Published : 31 Mar 2017 10:44 AM
Last Updated : 31 Mar 2017 10:44 AM

திரை நகரின் தேர்தல் யுத்தம்: எங்கள் வலியை அவர்களால் உணர முடியாது! - ஆர்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைவிட அதிகம் அனல் பறக்கிறது கோலிவுட்டில். முன்னெப்போதும் இல்லாத வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று அணிகள்; தலைவர் பதவிக்கு மட்டுமே நான்கு பேர் போட்டி எனக் கள நிலவரம் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. உண்மையான போட்டி என்பது தற்போது தயாரிப்பாளர் சங்க கவுரவச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் ஆர். ராதாகிருஷ்னன் தலைமையில் போட்டியிடும் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’க்கும், நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தலைமையில் போட்டியிடும் ‘நம்ம அணி’க்கும் இடையில்தான் என்று கூறப்பட்டுவரும் நிலையில் இரு தரப்பையும் சந்தித்தோம்.

சிறுபடத் தயாரிப்பாளர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் என்ற பெயரைச் சம்பாதித்திருக்கும் ஆர். ராதாகிருஷ்ணன், கடந்த காலங்களில் போட்டியிட்ட தேர்தல்களில் மூன்றுமுறை வெற்றி பெற்றுத் துணைத் தலைவர், பொருளாளர், தற்போது கவுரவச் செயலாளர் எனப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். தற்போது தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

- ராதாகிருஷ்ணன்

முதலில் கேயார், அடுத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் என இருவரது தலைமையில் போட்டியிட்டு வெற்றிபெற்றீர்கள். ஆனால், நீங்கள் நம்பிய இவ்விரு தலைவர்களுக்கு எதிராக அடுத்தடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது ஏன்?

கேயார், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகிய இருவரது தலைமை மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துத்தான் அவர்களைத் தலைவர்களாகத் தேர்தெடுத்தோம். ஆனால், இருவரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. உயர் மருத்துவ சிகிச்சை என்பது இன்று மருத்துவக் காப்பீட்டை நம்பித்தான் இருக்கிறது. இதற்குத் தயாரிப்பாளர்களின் குடும்பங்களும் விதிவிலக்கு கிடையாது.

கேயார் தலைமையிலான அணி வென்றபோது அதில் நான் பொருளாளர். பதவியேற்ற கையோடு கேயார் எதில் கைவைக்கக் கூடாதோ அதில் வைத்தார். ‘பேமிலி ஃப்ளோட்டிங்’ காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு மூன்று உறுப்பினர்கள், நான்கு லட்சம் காப்பீடு பெறலாம் என்று இருந்ததை, கேயார் இரண்டு லட்சம், இரண்டு நபர்கள் என்று குறைத்தார்.

ஆனால், தேர்தல் வாக்குறுதியில் நான்கு லட்சம், ஆறு குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் விதத்தில் காப்பீட்டை மாற்றியமைப்போம் என்று கூறித்தான் வெற்றி பெற்றோம். கேயாரின் இந்த நடவடிக்கை, வாக்களித்த சிறுபடத் தயாரிப்பாளர்களை வேதனை அடையவைத்தது. இதை உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். தலைவரோ பிடிவாதம் காட்டினார். அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடும்படி என்னை வற்புறுத்தினார், நான் மறுத்தேன். செயற்குழுவைக் கூட்டி பொறுப்பிலிருந்து என்னை நீக்கினார்.

நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்தது. நான் மீண்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டதும் வாக்களித்தபடி 4 லட்சம் காப்பீடு, அதற்கு ஆறு குடுப்ப உறுப்பினர்கள் பயன்பெறும்விதமாகத் திட்டத்தை மாற்றியமைத்தோம். அதைத்தான் தற்போதும் நடைமுறைப்படுத்திவருகிறோம்.

அடுத்து எஸ்.ஏ.சி. தலைவராக வந்தபின் அவரைப் பெரிதும் நம்பினோம். பெப்சி உடனான ஊதியப் பேச்சு வார்த்தையில் அவர் திரைப்படத் தொழிலாளர் களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டிருந்தால்கூட வரவேற்றிருப்போம். பெப்சிக்கு எதிராக ஸ்ரைக்கை அறிவித்துவிட்டார். சிறு முதலீட்டுப் படங்களின் படப்பிடிப்புகள் அப்படி அப்படியே நிறுத்தப்பட்டன. ஆனால், அவரது மகன் விஜய் உட்பட பல பெரிய படங்களின் படப்பிடிப்பு மட்டும் வெளிமாநிலங்களில் நடத்தப்பட்டது.

அவர்களைத் தடுத்து நிறுத்த அவர் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. சிறுபடத் தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுப்போம் என்று உறுதிதந்து தலைவராகிவிட்டு அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சுயநலத்துடன் எடுத்தார். இதனால் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக வாக்களித்து அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தார்கள்.

இம்முறை இத்தனை பெரிய போட்டி உருவாக என்ன காரணம்? தயாரிப்பாளர் சங்கத்திடம் இருக்கும் பணம் ஒரு காரணமா?

நிச்சயமாக இல்லை. செயற்குழுவின் முறையான அனுமதியில்லாமல் ஒற்றை ரூபாயைக் கூட நீங்கள் செலவழிக்க முடியாது.

கடந்த 4 ஆண்டுகளில் இருமுறை முக்கியப் பொறுப்புகளை வகித்த நீங்கள் செய்த பணிகள் என்ன?

சிறுபடத் தயாரிப்பாளர்களின் பெரிய பிரச்சினைகளில் முக்கியமானது அவர்களது படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காமல் போவது. இதற்குக் காரணம் பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியாகிவந்த பெரிய நடிகர்களின் படங்கள், ஆண்டு முழுவதும் வந்துகொண்டே இருக்கிறன. இதனால் சிக்கனமாக, அதேநேரம் தரமான தயாரிப்புடன் சிறந்த கதையம்சத்தை நம்பி வெளியாகும் பல சின்னப் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வசூல் ‘பிக்-அப்’ஆகும் சமயத்தில் பெரிய படங்களின் வரவால் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுவிடுகின்றன. இது இரக்கமற்ற செயல். இதை அனுமதிக்க முடியாது என்று முடிவுசெய்து, ஒரு திட்டத்தைத் தீட்டினோம்.

பெரிய நடிகர்களின் படங்களை ஆண்டுக்கு 12 வெளியீட்டுத் தேதிகளில் மட்டுமே ரிலீஸ் செய்வது என்றும் மற்ற தேதிகளை சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஒதுக்குவது என்றும் முடிவெடுத்தோம். இதை விநியோகஸ்தர்கள் சங்கங்கள் அங்கம் வகிக்கும் ஃபெடரேஷனில் வைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஃபெடரேஷன் நிர்வாகிகளும் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு உத்தரவாதம் கொடுத்தார்கள். கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் நிலையில் தேர்தல் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றதும் அதை நடைமுறைப்படுத்துவோம்.

இதுதவிர கடந்த காலத்தில் மால் திரையரங்குகளில் சிறுபடங்களுக்கு ஒரு திரையாவது தர வேண்டும் என்பதைப் போராடிப் பெற்றிருக்கிறோம். இது தொடரும். அதேபோல ஆண்டுக்கு நூறு சிறுபடங்களின் தொலைக்காட்சி உரிமையைச் சங்கமே உரிய நியாயமான விலையைக் கொடுத்து வாங்கி, சங்கம் வழியே அதைத் தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்கவிருக்கிறோம். இதுவும் தீர்வு காணும் இடத்துக்கு வந்துவிட்டது.

அதேபோல் திருட்டு வீடியோ இணையதளங்களை முடக்க கூகுள், மோஸில்லா போன்ற பெரிய தேடல் கருவி நிறுவனங்கள், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசிவருகிறோம். டாரண்ட்களையும் நாங்கள் விடுவதாக இல்லை. மேலும், சிறுபட வெளியீட்டுக்குச் சங்கமே குழு அமைக்கிறது. இந்தக் குழு, வாரத்துக்கு இரு சிறு படங்களை சங்கத்தின் செலவில் வெளியிட்டுக் கண்காணிப்பு செய்ய இருக்கிறது.

நீங்கள் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டே சிறு படத் தயாரிப்பாளர்கள் அணி என்று பிரச்சாரம் செய்வதாக விஷால் தரப்பில் கூறுகிறார்களே?

சிறுபடத் தயாரிப்பாளரோ, பெரிய தயாரிப்பாளரோ எல்லோருமே கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தைத்தான் இங்கே முதலீடு செய்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பாரபட்சமின்றி எல்லாத் தரப்புத் தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். சிறுபடத் தயாரிப்பாளர்கள் மீது எங்களுக்கு அக்கறை அதிகமாக இருப்பதை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால், எங்கள் அணியில் இருதரப்புத் தயாரிப்பாளர்களும் வேட்பாளர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

சங்கத்துக்காக வெளிப்படையாக உழைத்துவரும் தேசிய விருதுபெற்ற சிவசக்தி பாண்டியன், தொடர்ந்து தரமான படங்களைத் தயாரித்தும் வெளியிட்டும், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவருமான தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், எப்போதும் எல்லோரையும் முந்திக்கொண்டு சிறுபடத் தயாரிப்பாளருக்காகப் போராடும் கே. ராஜன் உள்ளிட்ட எங்கள் அணியின் ஒவ்வொரு வேட்பாளரையும் அவர்களது அனுபவங்களையும் சங்கத்துக்கு அவர்கள் செய்த சேவைகளையும் அவர்கள் பார்க்கட்டும். எங்கள் அணியின் முகம் வெளிப்படையானது.

எங்களிடம் எந்த ஒப்பனையும் இல்லை. எங்கள் அணியின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர் டி. சிவா தனித்துப் போட்டியிடுவதை வாபஸ் பெற்றுக்கொண்டு எங்களுக்காக ஆதரவு திரட்டிவருகிறார்.

‘கடந்த பத்து ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் எதுவுமே நடக்கவில்லை’என்ற விஷாலின் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. கடந்த பத்தாண்டுகளாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் யாரெல்லாம் தலைவர்களாக இருந்தார்கள்; மற்ற யாரெல்லாம் என்ன பொறுப்பு வகித்தார்கள், எவ்வளவு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன என்று நண்பர் விஷாலுக்குத் தெரியுமா? கடந்த பத்தாண்டு என்பது இராம. நாராயணன் ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. விஷால் அணியில் போட்டியிடும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ‘பருத்தி வீரன்’ பிரச்சினையில் சிக்கிக்கொண்டபோது இராம. நாராயணன் அவர்களும் எங்கள் அணியில் தற்போது போட்டியிடும் சிவசக்தி பாண்டியன் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு தேடித்தந்தார்கள்.

கடந்த ஆண்டு கார்த்தி நடித்த ஞானவேல் ராஜாவின் ‘கொம்பன்’பிரச்சினைக்குத் தீர்வு தேடித் தந்தோம். அன்று கலைஞர் அரசிடம் திரைப்படங்களுக்கு மானியம் பெற்றுக்கொடுத்தார் இராம. நாராயணன். அதன் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மானியத்தை அம்மாவின் ஆட்சியில் பெற நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். அம்மாவும் ஆணையிட இசைந்த நேரத்தில் அவரது மறைவு. இதுபோல் சங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு அனைத்து நிர்வாகிகளும் உழைத்திருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? விஷாலின் ‘பாயும்புலி’ வெளியாக முடியாத நிலை ஏற்பட்டபோது எங்களது சங்கம் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைக்காவிட்டால் அதை அவர் வெளியிட்டிருக்க முடியாது. அவரது அணியைச் சேர்ந்த பலரது படங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொடுத்திருக்கிறோம். இது தெரிந்துமே அவர் இப்படிக் கேட்பது தயாரிப்பாளர் சங்கத்தை ஏதாவதொரு குறுக்கு வழியில் பிடித்துவிட வேண்டும் என்ற அவரது அவசரத்தைக் காட்டுகிறது. ஆனால், அது நடக்காது. தயாரிப்பாளர்களின் நிலைமை, பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் வலியை அவர்களால் உணர முடியாது. முதலில் விஷால் தொழிற்சங்க மரபுகளை எப்படி மதிப்பது என்று கற்றுக்கொண்டு கேள்விகள் கேட்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x