Last Updated : 02 Jun, 2017 10:01 AM

 

Published : 02 Jun 2017 10:01 AM
Last Updated : 02 Jun 2017 10:01 AM

இயக்குநரின் குரல்: கற்பனை கலக்காத கொலை வழக்கு! - எஸ்.டி. ரமேஷ்செல்வன்

‘அமைதியான சென்னை’ என்ற பிம்பத்தைக் கடந்த ஆண்டு கலைத்துப்போட்டது சுவாதி படுகொலை. தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த இத்துயர நிகழ்வையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் நடந்தேறிய சில சம்பவங்களையும் திரைக்கதையாக்கி ‘சுவாதி கொலை வழக்கு’என்ற தலைப்பில் திரைப்படமாக இயக்கி முடித்திருக்கிறார் எஸ்.டி. ரமேஷ்செல்வன். விஜயகாந்த் நடித்த 'உளவுத்துறை', அருண்விஜய் நடித்த 'ஜனனம்', ’கோலிசோடா’படப் புகழ் சிறுவர்கள் நடித்த ‘வஜ்ரம்’ஆகிய படங்களை இயக்கியவர். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

சுவாதி கொலையைத் திரைப்படமாக்க முன்வந்தது ஏன்?

சுவாதி கொலையைப் பொறுத்தவரை இன்னும் இறுதி விடை கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் தலைநகரில் நடைபெற்ற இச்சம்பவம் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டது. ரயில்வே, மாநில காவல்துறை என்று இருந்தும் ‘சுவாதி படுகொலை’ நடந்து இரண்டு நாட்கள் வரை வழக்கை இரு தரப்பினரும் எடுத்துக்கொள்ளாத நிலையில் பொறுமையிழந்து நீதிமன்ற உத்தரவு போட்ட பிறகே சட்டம் தன் கடமையைச் செய்ய வருகிறது.

இதைவிடக் கொடுமை, பத்து மாதங்கள் கழித்து இப்போதுதான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அரசு எந்திரம் சோம்பேறியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நோக்கம் சர்ச்சையைக் கிளப்புவதோ, வீண் பரபரப்பை உருவாக்குவதோ, பணம் சம்பாதிப்பதோ அல்ல; மீண்டும் ஒரு சுவாதியோ, ஒரு ராம்குமாரோ உருவாகிவிடக் கூடாது என்ற முக்கியச் செய்தியை வலியுறுத்துவதுதான் எங்களது நோக்கம்.

அதற்காகத் திரைக்கதையில் பிரச்சாரமோ அறிவுரையோ எதுவும் இருக்காது. சுவாதி-ராம்குமார் குடும்பங்கள் எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான அடுத்த கட்ட வாழ்க்கையே பார்வையாளர்களுக்கு அந்தச் செய்தியை, விழிப்புணர்வைக் கொடுத்துவிடும். சுவாதியின் தந்தை தனது மகளை எத்தனை கனவுகளுடன் வளர்த்திருப்பார். ராம்குமாரின் குடும்பம் அவர் மீது எத்தனை எதிர்பார்ப்புடன் சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கும். இன்று ராம்குமார் இல்லை; ஆனால், மணமாகாத அவரது சகோதரிகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். எனது முந்தைய படங்கள் அனைத்திலும் சமூகத்துக்கான விழிப்புணர்வையே எப்போதும் முதன்மைப்படுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதுவே படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும்.

திரைக்கதையின் சுவாரசியம் கருதி கற்பனைக் காட்சிகளைச் சேர்த்திருக்கிறீர்களா?

இல்லை. ‘சுவாதி கொலை வழக்கு’படத்தில் அப்படி எந்தக் காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். கற்பனைக் காட்சிகளுக்கான எந்த அவசியமும் இன்றி நிஜத்தில் நடந்தவையே பெரும் பரபரப்பான சம்பவங்கள்தான். அவைதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம். மக்களுக்குத் தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தக் காட்சிகளைத் திரையில் பார்க்கும் பார்வையாளர்களின் மனம் திடுக்கிட்டுப் போகும்.

இப்படியும் கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள். காவல் துறை நினைத்தால் ஒரு வழக்கை எவ்வளவு வேகமாக விசாரிக்க முடியும், அவர்களது திறமை என்ன என்பதை இதுவரை வெளிவராத தடயவியல் சார்ந்த சித்தரிப்புகள் வழியாகக் காட்டியிருக்கிறோம். ஒரு துயரச் சம்பவத்தின் வழியாகச் சமூகமும் சமூகத்தில் பிரபலமானவர்களாக அறியப்படுற பலர் உணர்ச்சிவசப்படும் விதமும் எப்படியிருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி சித்தரித்திருக்கிறோம். இதில் காவல் துறை மட்டுமல்ல, தமிழக மக்களும் முக்கியக் கதாபாத்திரம்தான். இயல்பாகத் தொடங்கும் படம், விறுவிறுப்பான த்ரில்லராக மாறிவிடும்.

இதில் சம்பந்தப்பட்டக் குடும்பத்தினரின் அனுமதி பெற்றீர்களா?

சுவாதி, ராம்குமார் குடும்பங்களைப் படக் குழுவினருடன் சந்திக்கவிருக்கிறோம். படத்தை அவர்களுக்குத் தனித்தனியே போட்டுக்காட்டி அவர்களின் அனுமதியுடன்தான் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறோம். இதில் துளிகூடத் தவறான, அவதூறான சித்தரிப்புகள் கிடையாது.

சுவாதி, ராம்குமார் வேடங்களில் நடித்திருப்பவர்கள் யார்?

இந்தப் படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். சுவாதி வேடத்தில் ஆயிரா நடித்திருக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் வழக்கறிஞர் வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். சில கதாபாத்திரங்களை நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்துகொள்வதே சரியாக இருக்கும்.

எனது கதாசிரியர் ஆர்.பி. ரவி பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் படத்தின் கதை, வசனத்தை மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதியிருக்கிறார். ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘தற்காப்பு’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். படத்துக்கு இசை ஷாம் டி ராஜ். பாடல்கள் கதையின் வேகத்தைத் தடை செய்யக் கூடாது என்பதற்காகப் படத்துக்குப் பின்னணி இசை மட்டும்தான். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தை ஜெய சுபஸ்ரீ புரடக்ஷன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரித்துவருகிறார். தற்போது போஸ்ட் புரடக் ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x