Last Updated : 29 Jul, 2016 11:08 AM

 

Published : 29 Jul 2016 11:08 AM
Last Updated : 29 Jul 2016 11:08 AM

வாழ்க்கையை நகலெடுத்த கல்யாண சினிமாக்கள்!

திருமணம் என்னும் அமைப்பு பல திரைப்படங்களின் மையப்புள்ளியாக இருந்துள்ளது. திருமணத்துக்கு முன்னும் பின்னுமான சுவாரசியமான நகைச்சுவையான சம்பவங்களைக் கொண்டதாக அந்தத் திரைப்படங்கள் இருக்கும். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ படமும், மைக்கேல் மதன காமராஜனில் வரும் காமேஸ்வரன் பகுதியும் அற்புதமான உதாரணங்கள்.

ஆனால், அவை முற்றிலும் புனைவாக ஜோடிக்கப்பட்டவை. நிஜத்தில் நடந்த திருமண நிகழ்வுகளால் உந்தப்பட்டு இரண்டு திரைப்படங்கள் எனக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன; உண்மைக் கதை, அற்புதமான கதையமைப்பு, அருமையான கதாபாத்திரங்கள் கூடவே சுவாரசியமான புனைவும் இணைந்த கலவையாக எடுக்கப்பட்டவை அந்தத் திரைப்படங்கள்.

காலத்தால் மறக்க முடியாத வசனம்

திரைக்கதையாசிரியர், நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் எடுத்த ‘அந்த ஏழு நாட்கள்’உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. அந்தப் படத்தின் கதை மிகவும் எளியது. ஒரு மருத்துவர் திருமணமான புதிதில் தனது புது மனைவி, தற்கொலை முயற்சியில் ஈடுபடும்போது அவளைத் தடுத்துக் காரணம் கேட்கிறார். தான் காதலித்தவரைத் திருமணம் செய்துகொள்ளாமல் தனது விருப்பத்துக்கு எதிராக நடந்த திருமணத்தை அந்த மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதனால் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.

தன் மனைவியையும் அவரது காதலனையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் மருத்துவர். காதலராக நடிக்கும் பாக்கியராஜ், ‘எனது காதலி உங்க மனைவியா ஆக முடியும். ஆனா உங்கள் மனைவி ஒருபோதும் எனக்கு மனைவியா ஆக முடியாது’ என்பதுபோல் சொல்வார். காலத்தால் மறக்க முடியாத வசனமாக அது மாறிவிட்டது.

அந்த 7 நாட்களுக்கான தாக்கம்

கே.பாக்யராஜ் என்னிடம் நேரடியாகச் சொன்னது இது. எல்டாம்ஸ் சாலையில் சினிமா இயக்குநராக ஆவதற்காக அவர் முயற்சித்துக்கொண்டிருந்தபோது, பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் திருமணக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார். அவர் கேட்ட கதை செவிவழியாக நிறைய பேர் அறிந்தது.

சந்திரபாபு தனது திருமணத்துக்குப் பிறகான தேன்நிலவு நாட்களில் அவரது புதுமனைவி, தனது முந்தைய காதலை அவரிடம் பகிர்ந்துகொண்டதாகவும், அதையடுத்து அவரது காதலருடன் சந்திரபாபு தனது மனைவியை இணைத்து வைத்ததாகவும் கூறப்படும் கதை அது. இந்தக் கதையின் உந்துதலால், ஒரு கணவன் தனது மனைவியை அவரது காதலனுடன் இணைத்துவைக்க முயலும் கதையை உருவாக்கினார். ஆனால், உண்மைக் கதையோ கொஞ்சம் வேறுபட்டது.

என்ன நடந்தது?

சந்திரபாபு தனக்கு மனைவியாக ஆகப் போகிறவரை, கொடைக்கானலுக்குப் படப்பிடிப்புக்குப் போகும் வழியில் மதுரையில் தற்செயலாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்டதும் காதல் அது. அவரது மனைவி ஷீலா டயான், மதுரையைச் சேர்ந்த வர்த்தகர் ஜி.ஆர். ராமமூர்த்திக்கும் இங்கிலாந்திலுள்ள சசக்ஸைச் சேர்ந்த எய்லீன் எலனுக்கும் பிறந்தவர்.

1958, மே மாதம் 29-ம் தேதி சென்னையிலுள்ள சாந்தோம் தேவாலயத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமண விழாவில் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பிறகு சந்திரபாபுவின் வீட்டில் நடந்த வரவேற்பு விழாவில் அவர்களது குடும்ப நண்பரும் மாநில அமைச்சருமான லூர்தம்மாள் சைமன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிகள் பற்றி 1970-களில் ஒரு திரைப் பத்திரிகையில் எழுதிய சந்திரபாபு கூறியுள்ளார். அவரது சகோதரர்கள், நண்பர்களிடமும் நான் இது குறித்து விசாரித்துள்ளேன்.

வாழ்க்கையை நகலெடுத்த கல்யாண சினிமாக்கள்!

தேன்நிலவு நாட்களில் சந்திரபாபு தனது மனைவியின் மீது அன்பையும் பிரியத்தையும் பொழிந்துள்ளார். சிறிது நாட்கள் எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சந்திரபாபு, தனது மனைவி மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதைப் பார்த்துள்ளார். அதற்கான காரணத்தை அறிய சந்திரபாபு கடினமாக முயன்றார். கடைசியில் அவர் மனைவி உண்மையைக் கூறியுள்ளார். “நீங்கள் என்னை ஆழமாக நேசிக்கும் அருமையான மனிதர். வழக்கமான சினிமாக்காரர்களைப் போல நீங்களும் குடிப்பவராகவும் விசுவாசமற்றவராகவும் இருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன்” என்று பேச ஆரம்பித்திருக்கிறார். “ஒரு நல்ல கணவராக இருப்பதில் என்ன தவறு?” என்று சந்திரபாபு உடனடியாக அவரிடம் கேட்டுள்ளார். அப்போதுதான் அவர், தனது இதயம் இன்னொருவரிடம் இருப்பதாகவும், அவருடன் தனது உறவைத் தொடரலாம் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் சொல்லியுள்ளார். தொடக்கத்தில் சந்திரபாபு, ஷீலாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அதை அநாகரிகம் என்று நினைத்தார்., அதனால் அவர்களுக்குள் பிரச்சினை வெடித்தாகத் தெரியவருகிறது.

சகோதர சாட்சியம்

ஒரு கட்டத்தில் ஷீலா, மேலதிகமாக மன அழுத்தத்துக்குள்ளாகி, தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கிறார். இயக்குநர் கே. சுப்ரமணியன்தான் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, சிகிச்சைக்குப் பிறகு தனது சகோதரி பத்மா சுப்ரமணியத்துடன் தங்கவைத்துள்ளார். ஷீலாவின் பெற்றோர் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆர்.,சிவாஜியின் முன்னிலையில் ஒரு தீர்வுக்கு வந்தனர். “திருமணத்துக்கு வந்த வெள்ளிப் பரிசுகள் உட்பட எல்லாவற்றையும் ஷீலாவுக்குக் கொடுப்பதென்று பெருந்தன்மையாக முடிவுசெய்யப்பட்டது. அவரது தந்தைக்கு இருந்த வியாபாரச் சிக்கல்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்து எனது சகோதரர் உதவினார். ஆனாலும் அவர்கள் பக்கத்தில் அதிகமாகத்தான் கேட்கப்பட்டது. அதுவும் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம்” என்கிறார் சந்திரபாபுவின் சகோதரர் ஜே.பி.ஜவஹர். ஷீலா அதன் பின்னர் இங்கிலாந்து சென்றுவிட்டார்.

நண்பனின் கதை

இரண்டாவது திரைப்படம் பாலாஜி தரணீதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட விபத்தால், நாயகன் தற்காலிக நினைவிழப்புக்கு உள்ளாவதையும் அதைச் சமாளிக்க அவனது மூன்று நண்பர்களும் திருமண நிகழ்வில் படும் அவஸ்தைகளும்தான் கதை. இயக்குநர் பாலாஜியின் நண்பரும் ஒளிப்பதிவாளருமான சி. பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை அது. இந்தச் சம்பவத்தின்போது உடனிருந்த இன்னொரு நண்பரான பக்ஸ், அவராகவே படத்திலும் நடித்திருந்தார்.

ஒரு குறுகிய பட்ஜெட் திரைப்படத்துக்காக சுவாரசியமான கதையைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒளிப்பதிவாளர் பிரேமுக்கு ஏற்பட்ட அனுபவம் ஞாபகத்துக்கு வந்ததாகவும், டைம்லைனை மட்டும் திரைக்கதைக்கேற்ப மாற்றிப் படத்தை எடுத்ததாகவும் பாலாஜி கூறியிருக்கிறார். படம் பார்க்கும் பார்வையாளர்களைப் பொறுத்தவரை இறுதி டைட்டில் காட்சியிலேயே இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற தகவல் வெளியானது. பிரேமின் பெற்றோருக்கே படத்தைப் பார்த்த பிறகுதான் தங்கள் மகனுக்கு நேர்ந்த விஷயம் தெரிந்தது.

ஒரு உண்மைச் சம்பவம், திறன்வாய்ந்த எழுத்தாளரின் கையில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் திரைக்கதையாக மாற முடியும். திருமண வீடியோக்கள் போர் அடிக்கும் என்று யார் சொல்ல முடியும்? ஒரு பிரமாதமான திரைப்படக் கதைக்கு அந்த வீடியோவிலும் ஒரு கரு இருக்கலாம்.

தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x