Published : 13 Jan 2017 10:24 AM
Last Updated : 13 Jan 2017 10:24 AM
இந்தியாவில் 1970-களில் பெரிய அலையாக உருவெடுத்த மாற்று சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இன்று நம் மத்தியிலிருந்து விடைபெற்றுவிட்டார். இந்தி தவிர்த்த சில பிராந்திய மொழிப் படங்களிலும், ஆங்கில, பாகிஸ்தானியப் படங்களிலும் நடித்து இந்தியாவின் தலைசிறந்த நடிகராகப் போற்றப்படும் அவர் ஓம் புரி. நடிகனுக்கான தோற்றம் இல்லையென்று நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கு மறுக்கப்பட்டவர். ஒரு நடிகனுக்கு நடிப்புத் திறன் தான் அவசியமே தவிர, பொலிவான தோற்றம் அவசியமல்ல என்று கூறி அந்த இளைஞனை புனே திரைப்படக் கல்லூரியில் சேர்த்துக் கொண்டவர் நாடக ஆளுமையும் நடிகருமான கிரிஷ் கர்னாட்.
கடினப்பட்ட இளமை
பஞ்சாபின் ஒரு சிறுகிராமத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் சங்கோஜியாக, கொந்தளிப்பான உணர்வுகளுடன் தன் இளம் பிராயத்தைக் கழித்தவர். ஓம் புரியின் தந்தை சிறையில் இருந்ததால், ஏழு வயதில் தேநீர் கடையில் குவலைகளைக் கழுவி குடும்பத்துக்காகச் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. வீட்டில் அடுப்பெரிக்க, ரயில் பாதைகளில் நிலக்கரியைச் சேகரித்திருக்கிறார். வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், டியூசன் எடுத்து தனது செலவுகளைச் சமாளித்திருக்கிறார்.
குழந்தைப்பருவத்தில் ராணுவ வீரனாக ஆசைப்பட்ட ஓம் புரி, பஞ்சாபி நாடகம் ஒன்றைப் பார்த்து நடிகனாக முடிவுசெய்தார். பஞ்சாப் கலா மஞ்ச் என்ற பிரபலமான நாடக குழுவில் சேர்ந்து நடிப்புக் கலையை முறையாகப் பயின்றிருக்கிறார். அப்போது 150 ரூபாய்தான் அவரது மாதச்சம்பளம். நாடகக் குழுவினரின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் சேர்ந்துதான் அந்த ஊதியம்.
வாழ்க்கையுடன் ஒத்துபோன கதாபாத்திரங்கள்
புனே திரைப்படக் கல்லூரியில் அவருடன் படித்த நஸ்ரூதின் ஷாவைப் போல வணிக சினிமா நட்சத்திரமாகும் தோற்றம் அவருக்கு இல்லை. தேசிய நாடகப் பள்ளியில் படிக்கும்போதும், புனே திரைப்படக் கல்லூரியிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பே அவர் சினிமாவில் கால்பதிக்கக் காரணமாக இருந்தது. அந்தக் காலகட்டத்திலும் அவர் தனது அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க மிகவும் சிரமங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.
ஓம் புரியின் நடிப்புத் திறனையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் படங்களும், அக்காலகட்டத்தின் ஏமாற்றங்களையும் அபிலாஷை களையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங் களும் அவருக்கு அமைந்தன. அவை பூரியின் வாழ்க்கையுடன் ஓரளவு ஒத்துபோன கதாபாத்திரங்கள் என்பதுதான் எதிர்பாராமல் அமைந்த அவரது தொடக்ககால திரை வாழ்க்கையாக அமைந்துபோனது.
நடிப்புக் கூட்டணி
ஆக்ரோஷமான கண்கள் அச்சமூட்டும் அமைதியான முகத்துடன் காலங்காலமாக வன்முறையால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாக வாழ்ந்த ‘ஆக்ரோஷ்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஒருபோதும் மறக்கமுடியாது. நேர்மையான போலீஸ்காரராக அநியாயம் கண்டு கொந்தளிக்கும் ‘அர்த் சத்யா’ திரைப்படம் அவரைப் பிரமாதமான நடிப்புக் கலைஞர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. அம்மைத் தழும்புகள் கொண்ட முகம், மெலிந்த உருவத்துடன் ஓம் புரி இந்திய சினிமாவின் ஆண் நடிகனுக்கான உருவத்தை மறுவரையறை செய்தார். ஆக்ரோஷ் மற்றும் அர்த் சத்யாவின் வணிக வெற்றி அவரது பொருளாதார சிரமத்தைக் குறைத்தது எனலாம்.
நஸ்ரூதீன் ஷா, ஸ்மிதா பாட்டீல் மற்றும் சபனா ஆஸ்மி ஆகியோர் சேர்ந்து 1970-கள் மற்றும் 80-களில் எடுக்கப்பட்ட மாற்று சினிமாக்களின் பிரதான நடிப்புக் கூட்டணியாக அறியப்பட்டிருந்தனர். சியாம் பெனகல், கோவிந்த் நிஹ்லானி போன்ற இயக்குநர்களின் கனவுக்கு வடிவம் கொடுத்த நடிகர்கள் இவர்கள்.
80-களின் இறுதியில் மைய நீரோட்ட இந்தி சினிமாக்களிலும் பிரதான கதாபாத்திரங்களில் ஓம் புரி எளிமையாக தன்னைத் தகவமைத்துக் கொண்டார். ‘கயல்’, ‘ப்யார் டு ஹோனா ஹி தா’, ‘சைனா கேட்’, ‘ம்ரித்யுதாந்த்’, ‘சாக்சி 420’ தொடங்கி ‘மிர்சியா’ வரை சிறியதும் பெரியதுமான கதாபாத்திரங்களில் ஜொலித்தார். அவ்வை சண்முகியில் டெல்லி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தை ‘சாக்சி 420’ இல் அருமையாக நிறைவேற்றியவர் ஓம் புரி. பிரிட்டிஷ் சினிமாக்களில் ரசிகர்கள் அறிந்த ஆசிய முகமாக நடித்த ‘மை சன் தி பேனடிக்’, ‘ஈஸ்ட் இஸ் ஈஸ்ட்’ படங்கள் புகழ்பெற்றவை. ‘சிட்டி ஆப் ஜாய்’, ‘வுல்ப்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் பங்குபெற்றிருக்கிறார்.
தீனி கிடைக்காத திறமை
அருமையான குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட ஓம் புரிக்கு, 90-களுக்குப் பிறகு அவரது திறமைக்கான படங்கள் அமையாதது குறித்து வருத்தம் இருந்தது. அவரது ரசிகர்களுக்கும்தான். புதிய மாற்று சினிமா ஒரு அலையாக எழுந்து அடங்கியதில், படைப்புணர்வுக்குத் தீனி கிடைக்காமல் போன திறமைகளில் அவரும் ஒருவர். ‘மிர்ச் மசாலா’, ‘தாராவி’, ‘காந்தி’, ‘பவ்னி பவாய்’ , ‘பஜ்ரங்கி பைஜான்’ போன்ற சிறந்த படங்களுக்காக நினைவுகூரப்படும் ஒருவர், பின் ‘புலாயே பாரதி’ போன்ற மசாலாக்களிலும் நடித்தார்.
அந்த விரக்தியும் சங்கடமும் அவரது பிந்தைய நாட்கள் முழுவதும் அவரிடம் இருந்தது. கொந்தளிப்பான பால்யமும் அவரது ஆளுமையை வருத்திக் கொண்டே இருந்ததாக அவரது நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். எப்படியிருப்பினும் ஓம் புரி, இந்திய சினிமாவின் மிகப் பக்குவமான நடிகர்களில் ஒருவராக என்றும் நினைவுகூரப்படுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT