Last Updated : 02 Feb, 2014 12:00 AM

 

Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM

மாணவர்களின் மாணிக்கம்: ஃப்ளாஷ் பேக்- இயக்குநர் பாண்டியராஜ்

நமக்கு ஏன் தமிழாசிரியர்களை மிகவும் பிடித்துப் போகிறது?

உங்கள் எல்லோரையும் போலவே என்னுடைய பள்ளிக்கூட பால்ய நினைவுகளிலும் ஒரு தமிழ் அய்யா இருக்கிறார். அவர் பெயர் மாணிக்கம். நற்சாந்துபட்டி இராமநாதன் செட்டி யார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை நான்கு வருடமும் எனக்கு அவர்தான் தமிழ் எடுத்தார். இல்லை தமிழ் கொடுத்தார். மாணிக்க வாத்தியாருக்கு ஆஜானுபாகுவான தோற்றம். எப்போதும் தும்பைப்பூ நிற வேஷ்டி, மாநிறம் என அவர் உருவம் என் மனதுக்குள் சித்திரமாய் விரிகிறது. அவர் தமிழ் சொல்லிக் கொடுக்கும் விதமே ஒரு தனி அழகு.

ஒரு ஆசிரியரிடம், மெல்லிய கோமாளித்தனம் இருக்கும்போது அவரால் மாண வர்களிடம் நெருக்கமாக சென்று சேர்ந்து விட முடியும். அதற்கு உதாரணம் மாணிக்கம் வாத்தியார்தான். பொதுவாக செய்யுள்களை ராகம் போட்டு நடத்துவது அவர் ஸ்டைல். பாட்டாகவே பாடி அவர் நடத்திய ஒவ்வொரு செய்யுளும், இன்னும் மறக்காமல் நினைவு அடுக்குகளில் பதிந்து கிடக்கிறது. வகுப்பு முடியும்

போது, “நாளைக்கு மறக்காம எல்லோரும் கேள்வி - பதில் படிச்சிட்டு வந்திடுங்க” என்று சொல்லும்போது, ஒரு பையன் எழுந்து கேட்டான், “அய்யா, நோட்ஸ்ல படிக்கலாமா, இல்லை புக்ல படிக்கலாமா?”. அதற்கு மாணிக்கம் வாத்தியார், “எதுல படிச்சாலும் ஒழுங்கா படிக்கணும்யா... என்ன நோட்ஸ்ல படிச்சா கூடுதல் தகவல் இருக்கும்யா” என்றார். யாரையும் வாடா, போடா என்றெல்லாம் கூப்பிட மாட்டார். வாய்யா, போய்யா... அதுதான் மாணிக்கம் அய்யா.

பெண்கள் பக்கம் இருந்து ஒரு கேள்வி வந்தது, “அய்யா, கோனார வச்சுக்

கலாமா? இல்லை வெற்றிய வச்சுக்க லாமா?” அதற்கு அவர் சொன்ன பதில், “நீ கோனாரைத்தான் வச்சுக்குவியோ, இல்ல வெற்றியைத்தான் வச்சுக்குவியோ... அதெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன், படிச்சு ஒழுங்கா பரிட்சையில மார்க் வாங் கல, அப்புறம் இருக்கு!” இந்த பதிலுக்கு எழுந்த சிரிப்பொலியின் நினைவுகள் இன் னும் எங்கள் வகுப்பறையின் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டு தான் இருக்கும்.

அவர் பேச்சில் எப்போதும் ஒரு சிலேடை நயம், சந்தநயம் இருக்கும். “நகுலன் சோலைக்குள் புகுந்தான். சில பேரு சோலைக்குள்னு எழுதுறதுக்கு பதிலா, காலை ஒடிச்சுபுட்டு எழுதுவான். நான் அவன் கைய ஒடிச்சுபுடுவேன்", என்பார்.

“அணி நயம், சந்த நயம், தொடை நயம்... போன வருஷம் ஒருத்தன் இப்படி தான் வகுப்புல பாடம் எடுக்கும்போது கேட்டான், அய்யா... தொடை நயத்துக்கு மேல என்ன நயம் இருக்குனு? நான் சொன்னேன், வீட்டுக்கு வாய்யா. விளக்கமா(த் தாலே) விளக்குறேன்னு. அவன் தெறிச்சு ஓடிட்டான்... இந்த வகுப்புல யாருக்காவது நான் விளக்கணுமாய்யா?” என அவர் சிரிக்க சிரிக்க சொல்லித்தந்தது மறக்க முடியாதது.

பாடம் நடத்திக்கொண்டே, லாவகமாக அவர் வேட்டியை மடித்துகட்டுவது, ஒரு action ப்ளாக்கில், ஹீரோ என்ட்ரி போல இருக்கும். வேட்டியை தூக்கி கட்டிவிட்டு வகுப்பை வலம் வந்தபடியே பாடம் நடத்துவார். அப்போது, அவர் உள்ளே போட்டிருக்கும் டவுசர் வெளியே தெரியும். “அய்யா, சுருக்கு டவுசர் போட்டி ருக்காரு” என லைவ் கமென்ட்டரி கொடுப்பான் ஒருவன். அதற்கு இன்னொருவன், “அது சுருக்கு டவுசர் இல்லடா, பட்டா பட்டிடா” என்பான். இது அவருடைய காதிலும் விழும், ஆனால் அவர் அதை வெளிகாட்டிக் கொள்ளவே மாட்டார். ஆசிரியர்களை பற்றி நாம் அடித்த அனைத்து கமென்ட்டுகளையும், தெரிந் தும் அவர்கள் பொருட்படுத்தாமல் போனதால்

தான் அவர்களை பற்றி இன்றும் நினைக் கிறோம், சிலாகிக்கிறோம். எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாய் நடந்திருக்கிறோம் என்று வருந்தவும் செய்கிறோம் என்பதே நிதர்சனம்.

இலக்கண வகுப்புகளில் திணைகள் பற்றி, அவர் சொல்லித்தந்தது எல்லாம் இன்றும் என்னை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ஒப்பிக்க வரும். பெருந்திணை - அப்டின்னா, பொருந்தாக் காமம், இளையவன் ஒருவன் முதியவளை விரும்புதலும், முதியவள் ஒருத்தி இளைய வனை விரும்புவதும், பொருந்தா காமம் ஆகும்” என்று அவருடைய சொந்த ராகத்தில், கமகம், பொடி சங்கதி எல்லாம் சேர்க்கும்போது, ஒரு கர்நாடக இசை கச்சேரி கேட்டது போல இருக்கும். கூட்டத்தில் இருந்து செல்வராஜ் எழுந்து, “ஆமாம் அய்யா, எங்க ஊருல கூட இப்படிதான் நாலஞ்சு சுத்துது” என்பான். அதற்கு, “இது எல்லா ஊருலயும் இருக் குது, இதையெல்லாம் சபையில வச்சு சத்தமா சொன்னா, கன்னம் சிவந்துரும்... விளங்குதா” என மாணிக்கம் அய்யா கவுன்டர் கொடுப்பார்.

அவர் எப்போதும் பள்ளிகூடத்திற்கு சைக்கிளில் தான் வருவார். வரும் வழியில் பசங்க யாராவது நடந்து வந்தால், சைக்கிளில் ஏற்றிக்கொள்வார். சில நேரம் உட்காந்து வர தயங்கி, “ அய்யா, நான் ஓட்டுறேன்... நீங்க உட்காருங்க” என்றால், “என்னையே ஓட்டணுமாய்யா உனக்கு. எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்குய்யா” என்பார்.

பள்ளி விழாக்களுக்கு அவர்தான் வரவேற்புரை. பேச்சால் கட்டிப்போடும் அவரை ஊரே, புலவர் என்றுதான் அழைக்கும். அவர் அதிர்ந்து பேசி பார்த்த தில்லை. யாரையும் அடித்து அல்ல, அடிக்க கை ஓங்கி கூட நான் கண்டதே இல்லை. யாராவது, எதாவது தவறு செய்தால் பதினோரு கொட்டு வச்சுக்கோ, நூத்தியொரு கொட்டு வச்சுக்கோ என்பார். ஆனால் அவர்கள், ஐந்து கொட்டு கொட்டும்போதே, ‘போதும்யா... போயா’ என்று சொல்லி உட்கார வைத்து விடுவார். தங்களை தாங்களே கொட்டிக்கொள்வது கூட அவரால் தாங்கிக்கொள்ள முடியாது.

கடைசியாக, அவர் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள், சறுக்கல்கள் என எல்லாம் நிகழ்ந்து, விராச்சிலையில் இருக்க பிடிக்காமல் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இதையெல்லாம் கேள்விப்

படவும், வருத்தப்படவும் மட்டுமே என்னால் முடிந்தது. இறுதியாக, குளிக்கும்போது வழுக்கி விழுந்து படுத்த படுக்கையாக கிடந்து, மாணிக்கம் வாத்தியார் இறந்து போனதாக கேட்ட செய்தியை என் னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரின் இறுதி காலங்கள் கண்டிப்பாய் நிறைவான தாக இல்லை என்பது எனக்கு தெரியும்.

யானையால் தாக்கப்பட்டு, கடைசியில் சீதபேதியால் தான் மகாகவி பாரதியின் உயிர் பிரிந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த செய்தியை படித்து முடிக்கும்போது, எனக்கு மாணிக்கம் வாத்தியார்தான் நினைவுக்கு வந்தார். நாம் அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்பட்ட ஆளுமைகளின் இறுதி பக்கங்களை கிழித்து வீசும் காலத்திடம் உங்களின் சார்பாகவும் வேண்டுகிறேன், “ஏ காலமே! நாங்கள் ரசித்தவர்களை... முடிந்தால் நீயும் ரசிக்க பழகு.. முடிவு என்ற பெயரில் கசக்கி எறியாதே .”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x