Published : 03 Feb 2017 09:38 AM
Last Updated : 03 Feb 2017 09:38 AM
மெகா டிவியில் திருப்பத்தூர் கம்பன் கழகத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்தை ஒளிபரப்பினார்கள். கம்பராமாயணத்தில் இடம்பெற்ற சிறு கதாபாத்திரங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது எது என்பது தலைப்பு. மாரீசன் தான் இறக்கும் தறுவாயில் ராமனின் குரலில் ‘லட்சுமணா, சீதா’ என்று குரல் எழுப்பிவிட்டு இறந்தார் எனக் குறிப்பிட்ட பேச்சாளர், ‘உலகின் முதல் மிமிக்ரி கலைஞர் மாரீசன்தான்’ என்றார். பட்டிமன்ற இலக்கணப்படி நடுவர் சில தொடர்பற்ற நகைச்சுவைக் குறுங்கதைகளைக் கூறினர். அவற்றில் ஒன்று இது. ஒருவர் இறக்கும் தறுவாயில் இருக்க ஊரார் அத்தனைபேரும் அவரிடமிருந்து விலகியிருந்தனர். விவரம் அறியாத வெளியூர்க்காரன் ஒருவர் பிறர் தடுத்ததையும் மீறி அவரிடம் சென்று “உங்கக் கடைசி ஆசையைச் சொல்லுங்கள். நிறைவேற்றுகிறேன்’’ என்றானாம். அதற்கு அவர் “எனக்குத் தனியாக சாவதற்குப் பயமா இருக்கிறது’’ என்றாராம்!
வருடிச் செல்லும் மேகங்கள்
கேப்டன் டிவியில் ‘பயணம்’ தொடரில் சிக்கிம் மாநிலத்திலுள்ள கேங்டாக் பகுதியின் இயற்கை வனப்புகளைக் காட்டினார்கள். கொள்ளை அழகு. சாலைகளில்கூட நம்மருகே வந்து செல்லும் பஞ்சு போன்ற மேகங்களைக் கண்டபோது மனம் லேசானது.
இரண்டுமே பிரச்சினை?
சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பிய ஒரு செய்தி கவனம் ஈர்த்தது. கோவையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் சில வன விலங்குகளைக் காணமுடிகிறதாம். காட்டுப் பகுதியிலுள்ள ஏரிகள் வறண்டு விட்டதால் தண்ணீருக்காக நகரப் பகுதிகளுக்குள் அவை வருகின்றன. யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் தென்பட்டால் நகர்ந்து செல்லாமல் அவற்றைப் பின்னணியாகக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவது அந்த விலங்குகளுக்கும் தொந்தரவு.மனிதர்களுக்கும் ஆபத்து என்றனர்.
திடுக் விளம்பரம்!
“நான் பெரியவன் ஆனதும் சைக்கிள் ரிப்பேர் கடை வைப்பேன்’’ என்கிறான் சிறுவன். அவன் அப்பா அதிர்ச்சியடைய, விளக்குகிறான். “நாங்க வளரும்போது உலகத்திலே இருக்கிற பெட்ரோல் எல்லாமே தீர்ந்துவிட்டிருக்கும். அப்போ எல்லோரிடமும் சைக்கிள்தானே இருக்கும்’’. சிக்னலில் நிற்கும்போது தன் காரை ‘ஆன்’ செய்தே வைத்திருந்த அப்பா அதை உடனடியாக ஆஃப் செய்கிறார். பொதுநலன் கருதிப் பல சேனல்களில் வெளியாகும் இந்த விளம்பரம் அனைவராலும் முடிந்த ஒரு சிறிய, உடனடித் தீர்வைக் கூறுவதால் மேலும் கவனிக்கத்தக்கதாகிறது.
விலங்குச் சமிக்கை
ஃப்ளோரிடா மாநிலத்தில் கேப்ரியல் வருவதற்கு ஏழு மணி நேரம் முன்பாகவே கடலிலிருந்த கருப்பு மூக்கு சுறாக்கள் அனைத்தும் நடுக்கடலுக்குச் சென்று விட்டதை டிஸ்கவரி தமிழ் சானலில் வியந்து கூறினார்கள். கேப்ரியல் என்பது கொடுமையான வேட்டைக்காரனின் பெயர் அல்ல. கடும் வெப்ப மண்டலப் புயல் ஒன்றின் பெயர் அது. இயற்கைப் பேரழிவுகளை முன்னதாகவே அறியக்கூடிய சக்தி விலங்கினங்களுக்கு இருப்பதை வெளிப்படுத்திய மற்றொரு நிகழ்வு. உயரத்தில் பறக்கும் பறவைகள் தொடர்ந்து தாழ்வாகப் பறந்தாலோ, மின் கம்பங்களில் அதிகப் பறவைகள் உட்கார்ந்திருந்தாலோ, அவை புயலுக்கு அறிகுறியாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT