Published : 24 Jul 2015 11:04 AM
Last Updated : 24 Jul 2015 11:04 AM

திரைப் பாடம் 30: ரஷோமான்- உண்மையின் தெளிவற்ற முகம்!

சில படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் சொல்லில் அடங்காதது. ’அந்த நாள்’ படத்தைச் சிறுவனாகத் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவம் அப்படிப்பட்ட ஒன்று. அலட்டிக்கொள்ளாத சிவாஜியின் நடிப்பை முதன்முறையாய்ப் பார்த்தேன். ஒரு புலன் விசாரணை படத்தை இத்தனை கோணங்களில் எடுக்க முடியுமா என்று வியந்தேன். அது எஸ்.பாலச்சந்தரின் படம் (கே.பி. அல்ல; வீணை வித்துவான் இவர்). யார் கொலையாளி என்று தெரியும்போது அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு படம் பெரும் தோல்விக்கு உள்ளானது என்று அறிந்தபோது ஏமாற்றமாக இருந்தது. தமிழ் ரசிகர்கள் அதற்குத் தயாராக இல்லை என்று தெரிந்தது. கதாநாயகன் என்பவன் குற்றம் புரிய மாட்டான் என்ற பொது அபிப்பிராயத்தால் இதுபோன்ற படங்கள் வீழ்ந்தன.

பாடல் இல்லாமல் வந்த முதல் தமிழ்ப் படம் ‘அந்த நாள்’. அது அகிரா குரசோவா இயக்கிய ‘ரஷோமான்’ என்ற படத்தின் தாக்கத்தில் உருவானது என்று பின்னாட்களில் அறிந்தேன். ஆனால் ‘ரஷோமான்’ பார்க்க நீண்ட காலம் பிடித்தது.

அகிரா குரசோவாவை ஆராதிக்காத உலக சினிமா ரசிகர்களோ விமர்சகர்களோ இருக்க முடியாது. 1950-ல் வெளிவந்த இந்தப் படம் ஜப்பானியத் திரைப்பட மொழியையும் கலாச்சாரத்தையும் மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்தது. சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதையும், வெனிஸ் பட விழாவில் தங்கச்சிங்கம் விருதையும் பெற்றது ‘ரஷோமான்’.

இந்தப் படத்தின் கதை சொல்லும் உத்தியைப் பின்பற்றி எடுக்கப்பட்ட படங்கள் பல உள்ளன. தமிழில் கடைசியாக ‘விருமாண்டி’யைச் சொல்லலாம்.

‘ரஷோமான்’ என்று பெயரிடப் பட்டிருக்கும் பாழடைந்த மரக்கட்டடம் ஒன்றில் நடக்கிறது கதை. ஒரு துறவி, ஒரு மரம் வெட்டி மற்றும் மழைக்கு ஒண்ட வந்தவன் என மூன்று பேர் ஒரு கொலையைப் பற்றிப் பேசுகிறார்கள். காட்டில் நடந்திருக்கும் கொலையில் மூன்று விதமான வாக்குமூலங்கள் வருகின்றன. கொலை செய்யப்பட்ட கணவன், உடன் இருந்த மனைவி, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் திருடன் இவர்கள்தான் கதை மாந்தர்கள். கணவன் எப்படிக் கொலையானான்? யார் கொன்றார்கள்? என்ன நோக்கம்? ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு கதை இருக்கிறது.

திருடன் பெண்ணாசையில் கணவனை சூழ்ச்சி செய்து கட்டி வைத்துவிட்டு அவளை அடைந்ததாகச் சொல்கிறான். தான் இருவருக்கு மனைவியாக இருக்க முடியாது என்று சொல்லி இருவரில் ஒருவர் சாக வேண்டும் என்று அவள் கூறியதால் இருவரும் கத்திச் சண்டை போட்டோம். அதில் அவள் கணவனைக் கொன்றேன் என்று வாக்குமூலம் தருகிறான்.

கணவனை இழந்த பெண் தரும் வாக்குமூலம் வேறு மாதிரி உள்ளது. திருடன் தன்னைப் பலவந்தமாக அடைந்த இடத்திலிருந்து அவள் கதை தொடங்குகிறது. கணவனின் பார்வையைத் தாங்க முடியாதவள், “அப்படிப் பார்க்காதீர்கள். அதற்கு பதில் என்னை இந்தக் கத்தியால் கொன்றுபோடுங்கள்” என்று மன்றாடி மயங்கி விழுகிறாள். நினைவு திரும்புகையில் அவள் கணவன் தற்கொலை செய்துகொண்டது தெரிகிறது. இந்த அபலைக்கு இனி என்ன வழி என்று புலம்புகிறாள்.

செத்தவன் ஆவியிடம் உண்மையில் நடந்தது பற்றி குறிகேட்டபோது வெளிப்படும் கதை வேறு மாதிரி இருக்கிறது. தன்னிடம் வல்லுறவு கொண்டவனிடம் ‘என்னை எங்காவது அழைத்துப் போ’ என்று சொல்கிறாள் மனைவி. அதற்கு முன் என் கணவனைக் கொன்றுவிட்டு வா என்று சொல்ல, திருடனே திடுக்கிட்டு, “இவளைக் கொல்லவா?” என்று கேட்கிறான். அவள் தப்பியோட, அவமானத்தால் தான் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறது இறந்தவன் ஆவி.

விறகு வெட்டியின் கதை இப்படிப் போகிறது. அவளை வல்லுறவு செய்த பின் திருடன் அந்த பெண்ணிடம் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கேட்கிறான். அவள் தன் கணவனின் கட்டுக்களை பிரித்துத் திருடனுடன் சண்டையிடச் சொல்கிறாள். அதற்கு அவள் கணவன், “இந்தப் பெண்ணுக்காக நான் சண்டை போடப் போவதில்லை. நீயே அழைத்துப் போ” என்று சொல்கிறான். “அவனைக் கொன்றுவிட்டு என்னை சாகச் சொல். அப்போதுதான் நீ சரியான ஆண்மகன்” என்று மனைவி சொல்ல, இருவரும் சண்டை போடுகிறார்கள். கணவன் கீழே விழ திருடன் வாள் எறிய, மனைவி தப்ப, ரத்தம் தோய்ந்த பெரிய வாளுடன் திருடன் திரும்பி வருவதைப் பார்த்ததாகச் சொல்ல அந்த கதையும் முடிகிறது.

“இதையும் முழுவதுமாக நம்ப முடியவில்லை” என்ற கேள்விக்கு, “இப்படி ஒருவரை ஒருவர் நம்பாவிட்டால் பூமியே நரகமாகும்” என்று துறவி சொல்கிறார். துறவியிடம் உள்ள குழந்தையை விறகு வெட்டி தான் வளர்ப்பதாக வாங்கிக்கொள்ளும்போது, “உங்களைப் பார்க்கும்போது மனிதர்களை இன்னமும் நம்பலாம் எனத் தோன்றுகிறது!” என்று சொல்கிறார்.

“எப்படி இறந்தான் கணவன்?” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் முடிகிறது படம். எல்லாக் கேள்விகளுக்கும் எல்லா நேரங்களிலும் சரியான பதில் கிடைக்கின்றதா என்ன?

ஒவ்வொரு கண்ணோட்டமும் ஒவ்வொரு கதை. அப்போது ஒவ்வொரு கதையிலும் பல கதைகள் உள்ளன அல்லவா? இதில் எது நிஜக் கதை? எத்தனை கதைகளில் நிஜத்தை ஊர்ஜிதப்படுத்த முடியும்? சாட்சியங்கள், தடயங்கள், வாக்குமூலங்கள் எனக் கிடைப்பதைக் கொண்டு முடிவுக்கு வரும் வழக்குகளில் உண்மை முழுமையாக வெளிப்படுகிறதா? நடந்த கதையைப் பின்னோக்கிப் பார்த்தால் நியாயம் கிட்டுமா? இப்படிப் பல கேள்விகளை முன்வைக்கிறது இந்தப் படம்.

அகிரா குரசோவாவின் மேதைமை பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். ஒவ்வொரு கதை சொல்லலுக்கும் தனித்தனியான பாணி, வேகம், உரையாடல், உடல்மொழி என அமர்க்களப்படுத்தியிருப்பார் அகிரா.

இது காலத்தை வெல்லும் படைப்பு. உளவியலில் ‘subjective reality’ என்ற ஒன்றைச் சொல்வார்கள். தான் காணும் தனி உலகம் அது. தனக்கான நியாயம் அதில் இருக்கும். அவரவர் கதையில் அவரவர் நியாயம் இருக்கும். இதில் இருவருக்குமான பொது நியாயம் கற்பிக்க நினைக்கும்போதுதான் எவர் சொல்வதில் எவ்வளவு எடுத்துக்கொள்வது என்ற குழப்பம் வருகிறது.

திருமணச் சிக்கல் என என்னிடம் ஆலோசனைக்குப் பலரும் வரும்போது இது நடக்கும். “பெண் தங்கம் சார். அந்தப் பையன்தான் சீரழிச்சிட்டான்” என்று ஒருபுறமும் “பையன் ரொம்ப வெகுளி. அந்த பெண்தான் அவனை இப்படிப் பண்ணிட்டா “ என்று இன்னொரு தரப்பும் சொல்வதுண்டு. ஒரே நிகழ்வை இரு கதைகளாகக் கேட்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படும். அப்போதெல்லாம் எனக்கு ‘ரஷோமான்’ நினைவுக்கு வரும்.

‘ரஷோமான்’ படம் வெளியானபோது முதலில் அந்தக் குழப்பத்தை ரசிகர்கள் உணர்ந்தார்கள். தீர்மானமான உண்மைகளைப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு உண்மை பற்றிய தேடலில் ஏற்படும் தெளிவற்ற தன்மையை உணரச்செய்கிறார் அகிரா.

(நிறைந்தது...)

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x