Published : 24 Jun 2016 11:10 AM
Last Updated : 24 Jun 2016 11:10 AM

கோலிவுட் கிச்சடி: அதிரடியாக இரண்டு படங்கள்!

அதிரடியாக இரண்டு படங்கள்!

பிசாசு படத்துக்குப் பிறகு நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவந்த மிஷ்கின் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பியிருக்கிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்குத் ‘துப்பறிவாளன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டார் மிஷ்கின். கோடம்பாக்கத்தின் பிரபல திரைப்பட நிதியுதவியாளர் ரகுநந்தனின் மகன் மைத்ரேயாவைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மறைந்த நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா.

மாறுபட்ட பெண் இயக்குநர்

இயக்குநர் சுசீந்திரனின் பட்டறையிலிருந்து வந்திருக்கிறார் உஷா கிருஷ்ணன். ‘ராஜா மந்திரி’ படத்தின் இயக்குநர். சுசீந்திரனின் ‘ஜீவா’ உட்பட சில படங்களில் பணியாற்றியவர். வழக்கமாகப் பெண்களின் உலகையே அதிகம் படமாக்க விரும்பும் பெண் இயக்குநர்களிலிருந்து இவர் மாறுபட்டிருக்கிறார் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். கலையரசன் கதாநாயகனாகவும் காளி வெங்கட் முக்கியமான துணைக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் இந்தப் படம் இன்று வெளியாகிறது. இசை, ஜஸ்டின் பிரபாகரன்.

தாய்லாந்தில் ஆர்யா

‘பெங்களூர் நாட்கள்’ ஆர்யாவுக்குக் கைகொடுக்காத நிலையில் தற்போது அவர் நம்பியிருக்கும் படம் ‘கடம்பன்’. ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்காகத் தற்போது தாய்லாந்தில் இருக்கிறார் ஆர்யா. இந்தப் படத்துக்காகத் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஒரு மல்யுத்த வீரர்போல் ஆகியிருக்கிறாராம். கேத்ரின் தெரஸா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளைச் சுற்றிப் படமாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிக் கட்டக் காட்சிக்காக தாய்லாந்தில் முகாமிட்டிருக்கிறது படக்குழு. அங்கே அதிரடியான மார்ஷியல் ஆர்ட் சண்டைக்காட்சியில் நடிக்கிறாராம் ஆர்யா.

தாதா தனுஷ்

‘பொல்லாதவன்’, ஆடுகளம்’ படங்களைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முன்றாவது படம் ‘வடசென்னை’. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் இதில் தனுஷுக்கு சமந்தா, ஆன்ட்ரியா என இரண்டு ஜோடிகள். சமுத்திரக்கனிக்கு முக்கியக் கதாபாத்திரம். மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் தாதாவாக நடிக்கிறார் என்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு

2012-ல் வெளியாகி பாராட்டுகளையும் வசூலையும் அள்ளிய படம் ‘மௌன குரு’. அருள்நிதிக்கு திருப்புமுனையாக அமைந்த அந்தப் படத்தை இயக்கிய சாந்தகுமார் அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் காத்திருந்தார். தற்போது ‘க்ரீன் ஸ்டூடியோ’ நிறுவனத்துக்காக கார்த்தியை இயக்கத் தயாராகிவிட்டார்.

இதற்கிடையில் இவரது ‘மௌன குரு’ படத்தை இந்தியில் கதாநாயகிக்கான கதையாக மாற்றி அமைத்து ‘அகிரா’ என்ற பெயரில் மறுஆக்கம் செய்து முடித்திருந்தார் ஏ.ஆர். முருகதாஸ். தான் ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருக்கும் அந்தப் படம் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக சோனாக்‌ஷி மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்.

அரசியலுக்கு நடுவே இசை

வாட்ஸ் அப்பை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவைப் படம் ‘பகிரி'. வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி' என்று பொருள்படும் விதத்தில் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்களாம் இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனாக பிரபு ரணவீரன்.

இவர் விஜய் டிவியின் ‘கனாக்காணும் காலங்கள்’ தொடரில் நாயகனாக நடித்தவர். நாயகி ஷர்வியா, ஆந்திர வரவு. இந்தப் படத்துக்கு இசையமைத்துவருபவர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ். அரசியல், நடிகர் சங்க வேலைகள், நடிப்பு இவற்றுக்கு நடுவே இசையமைக்கவும் நேரமிருக்கிறதாம் கருணாஸுக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x