Published : 17 Jun 2016 11:50 AM
Last Updated : 17 Jun 2016 11:50 AM
‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதற்கு யாரை உதாரணம் காட்டுவது என்று இனி ஆராயத் தேவையில்லை! ‘1-எஸ்’ சானலில் நடிகர் ராதாரவியின் நேர்காணல். “எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்றபோதும் மா.சுப்ரமணியத்தின் தொகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது நிதி உதவி செய்தேன். விஷாலுக்கும் லிங்குசாமிக்குமிடையே மத்தியஸ்தம் செய்து வைத்தேன். வடிவேலு சிறந்த நடிகர். அவருக்கென்று ஒரு தனி பாடி லாங்குவேஜ் இருக்கு” என்றெல்லாம் கூறினார்.
புகைக்கும் நண்பர்களே... ஒரு நிமிடம்!
‘டாக்டர் ஆன் கால்’ என்ற பகுதியைப் புதிய தலைமுறை சானல் ஒளிபரப்புகிறது. புகைப் பழக்கத்துக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டியதன் அவசியத்தை ஒரு டாக்டர் விளக்கினார். நிக்கோடினும் தொடர்ந்து புகைபிடித்தால் நிக்கோடின் தவிர 2000 நச்சுப் பொருள்களும் நம் உடலில் சேர்கின்றன. ரத்த ஓட்டம் குறையும்.
இதனால் காலில் வீக்கம் ஏற்படும். ஆங்காங்கே கருப்புக் கட்டிகள் காங்கிரின் எனும் நிலையை உண்டாக்கும் என்றவர் வேறொரு ஆறுதலான விஷயத்தையும் குறிப்பிட்டார். ‘புகைப் பழக்கத்தை விட்டுவிட்டால் ஒரு வருடத்துக்குள் உடல்நிலை நார்மலாகிவிடும்’ என்பதுதான் அது. நிறையத் தண்ணீர் மற்றும் பழச்சாறு குடிப்பதன் மூலம் உடல் நார்மலாவதை மேலும் துரிதப்படுத்தலாமாம்.
வேட்டையும் தாய்மையும்
நேஷனல் ஜியோக்ராபிக் சானலில் சிறுத்தைப் புலியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ‘ஐ ப்ரிடேட்டர்’ (I, Predator). அது மிக வேகமாக ஓடும் விலங்கு என்பது தெரிந்ததுதான். அந்த வேகம் (மணிக்கு 95 கிலோமீட்டர்) ஒரு ஜெட் விமானத்தின் வேகம் என்பது மேலும் வியக்க வைத்தது. ஓடும்போது அதன் உடலில் ஏற்படும் ‘பொறியியல்’ சங்கதிகளை விவரித்தார்கள். அப்போது அதன் முதுகெலும்பு நன்றாகச் சுருங்கி விரிவதையும், அதன் தசைகளின் அற்புத இயக்கத்தையும் விளக்கினார்கள்.
வேட்டையாடிப் பிடிபட்ட மானின் கழுத்தைச் சுமார் 10 நிமிடங்கள் அழுத்திப் பிடித்துத் திருகுமாம் (க்ளோஸப்பில் வேறு காட்டித் தொலைத்தார்கள்). பிறகு மானின் மிச்ச உடலை வாயால் கவ்வி இழுத்துச் செல்கிறது. மரத்தின் மீதுள்ள தன் குட்டிகளைக் கூப்பிட்டு உணவு படைக்கலாம் என்று நினைக்கும்போது அந்தப் பக்கமாக ஒரு சிங்கம் வர, தாய் சிறுத்தை இயலாமையுடன் ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. குட்டிகள் வந்தால் சிங்கம் அவற்றை வதம் செய்துவிடும் என்ற பயம். மானைக் கொடூரமாகக் கொன்ற அடுத்த நிமிடமே தாய்மையின் ஈரம்!
ஆயிரம் சொற்கள் போதும்!
கோவலனும் மாதவியும் இணைந்து வாழ்ந்தது எவ்வளவு ஆண்டுகள்? சுமார் பதினைந்து வருடங்களாம். கோவலன் தன் 16-வது வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடும். மாதவியின் மூலம் பிறந்த மணிமேகலைக்கு 12 வயதாகும்வரை மாதவியுடன் இணைந்திருந்து பிறகு கண்ணகியிடம் திரும்பியிருப்பான்.
ஆக பூம்புகாரை நீங்கியபோது கோவலனின் வயது 32, கண்ணகியின் வயது 27. இப்படிக் கணக்காகக் கூறியவர் பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமி (நியூஸ் 7 சேனலில் ‘பேசும் தலைமை’ நிகழ்ச்சியில் நேர்காணல்). தன் இருப்பை எழுத்தின் மூலம் பதிவுசெய்யும் மனிதர்கள் இறக்காதவர்கள் என்றார். கதைகள் எழுத ஆயிரம் சொற்களே போதுமானவை. சொல்லப்போனால் அதுவே அதிகம் என்று கூறி வியக்கவைத்தார்.
ஒருத்தர் கூடவா இல்லை?
வெல்லத்துக்கு கிராக்கி அதிகமாகிவிட்டது. பல சானல்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் தான் நடித்த திரைப்படத்தின் பெயரை ‘வேலன்னு வந்தா வெல்லக்காரன்’ என்று விஷ்ணு விஷால் தெளிவாகச் சொல்கிறார் (அட, நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களை இப்படியும் பழிதீர்த்துக் கொள்ளலாமோ?). ஒரு வேஷ்டி விளம்பரத்தில் ‘வெல்ல வேஸ்டி, வெல்ல சட்டை’ என்கிறார் விஜய் சேதுபதி (எறும்புகள் மொய்க்காதோ?).
சினிமாவில் போகிறபோக்கில் ‘வெல்லம்’ வந்தால் அது பெரிதாகப் புலப்படாது. ஆனால் சில நொடிகளே வரும் விளம்பரங்களில் இப்படி வரும்போது ‘அட, ஒருத்தர் கூடவா இதைச் சரிசெய்திருக்கக் கூடாது?’ என்று தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT