இருப்பை எதன் மூலம் உணர்கிறது, ஒரு ஆதரவற்றவனின் தந்தைமை நிலையை எவ்விதம் நிராகரிப்பது என்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஒவ்வொருவரையும் பரிசீலனை செய்ய வைக்கின்றன.. குழந்தை, கதையின் மையமாக அனைத்துக் கதாபாத்திரங்களையும் தன் ஈர்ப்புக் குள் இழுக்கிறது; அதனை மீறி எவரும் வெளியே சென்றுவிட வாய்ப்பில்லை என்பதும் மிகமிக அழகு.

நல்லவேளையாக, எம்.ஜி.ஆருக்குப் பாத்திரத்தோடு ஒன்றும் ஆவேசம்! நீதிமன்றத்தில் வாதாடுவது நல்ல உதாரணம். கண்ணன், அம்மாவிடமிருந்து ஓடோடி வந்து ஆனந்தனின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னோடு அழைத்தாலும், சட்டத்தின் முன் ஏதும் செய்ய இயலாத துரதிர்ஷ்டசாலியாக உறைந்துபோய் நிற்கிறான். குழந்தையை இவ்வுலக நியதிக்குள்ளிருந்து அவனால் இனிமேல் பெற முடியாது.

யாருக்கும் இழப்பில்லை

இறுதியில் எவரும் மறுக்க முடியாத முடிவைப் படம் எட்டுகிறது. இதில் குழந்தையை இழப்பவருக்கும் இழப்பு இல்லை. இயற்கையின் நியதிகளை இவ்வாறு மாற்றியமைப்பது ஒருவகையில் மனிதத்துவத்தின் வெற்றி. உலகமயம் ஆர்ப்பரித்து நிற்கும் இக்காலத்தில் இப்படம் அதற்கு எதிரான மனநிலையை உருவாக்கிச் செல்கிறது. அதற்கேற்ற அற்புதமான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதியிருக்கிறார்.

உணர்ச்சிக்கும் உரிமைக்குமான போராட்டக் களத்துக்குள் நுழைகிற கதாபாத்திரங்கள் ஏராளமானவை. எம்.ஜி.ஆரின் படங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை கைக்கு அடக்கமாகவே இருக்கும். இப்படம் ஏராளமான கதாபாத்திரங்களை உள்ளிழுத்திருக்கிறது. சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா. அசோகன், நம்பியார், தங்கவேலு, டி.எஸ். பாலையா, ஷகீலா என்று பெரிய நட்சத்திரக் கூட்டம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான காட்சிகள். ஒவ்வொரு பாடலும் மெல்லிசை மன்னரின் குழந்தைமைக்கான தாலாட்டும் தன்மை கொண்டது.

பி.என். சுந்தரம், கிருஷ்ணன் பஞ்சு போன்ற தேர்ந்த கலைஞர்களின் பங்களிப்புக்கும் அன்பைப் புகட்டுவதைப்போல வந்த கதையமைப்புக்கும் எம்.ஜி.ஆர். தன் ஆகிருதியைக் களைந்து நட்சத்திரத் தோரணையற்ற நடிப்பால் வண்ணம் தீட்டியிருக்கிறார். அதன் பொருட்டாக இப்படம் அரை நூற்றாண்டுக் காலம் தாண்டியும் நம் நெஞ்சில் இன்னும் நிற்கிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x