Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM
ஹாலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ரிட்லி ஸ்காட். அவர் இயக்கிய 'ப்ளேட் ரன்னர்', ‘க்ளாடியேட்டர்’, ‘தெல்மா அண்ட் லூயிஸ்’, ‘அமெரிக்கன் கேங்க்ஸ்டர்’ போன்ற படங்கள் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றப் படைப்புகள். அவரது ‘ஏலியன்’ திரைப்படம், வேற்றுகிரகவாசிகளின் தாக்குதல்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை (ஏலியன்ஸ்) ஜேம்ஸ் கேமரோன் இயக்கியிருந்தார். அதேபோல் நரமாமிசம் தின்னும் மனநோயாளியாக ஆண்டனி ஹாப்கின்ஸ் நடித்த ‘சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ்’ என்ற படத்தின் அடுத்த பாகமான ‘ஹான்னிபல்’ படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். அடிமை வீரனாக மாற்றப்படும் ரோமானியத் தளபதியாக ரஸ்ஸல் க்ரோவை ‘க்ளாடியேட்டர்‘’ படத்தில் நடிக்கவைத்த ஸ்காட், ‘எ குட் இயர்’ படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார். வெவ்வேறு கதைக்களங்களைப் பரிசோதிக்கத் தயங்காத இயக்குநர்களில் ஒருவர் அவர் என்பதற்கு ஒரு சான்று இது.
எனினும் சமீபத்தில் அவர் இயக்கிய ‘ராபின் ஹூட்’ , ‘ப்ரொமிதியஸ்’ போன்ற படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை.
இப்படியான சூழலில் அந்த வயதான ஜாம்பவான் மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். திரைப்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்ற ‘நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்’ நாவலை எழுதியவரும் தனது ‘தி ரோட்’ நாவலுக்காக புலிட்சர் விருது வென்றவருமான கார்மாக் மெக்கார்த்தி முதன்முறையாகத் திரைக்கதை எழுதியிருக்கும் ‘தி கவுன்சலர்’ படத்தை இயக்கியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். வரும் 22ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் நடக்கும் போதை மருந்துக் கடத்தலின் பின்னணியில் அமைந்த மற்றொரு படம் இது. மைக்கேல் பாஸ்பெண்டர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ராட் பிட், பெனிலோப் க்ரஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிகை கேமரூன் டயஸ் நடித்திருக்கிறார்.
‘நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்’ படத்தில் இரக்கமற்ற கொலைகாரனாகவும், சமீபத்திய ஜேம்ஸ் பாண்ட் படமான ‘ஸ்கை பால்’ படத்தில் வில்லனாகவும் நடித்த ஜேவியர் பார்டெம் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பலமான கூட்டணியில் அமைந்த படம் என்றாலும் திரைக்கதையின் சறுக்கல் படத்தை தொய்வடையச் செய்துவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. தோல்விகளைக் கண்டு துவளாத ரிட்லி ஸ்காட் தனது அடுத்த படைப்பான ‘எக்சோடஸ்‘’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அமரும் நாற்காலியை சிம்மாசனமாக பாவிக்கும் பெருங்கலைஞர்களின் குணம் அது தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT