Published : 01 Jul 2016 11:24 AM
Last Updated : 01 Jul 2016 11:24 AM
சரித்திரம் தொடங்கிய கணம்
‘ட்ராகன் - தி ப்ரூஸ் லீ ஸ்டோரி’ என்ற திரைப்படம் சோனி பிக்ஸ் சானலில் திரையிடப்பட்டது. ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடக்கத்தில் ப்ரூஸ் லீக்குச் சிறிதும் இஷ்டமில்லை என்ற தகவல் வியப்பாக இருந்தது. ‘தி பிக் பாஸ்’ என்ற ஹாங்காங்கில் வெளியான திரைப்படத்துக்குப் பிறகு, அவர் அங்கு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வார்னர் பிரதர்ஸிலிருந்து அழைப்பு வர அதை ஏற்க மறுக்கிறார், அவரது அமெரிக்க மனைவி லிண்டாவின் வற்புறுத்தல் காரணமாகப் பெரும் கோபத்துடனும் அரைகுறை மனதுடனும் அந்த அழைப்பை ஏற்கிறார், உருவாகிறது ‘என்டர் தி டிராகன்’. மற்றவை சரித்திரம்!
‘கனி’வான பலன்!
‘நல்ல காலம் பிறக்கிறது’ என்ற சன் டிவி நிகழ்ச்சியில் ஒரு ஜோதிடர் பல்வேறு ராசிக்காரர்களுக்கான கணிப்புகளைக் கூறினார். ’இவை ஜோதிடரின் கருத்துகளே’ என்ற அறிவிப்புடன் நிகழ்ச்சி தொடங்கியதுபோது வேறு யாருடைய கருத்து என்று நினைத்துக்கொள்வோம் என்ற வியப்பு உண்டானது.
வழக்குகளுக்கெதிரான கேடய வார்த்தைகள் என்பதும் புரிந்தது (’பொறுப்புத் துறப்பு’ என்ற வார்த்தைகளைவிட இவை பரவாயில்லைதான்). இதில் அந்த ஜோதிடர் ‘சந்திராடஷ்டமம் என்பதால் மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நாளைத் தொடங்குங்கள்’ என்றும் வேறொரு ராசிக்காரருக்கு ‘பலாப்பழத்துடன் நாளைத் தொடங்குங்கள்’ என்றும் கூறியது ‘கனி’வு. ஆனால் ஜோதிடத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட தீவிர டயபடிக் அன்பர்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
உதைக்கும் கார்!
‘ஹிஸ்டரி’ சானலில் முகமது ரயீஸ் என்பவரின் ஒன்றரை வருட ஆராய்ச்சியின் பலனைக் காட்டினார்கள். தண்ணீரிலேயே ஓடும் கார்! மாருதி 800 கார் ஒன்றின் இன்ஜினை மாற்றியமைத்து இதைச் செய்திருக்கிறார்.
கால்ஷியம் கார்பைடுடன் தண்ணீரைச் சேர்த்து அசிடிலின் வாயுவை உருவாக்கி எரிபொருளாக்கியிருக்கிறார். அதிக பட்சம் மணிக்கு 60 கிலோமீட்டர்தான் போகுமாம். ஆனால் இந்த எரிபொருள் பெட்ரோலைவிட மிக எளிதில் பற்றிக் கொள்ளக்கூடியது என்ற தகவல்தான் உதைக்கிறது.
போக்குக் காட்டும் காசோலை!
‘கௌன் பனேகா க்ரோர்பதி’யிலிருந்து ‘உங்களில் யார் கோடீஸ்வரன்’ வரை ஒரு சடங்கு தொடர்கிறது. ஒரு கட்டத்தைத் தாண்டிய பிறகு ஒவ்வொரு சரியான பதிலைத் தொடர்ந்தும் ஆங்கர் தன் கையெழுத்திட்ட காசோலை ஒன்றைப் பங்கேற்பாளருக்கு நீட்டுகிறார்.
அதைப் பங்கேற்பாளர் வாங்க முயற்சிக்கும்போது புன்னகையுடன் ‘இதை இப்போ உங்களுக்குக் கொடுக்கப் போறதில்லை’ என்றபடி அதைத் தானே வைத்துக்கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்கிறார். விநோதமாக இருக்கிறது.
எது தேவை?
ஆயிரம் முடிகளை உங்கள் வெறுமைத் தலைப்பரப்பில் பொருத்த 70,000 ரூபாய் ஆகும் என்ற தகவலை ஒரு டாக்டர் சன் நியூஸ் சானலில் கூறினார். தலைமுடிக்கு ஆசைப்பட்டு உயிரை இழந்த இளைஞரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ‘அது’ தேவையா? உயிர் தேவையா? என்ற பட்டிமன்றக் கேள்விக்கு வழிவகுத்துவிட்டதே இந்த நிகழ்வு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT