Published : 12 Aug 2016 11:03 AM
Last Updated : 12 Aug 2016 11:03 AM
மலையாளப் பட உலகை மலைக்கவைத்த படம்..!
அநுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தின் வெற்றி மலையாளப் படவுலகை உலுக்கியிருக்கிறது. உச்ச நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகன், கதைதான். நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் வசூல் மற்ற படங்களைப் பின்தள்ளி முந்திக்கொண்டிருக்கிறது. இதுவரை பதினோரு கோடி வசூல் செய்திருக்கிறது. பிஜு மேனன், ஆசிப் அலி நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் புதிதாக அறிமுகமாகியிருக்கும் காலித் ரஹ்மான். இந்தப் படத்தில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இளைஞரான பிஜு மேனன், இன்னொரு இளைஞரான ஆசிப் அலிக்குத் தந்தையாக நடித்திருப்பதுதான்...!
மலையாளம் தெலுங்குக் கூட்டணி..!
மலையாளமும் தெலுங்கும் இப்போதெல்லாம் நேரடியாகக் கூட்டணி அமைக்க ஆரம்பித்துவிட்டன. மலையாள நடிகர், நடிகைகள் ஆரம்ப காலங்களில் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். இப்போது தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மோகன்லாலைத் தொடர்ந்து ஜெயராமும் தெலுங்கில் நுழைகிறார். ‘பாக்மதி’ தெலுங்குப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘பாக்மதி’யின் நாயகி அனுஷ்கா ஷெட்டி. தெலுங்குப் படங்களில் நடிக்க பலமுறை அழைப்பு வந்தது ஆனால் எனக்குத் தெரியாத மொழியில் நடிக்க விருப்பமில்லை என்பதால் மறுத்து வந்தேன், ஆனால் ‘பாக்மதி’ பட இயக்குநர் அசோக் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஓகே சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் ஜெயராம்.
மோகன்லாலும் ஜெயராமும் நேரடியாகத் தெலுங்குப் படங்களில் நடிப்பதாலோ என்னவோ மலையாளப் படவுலகமும் தெலுங்கு ஹீரோக்களை நேரடியாக இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டது. மேஜர் ரவி மலையாளத்தில் பல ராணுவப் படங்களைத் தயாரித்து இயக்கியிருப்பவர். ராணுவப் பட வரிசையில் முதலாவதாக வந்த ‘கீர்த்தி சக்ரா’ படம் வெளியாகிப் பத்தாண்டு ஆனதை மோகன்லாலுடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார் இவர். பாகிஸ்தான் - இந்தியா போர் பின்னணியில் இவர் தயாரிக்கும் அடுத்த படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்க தெலுங்கு நடிகர் ராணா டக்குபதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். படப்பிடிப்பு இந்தியாவிலும் உகாண்டாவிலும் நடக்குமாம். இந்தப் படம் மலையாளம், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது.
சினேகா மீண்டும் மலையாளத்தில் ..! சினேகா மீண்டும் மலையாளத்தில் ..! சினேகா மீண்டும் மலையாளத்தில் ..! சினேகா மீண்டும் மலையாளத்தில் ..!
தமிழில் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் மம்மூட்டி நடிக்கிறாராம். அதே சமயத்தில் நடிகை சினேகா மலையாளத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மம்மூட்டியுடன் ஜோடி சேர்கிறார். இந்த மாதக் கடைசியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சினேகா திருமணம் ஆவதற்கு முன் மம்மூட்டியுடன் ‘துருப்பு குலான்’, ‘பிரமாணி’ படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். குழந்தையைக் கவனிக்க வேண்டுமே என்று ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய சினேகா, கதையைக் கேட்டதும் நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.
மலையாள வடிவேலு தமிழில் மலையாள வடிவேலு தமிழில்
மலையாளத்தின் முன்னணி நகைச்சுவை நாயகன் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் மலையாள சினிமாவின் வடிவேலு என்றும்கூடப் புகழப்படுவதுண்டு. மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்மூட்டியின் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘ராஜமாணிக்கம்’ படத்தில் அவருக்கு திருவனந்தபுரம் கிராமப்புற வசனம் சொல்லிக்கொடுக்கும் உதவி வசனகர்த்தாவாகப் பணிபுரிந்துள்ளார்.
அதன் பிறகு காமெடியில் கொடிகட்டிப் பறந்தார். ‘பேரறியாதவர்’ என்னும் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். ‘லேடீஸ் & ஜெண்டில்மென்’ என்னும் மோகன்லாலின் படத்தின் மூலம்தான் சுராஜ் நடிகராக அறிமுகமாகிறார். இப்போது 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுராஜ், தமிழ்த் திரையிலும் நடிக்கவுள்ளார். இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகிவரும் ‘பேரன்பு’ என்னும் படத்தில் மம்மூட்டியின் உதவியாளராக நடிக்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT