Last Updated : 05 Dec, 2013 12:00 AM

 

Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM

‘எனக்குத் தேவை ஒரு கமர்ஷியல் வெற்றி’

பூர்ணாவுக்கு இந்த டிசம்பர் மிகவும் முக்கியமான மாதம். அவர் நடித்த ‘ஜன்னல் ஓரம்’ ரிலீசாகி ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் அவர் நடித்த ‘தகராறு’ படம் டிசம்பர் 6 ம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்த இரு படங்களின் வெற்றியை நம்பியிருக்கிறார் பூர்ணா. இந்த டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்த பூர்ணாவை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

தமிழுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆச்சே? எங்க இருக்கீங்க?

ஆமாம். ‘தகராறு’ எனக்கு 7 வது படம். 2012 முழுக்க ஒரு படமும் ரிலீஸ் ஆகல. இப்ப கடவுளின் பரிசா இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் ‘தகராறு’ படம் வெளிவந்தபின் நிச்சயம் தமிழில் எனக்கு ஒரு பிரேக் கிடைக்கும். இதை நான் பேட்டிக்காக சொல்லவில்லை. படத்தைப் பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள். நான் நல்ல கதைக்காக நிறைய படங்களை தவிர்த்து வர்றேன். அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

கிளாமர் சுத்தமா ஆகாதுன்னு சொல்லிட்டீங்களாமே?

மாடர்ன் டிரெஸ் உடுத்தி நடிப்பேன். ஆனா கிளாமரா நடிக்க மாட்டேன். தெலுங்கில் நிறைய படங்களை அதுக்காகவே தவிர்த்திருக்கேன். மாடர்ன் உடைகள் பேண்ட், ஷர்ட்ஸ் என்று ஒரு எல்லையோடு அமைந்திடும். கிளாமர் அப்படி இல்லை. அது எனக்கு சுத்தமா நல்லாருக்காது. என்னதான் இருந்தாலும் கிராமத்துப் பொண்ணா வந்து நடித்துப் போவதில் இருக்கும் சந்தோஷமே தனி. எனக்கு அந்த சந்தோஷம் போதும்.

உங்களை ஷம்னான்னும் கூப்பிடறாங்களே? அது என்ன ஷம்னா?

பெற்றோர் வைத்த பேர் இது. மலையாள சினிமாவில் இப்பவும் ஷம்னாவாகத்தான் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னட பூமி முழுக்க பூர்ணாதான். சின்ன வயது முதலே இருக்கும் பேராக இருந்தாலும் பூர்ணா எனக்கு ரொம்பவும் பொருத்தமான, பிடித்தமான பெயர்.

பூர்ணாவை மாஸ் ஹீரோக்களின் பட நாயகியாக எப்போது பார்க்கலாம்?

எனக்கும் ஆசைதான். அந்த அதிர்ஷ்டம் இன்னும் அமையலை. விஜய்கூட, ‘‘பூர்ணா, நடிகை அசின் மாதிரி இருக்காங்க!’’ என்று சொன்னாரே தவிர தன்னோட படத்தில் நடிக்க அழைப்பு வைக்கவில்லையே(சிரிக்கிறார்). இங்கே, முதலில் ஒரு நல்ல கமர்ஷியல் ஹிட் படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அப்போதான் மாஸ் ஹீரோக்களின் படங்களைத் தொட முடியும்.

சினிமா உலகம் போட்டி நிறைந்ததாக இருக்கிறதே?

வேலை பார்க்கும் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஊழியர் வந்துவிட்டாலே போட்டி ஆரம்பமாகிவிடுகிறது. நட்பாக இருந்தாலும் மேடையில் ஒரு நிகழ்ச்சி என்று வரும்போது அங்கு போட்டி இருக்கத்தானே செய்யுது. அது நடிப்பில் இருக்கக்கூடாதா, என்ன? அதுக்கும் ஒரு எல்லை இருக்கணும். ஒருவர் கிளாமர் கேரக்டரில் அசத்தலா நடிச்சு தொடர்ச்சியா படம் செய்கிறார், என்றால் அங்கே போய் நானும் போட்டிபோட்டுகொண்டு இருக்க மாட்டேன். ‘ஜன்னல் ஓரம்’ படம், ‘ஆர்டினரி’ என்ற பெயரில் மலையாளத்தில் வந்தபடம். அந்தப்படத்தில் நாயகி நடித்ததைவிட, பாவனைகளை புதுசா கொடுக்கணும்னு விரும்பி முயற்சி செய்தேன். என்னைப்பொருத்தவரைக்கும் அதுதான் போட்டி.

நடிகையானதால் இழந்த சந்தோஷங்கள்?

குடும்பம். வீட்டில் ஐந்து குழந்தைகளில் ஒருத்தி நான். 3 சகோதரிகள், 1 அண்ணன். கடைக்குட்டி நான்தான். சின்ன வயதில் எல்லாம் குடும்பத்தோட கலகலனு பொழுதை போக்குவோம். இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறோம். பேசாமல் சின்ன பிள்ளைகளாகவே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இப்பவும் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் குடும்பத்தோட நேரம் செலவிடுவதில்தான் இருப்பேன். அவங்கதான் என் க்ளோஸ் பிரண்ட்ஸும்கூட.

பிடித்த நடிகை?

நயன்தாரா.

புத்தாண்டு வரப்போகுதே. என்ன திட்டம் வச்சிருக்கீங்க?

கொச்சின்ல இருக்கிற என்னோட புது வீட்டில் அம்மா, அப்பாவோட புத்தாண்டை கொண்டாடப் போறேன். வரும் ஆண்டு சாப்பாட்டை நிறையவே குறைக்கணும்னு இருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x