Published : 09 Mar 2017 07:32 PM
Last Updated : 09 Mar 2017 07:32 PM
பாலிமர் தொலைக்காட்சியில் குஜராத்தில் உள்ள ஒரு அனுமன் கோயிலைக் காட்டினார்கள். விசா கிடைக்காதவர்கள் இந்த அனுமனை வேண்டிக்கொண்டால் விசா கிடைத்துவிடுமாம். விசா வேண்டுதலைத் துண்டுச் சீட்டுகளில் எழுதி ஆலயத்தில் வைக்கிறார்கள். வாயுவின் மைந்தர் என்பதால் விமானப் பயணம் சாத்தியமாகுமா? சீதையைக் கண்டுபிடிக்க வெளிநாட்டுக்குச் (இலங்கை) சென்றவர் என்பதால் விசா பெற்றுத் தருவாராம். சுவாரசியங்களுக்குக் குறைவில்லாத மத நம்பிக்கைகள்!
காலாவதி ஆன பதில்!
பல வருடங்கள் கழித்து நமது புகைப்படங்களையும் நமக்குத் தெரிந்தவர்களது புகைப்படங்களையும் பார்ப்பது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். தொலைக்காட்சிப் பேட்டிகள் அதற்கும் ஒருபடி மேலே. ஆதித்யா சேனலில் நடிகர் மம்முட்டியை உமா பத்மநாபன் முன்பு பேட்டி கண்டதை ஒளிபரப்பினார்கள். “உங்கள் மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறதா?’’என்ற கேள்விக்கு மம்முட்டி பெருமை பொங்க இப்படி ஒரு பதிலைக் கூறினார். “கிடையவே கிடையாது. நானே என் மகனிடம் இது குறித்துக் கேட்டேன். ‘நீங்கள் ஒரு அற்புத நடிகர். உங்களைவிடச் சிறப்பாக நடிக்க முடிந்தால்தான் நான் நடிப்புலகுக்கு வருவேன். அது முடியாத காரியம் என்பதால் நான் நிச்சயம் நடிக்க மாட்டேன்’என்று கூறிவிட்டான்”. கால ஓட்டத்தில் காலாவதி ஆகிவிட்ட பதில்!
எல்லை மீறும் இமான் அண்ணாச்சி?
சுட்டீஸ் குட்டீஸ் நிகழ்ச்சியில் (சன் டிவி), “உங்க வீட்டுல உங்க அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டுப்பங்களா? உங்க அப்பா என்ன சொல்லி உங்க அம்மாவைத் திட்டுவார்? உன் உறவுக்காரங்களிலே யார் அதிகமா உங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுவாங்க?’’ என்றெல்லாம் எல்லை மீறும் கேள்விகளை அதிகமாகக் கேட்கிறார் இமான் அண்ணாச்சி (வேடிக்கையான பதில்களை வரவழைக்கும் முயற்சியாம்!). ஆனால் குழந்தைகளில் அடாவடி பதில்களைவிட, “நிலா சாப்பிடாது. அதுக்குத்தான் தட்டே இல்லையே” என்பதுபோன்ற அப்பாவித்தனமான பதில்கள்தான் அந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்டுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT