Published : 26 Aug 2016 12:16 PM
Last Updated : 26 Aug 2016 12:16 PM

மும்பை மசாலா: எண்பது வயதுவரை நடிப்பேன்

‘கருவுற்றிருக்கும்போது ஏன் நடிக்கக் கூடாது?’ என்று சமீபத்தில் கரீனா கபூர் கேள்வியெழுப்பியிருக்கிறார். அத்துடன், எண்பது வயதானாலும் நடித்துக்கொண்டுதான் இருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார். நடிப்பின்மீது அவருக்கும் இருக்கும் காதலை இந்த அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தியிருக்கிறார். “என்னுடைய வேலையை மிகவும் நேசிக்கிறேன். என் அம்மாவின் கருவில் இருக்கும் போதிலிருந்தே, நடிகையாக வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். அதனால், எனக்கு எண்பது வயதாகும்வரை என் நடிப்பைத் தொடர்வேன்” என்று சொல்கிறார் கரீனா.

அத்துடன், பெண்கள் கருவுற்றிருக்கும்போது வேலைசெய்யக் கூடாது என்பது ஒரு கட்டுக்கதை என்று தன்னைச் சுற்றி உலாவரும் வதந்திகளுக்கும் பதிலளித்திருக்கிறார். ‘வீரே தி வெட்டிங்’ படத்துக்காக அக்டோபர் மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் கரீனா.

ஒரே மாதிரியாக நடிக்க மாட்டேன்

நடிகை அதிதி ராவ் ஹைதரி, எந்தக் காலத்திலும் திரைப்படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். “எனக்குப் படங்கள் பற்றியும், திரையுலகைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், எப்படியிருந்தாலும் ஒரே மாதிரியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களுக்கு நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் வேண்டும். அதுதான் முக்கியம். அத்துடன் வித்தியாசமான படங்களில் நடிப்பது அலாதியான அனுபவம். என்னைப் பொறுத்தவரை, வித்தியாசமான கதைசொல்வதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது” என்கிறார் அதிதி.

இவர் அடுத்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சவால்களை விரும்புகிறேன்

‘நில் பத்தி சன்னாட்டா’ படத்தில் வீட்டு வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைக் குவித்த ஸ்வரா பாஸ்கர், தன் அடுத்த படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கவிருக்கிறார்.

ஆதித்யா கிருபளானியின் ‘டிக்லி அண்ட் லக்ஷ்மி பாம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படம் இரண்டு பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பற்றியது. இதில் 22 வயது டிக்லி கதாபாத்திரத்தில் ஸ்வரா நடிக்கவிருக்கிறார். மராத்திய நடிகை விபாவரி தேஷ்பாண்டே லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “இந்தக் கதாபாத்திரம் உண்மையிலேயே சவாலானது. இதற்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை நேர்மையாக இந்தப் படம் பதிவுசெய்யும்” என்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

கால்ஃப் விளையாடியதில்லை

‘ஃப்ரீக்கி அலி’ படத்தில் கால்ஃப் வீரராக நடிக்கிறார் நவாஸுத்தீன் சித்திக்கீ . இதுவரை வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படத்தில் நடித்துவந்த நவாஸுத்தீன், முதன்முறையாக ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கவிருக்கிறார். “நான் சிறு வயதில் கோலிக்குண்டுகளைவைத்துதான் விளையாடியிருக்கிறேன். எனக்கு இந்த கால்ஃப் விளையாட்டு புதியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னால் நன்றாக விளையாடிப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ரசிகர்களுக்கு ‘ஃப்ரீக்கி அலி’ பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் நவாஸுத்தீன்.

இந்தப் படம், ஆடம் சாண்டலரின் ‘ஹேப்பி கில்மோர்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என்று பரவும் தகவலை மறுத்திருக்கிறார் இயக்குநர் சோஹேல் கான்.

இந்தப் படம் ‘பார் பார் தேகோ’ படத்துக்குப் போட்டியாக செப்டம்பர் 9-ம் தேதி வெளிவருகிறது.

அக் ஷய் புகழ்பாடும் ரன்வீர்

பாலிவுட்டில் முழு ஆற்றலுடன் திகழும் நடிகர் அக் ஷய் குமார்தான் என்று தெரிவித்திருக்கிறார் ரன்வீர் சிங். “பாலிவுட்டில் எல்லோருடைய ஆற்றலும் வியக்கத் தகுந்ததுதான். ஆனால், எப்போது ஆற்றலுடன் திகழும் நடிகர் என்றால், என் மனதில் முதலில் வரும் பெயர் அக்கி சார் (அக் ஷய் குமார்). அதற்குக் காரணம் அவர் புகைபிடிக்காமலும், மது அருந்தாமலும் இருப்பதுதான். அத்துடன் அவர் தினமும் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு அவரை முன்னுதாரணமாகச் சொல்லலாம்” என்கிறார் ரன்வீர்.

தற்போது, ரன்வீர் சிங், வாணி கபூருடன் இணைந்து ‘பேஃபிக்ர’ படத்தில் நடித்துவருகிறார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதித்யா சோப்ரா இந்தப் படத்தை இயக்குகிறார். டிசம்பர் 9 அன்று இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x