Published : 02 Sep 2016 11:14 AM
Last Updated : 02 Sep 2016 11:14 AM

‘வாழ்வதற்கான பசி இருக்கிறது’

இது ப்ரூஸ்ட் கேள்விப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு பிரஞ்சு எழுத்தாளர் மர்செல் ப்ரூஸ்ட் (Marcel Proust) தனது ஆளுமையை வெளிப்படுத்தும் பதில்களை அளித்திருக்கிறார். அதிலிருந்து பிரபலங்களிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக இந்தக் கேள்விப் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது.

உங்களுடைய மிகப் பெரிய பயம்?

அதிகாரம் எதுவாக இருந்தாலும் பயத்தின் காரணமாக அதற்கு அடிபணிவது.

உங்களிடம் உங்களுக்குப் பிடித்தமான நற்பண்பு?

நல்லவனாக இருப்பதாகப் பாசாங்கு செய்யாமல் இருப்பது. நான் ஒரு பாவி என்றே அறிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆளுமையின் முக்கியமான அம்சம்?

முரட்டுத் துணிச்சல், முரட்டுத் துணிச்சல், இன்னும் முரட்டுத் துணிச்சல்

உங்களுடைய பிரதானமான குறை?

காட்டுத்தனம், உத்வேகம், திருத்த முடியாதவனாக இருப்பது. சில சமயங்களில் சிலர் சொல்வதுபோல பைத்தியமாகவும் இருப்பது.

எந்தத் தவறை உங்களால் அதிகமாகச் சகித்துக்கொள்ள முடியும்?

மனிதர்களிடம் இயல்பாகவே இருக்கும் பலவீனங்கள்.

எதை நீங்கள் அதிகமாக வெறுக்கிறீர்கள்?

தங்களைத் தாங்களே துறவிகள், தீர்க்கதரிசிகள், சாமியார்கள் என்று அறிவித்துக்கொண்டவர்கள் மற்றவர்களைவிடப் புனிதமானவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் அணுகுமுறை.

உங்களுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம் எது?

என்னுடைய சிற்றன்னை (மாற்றாந்தாய்) உயிரோடு இருந்தபோதே அவருக்கு உரிய நன்றிக்கடனை என்னால் செலுத்த முடியாமல் போனது. அவருடைய மகத்துவத்தை என் வாழ்க்கையின் பின்னாட்களில்தான் புரிந்துகொண்டேன்.

நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் பொருள்?

என் அழகான மகள்கள்: பூஜா, ஷாஹீன், ஆலியா.

உங்களுக்குப் பிடித்த நிறம்?

கருப்பு கருப்புதான்.

நீங்கள் நீங்களாக இல்லாவிட்டால், வேறு யாராக இருக்க விரும்புவீர்கள்?

அப்படியென்றால், நான் இருக்கவே விரும்ப மாட்டேன்.

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

அல்லமா இக்பால், வில்லியம் பிளேக், கைஃபி அஸ்மி.

நீங்கள் மிகவும் மெச்சும் ராணுவ நிகழ்ச்சி?

நம்முடைய ராணுவ வீரர்கள் ஒரு மனிதப் பேரழிவில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையைக் காப்பாற்றுவதைப் பார்ப்பது. இது போன்ற செயல்களில் நம் ராணுவத்தினர் ஈடுபடுவதைப் பார்க்கும்போது என் தொண்டைக்குழி அடைத்துக்கொள்ளும். உயிர்களைக் காப்பவர்களாக அவர்கள் என் கண்களுக்குத் தெரிவார்கள்.

நீங்கள் மிகவும் பாராட்டும் சீர்திருத்தம் எது?

பெண்கள், ஆண்களோடு தோளோடு தோள் நிற்க அனுமதிக்கப்பட்டது.

எந்தத் திறமை உங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

வாயை மூடிக்கொண்டிருப்பது!

வரலாற்றில் எந்த நபரை அதிகமாக வெறுக்கிறீர்கள்?

தனக்கு அழிவேயில்லை, தான் ஒரு கடவுள் என்ற கற்பனையில் இருப்பவர்கள். பலருக்கும் இந்தப் பிரமை இருந்திருக்கிறது...

உங்களுக்குப் பிடித்தமான உணவும் பானமும்?

பருப்பு, ரொட்டி, எலுமிச்சை சாறு

உங்களுடைய தற்போதைய மனநிலை என்ன?

பரவசம், என் தட்டில் இன்னும் அதிக வாழ்க்கை வைக்கப்பட வேண்டுமென்ற பசி, அதே பசியுடன் ஆபத்தான வாழ்க்கையை வாழ்வது.

எப்படி இறக்க விரும்புகிறீர்கள்?

என் பாதையில் ஓடிக்கொண்டேயிருக்கும்போது...

உங்களுக்குப் பிடித்தமான தாரக மந்திரம் எது?

எந்தத் தாரக மந்திரமும் இல்லாமல் இருப்பது.



தமிழில்: என். கௌரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x