Last Updated : 08 Jul, 2016 11:49 AM

 

Published : 08 Jul 2016 11:49 AM
Last Updated : 08 Jul 2016 11:49 AM

சினிமாவுக்குக் கொஞ்சம் குறைவாக நடித்தால் போதும்!- மைம் கோபி நேர்காணல்

மைம் கோபி அலுவலக அறையில் அவருடைய தலைக்கு மேல் செருப்பு தொங்கிக்கொண்டிருக்கிறது. அறையைச் சுற்றிலும் கடிகாரங்கள். என்ன காரணம் எனக் கேட்டால், ‘‘வாழ்க்கையில் நேரம் மிகவும் முக்கியம். கடந்த நேரத்தை மறுபடியும் மீட்க முடியாது. உங்களுடைய செருப்பை மதித்தீர்கள் என்றால் ஒரு மனிதனை மதிப்பீர்கள். ஒரு நாள் செருப்பில்லாமல் சாலையில் நடந்து போய் பாருங்கள், அப்போதுதான் செருப்பின் அருமை தெரியும்’’என்று கூறுகிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

மைம் கலை என்றால் என்ன, அதற்குள் எப்படி வந்தீர்கள்?

இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிறது என்று காட்டுவதுதான் மைம். மைம் என்பது உலக மொழி. உலகில் மனிதன் எப்போது பிறந்தானோ அப்போதே மைம் தொடங்கிவிட்டது. பள்ளியில் படிக்கும்போதே ஆரம்பித்தோம். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதுதான் நாம் செய்வது மைம் என்று தெரிந்தது. மாலிக்தான் எங்களுடைய வாத்தியார்.

முதலில் எந்த விதப் பயிற்சியும் இல்லாமல் மைம் கலையை ரொம்ப மோசமாகப் பண்ணியது நாங்கள்தான். பிறகு கல்லூரியில் தொடர்ந்து பயிற்சி பண்ண ஆரம்பித்தோம். மைம் கலை என்பது மிகவும் மெதுவானது. அதை ஏன் வேகமாக்கக் கூடாது என்று எங்கள் பாணியை மாற்றி அமைத்துக்கொண்டோம். 7 பேர் கொண்ட எங்கள் குழு இங்குள்ள போட்டிகளில் வென்று இந்திய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டது. 100 கோடி மக்கள் இருந்தாலும், அதில் நாம் தனியாகத் தெரிய வேண்டும் என்பதுதான் எங்கள் ஏழு பேருடைய ஆசையும்.

‘குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா, ‘கபாலி' ஒலி அமைப்பாளர் ரூபன், ‘கிட்டு மாமா சுசி மாமி' அருண், சின்னத்திரை நாடகங்கள் இயக்குநர் குறிஞ்சிநாதன், விளம்பர நிறுவனம் நடத்திவரும் சிவகுமார், உதயபிரகாஷ், நான் - இதுதான் அந்த ஏழு பேர் குழு. அனைவருமே வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். நான் மட்டும் மைம் கலையை எடுத்துக்கொண்டேன். இன்றைக்கு எனக்குக் கிடைக்கும் அத்தனை பெயருக்கும் காரணம் மைம் மட்டுமே.

இதன் மீது உங்களுக்கு ஏன் ஆர்வம் வந்தது?

பணம் கிடைத்ததுதான் காரணம். நாங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிகழ்ச்சிகள் பண்ணிக் கொடுத்தால் சுமார் 30 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அது அப்போது பெரிய தொகை. மைம் பண்ணினால் பணம் வரும் என்று தெரிந்தது. எங்களுக்கு என்று ஒரு குழு ஆரம்பித்து, நிறைய நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பித்தோம். பணமும் புகழும் கிடைத்ததன் மூலம் எங்களுக்கு என்று தனித்துவம் கிடைத்தது. அதுதானே வாழ்க்கை.

திரைப்படத்துக்கு மைம் எவ்வளவு தேவை என நினைக்கிறீர்கள்?

என்னிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு, முதல் வேலையாக ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பேன். ஒரு நடிகனுக்கு முதல் தேவை ஒழுக்கம். வணக்கம் சொல்ல வேண்டும், பேசுற வார்த்தைகள் உண்மையாக இருக்கணும், தெளிவாகப் பேசணும், யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது, குறைகளைப் பார்க்கக் கூடாது, நமது வேலையை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் ஆகியவற்றை முதல் விஷயங்களாகக் கற்றுக் கொடுப்போம். இந்த நடிப்பு பயிற்சியை எவ்வளவு அழகாகப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு, திரையில் நடிக்கும்போது பயம் போய்விடும். பயம் போனாலே போதும், வாழ்க்கை ஜெயித்துவிடும்.

உங்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்த நடிகர்களைப் பற்றி சொல்லுங்கள்?

அதை என் வாயால் சொல்லுவதை விட, அவர்கள் வாயால் சொல்லுவதுதான் பெரியது. நான் சொன்னால் தற்பெருமையாகிவிடும். சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒருவருக்கு நான்தான் நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். அவர் எங்கேயுமே என் பெயரைச் சொல்லவே இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரையுலகில் இருக்கும் மக்களில் பாதி மக்கள் என் மக்கள்தான். அந்த வகையில் ரொம்ப சந்தோஷம். அவர்கள் எல்லாம் என் பெயரைச் சொல்லி நான் மேலே வரணும் என்று அவசியமில்லை.

திரையுலகில் எப்படி நுழைந்தீர்கள்? உங்களுடைய முதல் வாய்ப்பு எப்படி அமைந்தது?

ஜி. மாரிமுத்துதான் என்னுடைய முதல் இயக்குநர். கண்ணும் கண்ணும்'தான் என் முதல் படம். அதற்குப் பிறகு சினிமாவே பண்ணக் கூடாது என முடிவு பண்ணினேன். ஏனென்றால் எனக்கு சினிமா கஷ்டமாக இருந்தது. கட், ஷாட் ரெடி எனச் சொல்லும்போது எனக்குப் புதிதாக இருந்தது. சில நாட்கள் கழித்து ஏன் சினிமா பண்ணக் கூடாது என்று சினிமாவில் நடிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மைம் அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் குறைவாக சினிமாவில் நடிக்க வேண்டும் எனத் தெரிந்துகொண்டேன். எனக்கு சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது ‘மெட்ராஸ்'. அதற்கு முழுக்க முழுக்க காரணம் ரஞ்சித் தம்பி மட்டுமே.

‘கபாலி' வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ரஜினி சார்கூட நடிக்க ஒரே காரணமும் ரஞ்சித் தம்பி மட்டும்தான். அவரது படக் குழுவினர் தேர்வு ஒன்று வைத்திருந்தார்கள். போயிருந்தேன். “சின்ன ரோல் ஒன்று இருக்கிறது பண்ணியிரு அண்ணா” என்றவுடன் கண்டிப்பா என்று தெரிவித்தேன். கதாபாத்திரத்தின் புகைப்படம் காட்டும்போது மொட்டை எல்லாம் போட்டிருந்தது. “மொட்டை எல்லாம் அடிப்பியா அண்ணா?” என ரஞ்சித் தம்பி கேட்கவும், என்ன தம்பி இப்படிக் கேட்குற கண்டிப்பா அடிப்பேன் என்றேன். ஏனென்றால் அவருடைய படக் குழுவே ரொம்ப உணர்வுபூர்வமாக இருக்கும். போலியாக ஒரு விஷயம் யாருமே பேச மாட்டார்கள். மனிதனை மதிக்கக்கூடிய ரொம்ப அற்புதமான தம்பி அவர்.

ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

எனக்கு முதல் காட்சியே ரஜினி சார் முன்னால் நடிப்பதுதான். நான் நடித்து முடித்தவுடன் “என்ன கோபி இப்படி நடிக்கிறீங்க, கலக்கிட்டீங்க. என்ன பண்ணிட்டு இருக்கீங்க” எனக் கேட்டார் ரஜினி சார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரஜினி சார் இயல்பான மனிதர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் மதிக்கக்கூடிய ஒருவர் என்றால் அவர் மட்டும்தான். நீங்கள் நன்றாக நடித்து விட்டீர்கள் என்றால் உடனே பாராட்டுதான். பெரிய ஆளு, சின்ன ஆளு என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ரஜினி சார் மாதிரி ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது.

திரையுலகில் உங்களுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள்?

இயக்குநர்கள் பாண்டிராஜ் சார், பாலாஜி மோகன், ஸ்ரீ நாத், அஸ்வின், ரஞ்சித் என அனைவருமே ரொம்பவே ஆதரவு தருவார்கள். நான் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறேன் என்றால் இவர்கள் யாருமே மறுவார்த்தை இல்லாமல் எப்போது என்றுதான் கேட்பார்கள். கடைசியாகப் பண்ணிய நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் சுசீந்திரன், “கோபி.. உனக்கு என்ன வேண்டும் சொல்லு பண்றேன்” என்றார். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெத்தின் மனைவி மாலா மேடம்தான் எனக்குத் திரையுலகில் இருப்பவர்களை அறிமுகப்படுத்திவிட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x