Published : 29 Sep 2013 04:44 PM Last Updated : 29 Sep 2013 04:44 PM
தி லஞ்ச் பாக்ஸ் - நெகிழ்ச்சியும் அதிர்ச்சியும்
'தி லஞ்ச் பாக்ஸ்' படத்தைப் பார்த்து நெகிழ்ந்து ட்வீட்களால் பாராட்டு மழை பொழிந்த இந்தி திரையுலகினர், அப்படம் இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வு செய்யப்படாததில் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மும்பையின் அடையாளமாகவே திகழும் 'டப்பா வாலா'க்களின் அன்றாட வாழ்க்கையை ஆவணப் படமாக பதிவுசெய்ய திட்டமிட்டார், இயக்குநர் ரித்திஷ் பத்ரா. அதற்கான களப்பணிகளில் ஈடுபட்டபோது, கிடைத்த சுவையான சம்பவங்களை அடிப்படையாகவே வைத்து திரைப்படமே எடுத்துவிடலாம் என்று முடிவு செய்ததன் விளைவாக உருவானதே 'தி லஞ்ச் பாக்ஸ்'.
இப்படத்தின் திரைக்கதையை 2011ல் முடித்த இயக்குநர், முழு ஸ்கிரிப்டையும் ரொட்டர்டாம், பெர்லின், டோரினொ உள்ளிட்ட சர்வதேச பட வழாக்களுக்கு அனுப்பினார். அப்போது இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு இதன் மீது இந்தியின் முன்னணிப் படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது.
கடந்த ஆண்டு ரூ.10 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் தயாரிப்பாளர்களில் அனுராக் கஷ்யாப்பும் ஒருவர். சுமார் 6 மாத கால ஒத்திகைக்குப் பிறகு, இர்பான் கான், நிம்ரத் கவுர், நவாஸுதீன் சித்திக் உள்ளிட்டோரின் நடிப்பில் இப்படம் தயாரானது.
திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பே '2013 கேன்ஸ் திரைப்பட விழா'வில் திரையிட்டபோது, எதிர்பார்த்ததைவிட பெரும் வரவேற்பு கிடைத்தது. அதில், இப்படம் 'விமர்சகர்கள் விருதை' தட்டிச் சென்றதும் இந்தியாவில் எதிர்பார்ப்பு எகிறியது.
படம் வெளியான தினத்தில், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேசப்பட்ட 'தி லஞ்ச் பாக்ஸ்', திரைப்படக் கலைஞர்கள் தொடங்கி, சினிமா ஆர்வலர்கள் வரை அனைத்து தரப்பாலும் நெகிழ்ச்சிப் பதிவுகளுடன் கொண்டாடப்பட்டது.
என்ன இருக்கிறது லஞ்ச் பாக்ஸில்?
பல்லாயிரம் லஞ்ச் பாக்ஸ்களை, மிகச் சரியாகக் கொண்டு சேர்த்திடும் டப்பா வாலாக்களால், ஒரு லஞ்ச் பாக்ஸ் தவறுதலாக வேறு நபரிடம் போய்ச் சேர்ந்தால் என்ன நடக்கும்? என்கிற சின்ன கருவை நேர்த்தியான திரைக்கதையால் செதுக்கியுள்ளார் இயக்குனர்.
மனைவியை இழந்து தனிமையில் வாழும் இர்பான் கான், தன் அலுவலகத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் ஓய்வுப் பெறப்போகிறார். சக மனிதர்களுடன் சிரிப்பைக் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாத அவரிடம் மிஞ்சி இருப்பது வாழ்க்கை அனுபவமும், மனச் சோர்வும்தான். அதேவேளையில், பணத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் நபரின் நடுத்தரக் குடும்பத்து இளம் மனைவியாக வீட்டில் முடங்கிக் கிடப்பவர் நிம்ரத் கவுர். தான் அனுப்பும் மதிய உணவைச் சாப்பிட்டு, 'நல்லா இருக்கு' என்ற வார்த்தை் கணவனிடம் இருந்து வருவதை உச்சபட்ச சாதனையாகக் கருதும் அவளுக்கு, அந்த அங்கீகாரம்கூட இல்லை.
ஒரு நாள், நிம்ரத் தன் கணவனுக்கு அனுப்பிய லஞ்ச் பாக்ஸ், தவறுதலாக இர்பானிடம் சேர்க்கிறது. இது அடுத்தடுத்த நாள் தொடர, டிபன் பாக்ஸில் துண்டுச் சீட்டின் மூலம் விஷயத்தைச் சொல்கிறாள் நிம்ரத். அதற்கு இர்பான் அனுப்பும் பதில், நம் புருவங்களையும் உயர்த்தும் வகையறா. இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம். அதன் விளைவு... இருவரும் பரஸ்பரம் அனுபவங்களைப் பகிர்ந்து, தங்கள் இயல்பு வாழ்க்கையை அணுகும் முறையை மாற்றி, அதன் மூலம் உளவியல் ரீதியில் பலனடைகின்றனர். இருவரும் நேரில் சந்திக்க முற்படும்போது, இர்பான் எடுக்கும் எடுக்கும் முடிவு, மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. இடையில், இர்பானுக்கு ஜூனியராக வரும் நவாஸுதீன், முகம் காட்டப்படாத நிம்ரத்தின் மேல் மாடி ஆன்ட்டி முதலான கதாப்பாத்திரங்கள், மும்பையின் நடுத்தர மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன.
'ஆஸ்கர்' அதிர்ச்சி
'தி லஞ்ச் பாக்ஸ்' வெளியானதற்கு அடுத்த நாள், சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பிரிவின் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு, இந்தியாவிலிருந்து குஜராத்தி மொழி 'தி குட் ரோடு' தேர்வுசெய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும், இந்தித் திரையுலகில் கடும் அதிர்ச்சி வெளிப்பட்டது. 'தி லஞ்ச் பாக்ஸ்' படத்தைவிட, இந்தியாவின் 'ஆஸ்கர்' பரிந்துரைக் குழுவை 'தி குட் ரோடு' வசீகரித்ததற்குக் காரணம், அப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சமூக விழிப்புணர்வுதான் என்றும் சொல்லப்படுகிறது.
'தி குட் ரோடு' படம் மூலம் இந்தியாவின் ஆஸ்கர் கனவு நனவானல் மட்டுமே இந்த 'தி லஞ்ச் பாக்ஸ்' சர்ச்சை முடிவுக்கு வரும்.
WRITE A COMMENT