Published : 24 Mar 2017 10:06 AM
Last Updated : 24 Mar 2017 10:06 AM
நல்ல தமிழில் சினிமாப் பாட்டெழுதும் ஆர்வத்தில் சினிமாத் துறைக்கு வந்திருப்பவர் பாடலாசிரியர் கதிர் மொழி. திருச்செங்கோடு அருகே வையப்ப மலையைச் சார்ந்த இவர் கணினி அறிவியலில் இளங்கலையும் தமிழில் முதுகலையும் முடித்திருக்கிறார். மருதகாசியின் பாடல்கள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பாடல்கள் பற்றிய ஆய்வு முயற்சியின் போது திரைப்பாடல் மீது காதல் பிறந்துள்ளது.
கதிர் மொழி எழுதிய முதல்படம். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ‘ரசிகர் மன்றம்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'தப்பெடுத்து அடிக்கையிலே சிதறுதடா விலங்கு,' என்றப் பாடலில் ‘வலிக்காத வரலாறு ஒரு போதும் இனிக்காது, ‘வெடிக்காத துப்பாக்கி விறகுக்கும் உதவாது” என்று எழுதியிருந்ததை அறிந்து அறிவுமதி அழைத்துப் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். இடையில் குடும்ப சூழல் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியிருந்த இவர் மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்.
இன்று மலிவான மொழியுடன் கூடிய ஓசையின் விளையாட்டே திரைப்பாடல் என்பதுபோல் ஆகிவிட்டது. நீங்கள் எப்படித் தாக்குப் பிடிப்பீர்கள்?
நல்ல வரிகளும் நயமான இசையும் கொண்ட திரைப் பாடல்கள்தான் காலம் நடந்து நிற்பவை. இந்த வகையில் எழுதவே எனக்கு விருப்பம். அன்புச் சகோதரர் அறிவுமதி என்னை வாழ்த்தியபோது, ஆங்கிலம் கலக்காது எழுது; கண்ணியமாக எழுது என்றார். அதையே நானும் பின்பற்றுவேன். நான் கண்ணியமாகத்தான் பாடல் எழுதியே தாக்குப்பிடிப்பேன் என்கிறார்.
மெட்டுக்குப் பாட்டு வசப்பட்டுவிட்டதா?
வெறும் வார்த்தைகள் நல்ல பாடல்களைத் தந்துவிடாது. வாசிப்பு அனுபவம் இருப்பதால் செறிவான வரிகளை என்னால் தர முடியும். டி.இமான் இசையில் ‘உச்சி தனை முகர்ந்தால்' படத்தில் 'வரிப்புலி இனத்தை நரிநகம் கீறுதே' என்று எழுதியது பலருக்கும் பிடித்தது. அண்மையில் வந்துள்ள ‘என்னோடு விளையாடு' படத்தின் ‘காலை தேநீர் கையில் ஏந்தி’ பாடலும் பலரைக் கவர்ந்ததே. இவை மெட்டுக்கு எழுதியவைதான்.
இப்போது எந்தப் படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்?
பாலாஜி தரணிதரன் இயக்கும் ‘ஒரு பக்கக் கதை’ படத்துக்கும் பாலாஜி கேசவன் இயக்கத்தில் 'நெஞ்சமெல்லாம் காதல்' படத்துக்கும் இதுபோக 3 புதிய படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளேன்.
உங்களுக்குப் பிடித்த கவிஞர்?
அன்றைய உடுமலை நாராயணகவி முதல் இன்றைய யுகபாரதி வரை எளிமையால் கவர்ந்தவர்கள் பலருண்டு. அது ஒரு பெரிய பட்டியல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT