Published : 28 Feb 2014 12:00 AM
Last Updated : 28 Feb 2014 12:00 AM
மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் நம்மையும், நமது தனித்துவத்தையும் வேரோடு சாய்த்துவிடும் என்று அஞ்சும் அனைவரும் ‘ தி ஸ்ட்ரெய்ட் ஸ்டோரி’ எனும் படத்தைக் குடும்பத்துடன் காண வேண்டும். துப்பாக்கியும் கையுமாகத் திரியும் ஆக்ஷன் ஹீரோக்கள், அவர்களது அதீத சாகஸங்கள் நிறைந்த ஹாலிவுட்தான் அமெரிக்க சினிமாவின் அடையாளம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் உண்டு. ஆனால் அந்த அடையாளத்துக்கு அப்பால், திரைப்படத்தை ஒரு கலையனுபவமாக மாற்றிக்காட்டும் அற்புதத்தைப் பல அமெரிக்கப் படங்கள் சாதித்துவருகின்றன.
நவீன யுகத்தின் மிக முக்கிய இயக்குநர் என்று கார்டியன் பத்திரிகையாலும், ‘மறுமலர்ச்சி நாயகன்’ என்று அமெரிக்கச் சிற்றிதழ் தளத்திலும் கொண்டாடப்படும் பன்முகக் கலைஞர் டேவிட் லின்ச். இவரது இயக்கத்தில் உருவான ‘ தி ஸ்ட்ரெய்ட் ஸ்டோரி (1999)’ வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. என்றாலும் உலகப் பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டுவருகிறது இந்தப் படம். 35 ஆண்டுகளைக் கடந்து அமெரிக்க சினிமாவில் இயங்கிவரும் லின்ச், தனது பின்நவீனத்துவ பாணிப் படைப்புகளுக்காகக் கொண்டாடப்படுபவர். தி ஸ்ட்ரெய்ட் ஸ்டோரி உயர்தர ரசிகரை மட்டுமல்ல சாமான்ய ரசிகரையும் உலுக்கிப்போடும் படைப்பு. குடும்ப அமைப்பு மனித குலத்துக்கு எத்தனை பெரிய கொடை என்பதை உணரவைக்கும் உலகசினிமா.
அமெரிக்காவில் லோவா மாநிலம் லாரண்ஸ் நகரில் வாழ்ந்து மறைந்த அல்வின் ரே ஸ்ட்ரெய்ட் என்ற 73 வயது இளைஞரின் வாழ்க்கை அனுபவத்தை அடிப்படைக் கதையாக டேவிட் லின்ச் தேர்ந்துகொண்டிருக்கிறார்.
73 வயது ஸ்ட்ரெய்ட் தனது நண்பர்களைப் பல நாட்களாகச் சந்திக்கவில்லை. ஒரு நாள் காலையில் அவரைத் தேடிவரும் நண்பர், கூடத்தின் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கிறார். பதறும் அவர், ஸ்ட்ரெய்டின் மகளுடன் இணைந்து அவரைக் கைதூக்கிவிடுகிறார். மறுநாள் வலுக்கட்டாயமாக ஸ்ட்ரெய்ட்டைக் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறார் அவரது மகள் ரோஸ். மருத்துவர் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார். நடைப்பயிற்சி கட்டாயம் என்கிறார். ஆனால் எதையுமே ஸ்ட்ரெய்ட் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இந்த நேரத்தில் தனது ஒரே அண்ணன் 80 வயது ஹாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட செய்தி அவரை வந்தடை கிறது. ஹாரி வசிப்பதோ லாரன்ஸ் நகரி லிருந்து 390 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் விஸ்கான்சின் நகரம். முகத்திலும் உடலிலும் முதுமை வரைந்த கோடுகள் ஸ்ட்ரெய்ட்டின் தள்ளாமையைக் காட்டுகின்றன. ஆனால் அவரது நெஞ்சுரம் அவரது வீட்டிற்கு நிழல் தரும் ஓக் மரத்தைப் போல உறுதியாக இருக்கிறது. துணிவின் துணையோடும் வேளாண்மைப் பணிகளுக்கு நண்பனாய் உழைத்த ஜான் மேயரின் துணையோடும் அண்ணனைக் காணப் புறப்படுகிறார்.
உழவு, பண்ணைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த ஜான் மேயர் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் சின்னஞ்சிறு டிராக்டர். ஆமையைப் போல் நகரும் இந்த வாகனத்துடன் அங்கங்கே தங்கிக்கொள்ள அதில் இணைக்கப்பட்ட ஒரு லைஃப் டிரக். நண்பர்கள், குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பயணத்தைத்
தொடங்கும் ஸ்ட்ரெய்ட், தனது பயண வழியில் மானுடத்தின் பல்வேறு முகங்களைச் சந்திக்கிறார். கூடவே இயற்கையையும். பரந்து விரிந்த நிலவெளிகள் வழியே தொடரும் பயணத்தில், பரந்த மனதுடன் மனித நேயத்தைத் தொலைத்துவிடாமால் மனிதர்கள் வாழ்ந்து வருவதை உணர்ந்தபடியே அண்ணனின் வீட்டை அடைகிறார்.
தனது தம்பியைக் காணும் அந்த முதிய அண்ணன், தன் வீட்டின் வாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்தச் சிறு வாகனத்தைப் பார்க்கிறார். அவர் கண்கள் கலங்கி வழிகின்றன. படம் நிறைகிறது.
ஆல்வின் ஸ்ட்ரெய்ட்டாக ரிச்சர்ட் ஃபார்ம்வொர்த் வாழ்ந்திருக்கிறார். டேவிட் லின்ச்சின் திரைமொழியும் சித்தரிப்புகளும் ’ தி ஸ்ட்ரெய்ட் ஸ்டோரியை’ மொத்த மானுடத்துக்குமான மகத்தான படைப்பாக்கிவிடுகின்றன.
இது வெறும் ரோட் மூவி அல்ல. திரை மொழியில் பெயர்க்கப்பட்ட மானுட அன்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT