Published : 09 Nov 2014 09:51 AM
Last Updated : 09 Nov 2014 09:51 AM
பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நடுவே சமூகப் பிரச்சினையைப் பேசும் படங்கள், எத்தனை அழுத்தமாக பிரச்சினையின் தீவிரத்தைப் பார்வை யாளர்களுக்குக் கடத்துகின்றன என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம். நகைச்சுவை தெறிக்கும் காட்சிகளோடு ஆரம்பிக்கும் இந்தப் படம், கதாநாய கியின் வழியாகப் பிரச்சினையை அறிமுகப்படுத்தி, நாயகனின் அசட்டுத் துணிச்சல் வழியாகத் தீர்வைத் தந்து ‘சுபமாக’ முடிகிறது.
தங்களது கிராமத்துக்குத் தனியாக மதுக்கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அள வுக்கு வெட்டியாகத் திரியும் கிராமத்து இளைஞர்கள் அழகு (விமல்), மைக்கேல் (சூரி). தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கிப் பயணிக்கும் ரயிலில் பயிற்சி மருத்துவர் ப்ரியாவை (ப்ரியா ஆனந்த்) சந்திக்கிறார்கள். ப்ரியாவின் மீது காதல் கொள்ளும் அழகு, அவளைக் கொல்ல வரும் கூலிப்படையிடமிருந்து காப்பாற்றுகிறான்.
தூத்துக்குடியை அடுத்த காயல் பட்டினத்தில் இருக்கும் ஸ்டீல் தொழிற் சாலை ஒன்றில் எவ்விதப் பாதுகாப்பு முறைகளும் கடைபிடிக்கப்படாததால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல வித நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவதையும், அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்த தனது தோழி கல்பனா (விசாகா சிங்) இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த துயரத்தையும் விவரிக்கிறாள் ப்ரியா. இது தொடர்பாகத் தான் சேகரித்த ஆதாரங்க ளைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்ப தையும், வழக்கு விசாரணையில் ஆஜ ராகவே சென்னை செல்வதாகவும் கூறுகி றாள். ப்ரியாவுக்கு உதவ முன்வரும் அழகு, ப்ரியாவைப் பாதுகாப்பாக நீதிமன்றத் துக்கு அழைத்துச் சென்றானா? தொழி லாளர்களுக்கு நீதி கிடைத்ததா? அழகு வின் காதலை ப்ரியா ஏற்றுக்கொண்டாளா என்று கதை நகர்கிறது.
ஓடும் ரயிலில் சக பயணிக்கு பிரசவம் பார்ப்பதும், அடுத்து ரயில் நிற்கும் ஊரில் உள்ள மருத்துவமனையில் தாய் சேய் இருவரையும் அனுமதிக்க ஏற்பாடு செய்வதும் வித்தியாசமான காட்சிகள். கதாநாயகியை அறிமுகப்படுத்தும் காட்சி சுவாரஸ்யமாக உள்ளது.
ஸ்டீல் தொழிற்சாலையில் உள்ள பிரச்சினையை, காட்சிகள், சின்னச் சின்ன வசனங்கள் வழியே புரியவைக்கிறார் இயக்குநர் கண்ணன். காதல் அத்தி யாயத்தை அடக்கி வாசித்துப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
கதையின் முக்கியமான பிரச்சினை நமக்கு அறிமுகம் ஆவதற்குள் நெடு நேரம் கடந்துவிடுகிறது. இவ்வளவு பெரிய பிரச்சினையில் ஒரே நாளில் விசாரணை, தீர்ப்பு என்று காட்சியமைத் துள்ள இயக்குநர் கடைசியில் வாதப் பிரதிவாதங்களால் செய்ய முடியாததை மனிதாபிமானம் செய்வதாகக் காட்டி யிருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?
விமலுக்கென்று உருவாகிவிட்ட டெம்ப் ளேட்டுக்குள் அவரை வசதியாகப் பொருத் துகிறார் இயக்குநர். சூரி சில காட்சிகளில் சிரிக்கவைத்தாலும் பெரும்பாலும் பொறுமையைச் சோதிக்கிறார். தம்பி ராமய்யா வரும் காட்சியிலும் அழுத்தமோ கலகலப்போ இல்லை.
படத்தின் பெரிய பலம் ப்ரியா ஆனந்த். அவரது பாத்திரமும் தோற்றமும் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கின்றன. அடுத்தபடியாக குமரித் தமிழில் குசும்பு பேசிக்கொண்டே வில்லத்தனம் காட்டும் நாசர்.
இமானின் இசையில் ‘ஓடும் ரயிலே…’, ‘சுந்தரிப் பெண்ணே…’ ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில் பாடல்கள் கண்ணுக்குக் குளுமை. அதிலும் அந்த மழைப்பாடல் கொள்ளை அழகு. படம் முழுவதும் சீரியஸாக வரும் ப்ரியா ஆனந்தைப் பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சிப் பாவையாகக் காட்டுகிறார் இயக்குநர்.
இன்றைய முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தொடும் படம், ஆவணப் படம் போலவே கையாளப்பட்டுள்ளது. சிக்க லைக் கையாளும் விதத்தில் கவனத்தை ஈர்க்கும் அம்சம் எதுவும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT